மாபெரும் துரோகங்கள்-மூன்றாம் டாரியஸ்

இலக்கியம் உலகம்
alexander_the_great

 

டாரியஸ். இவர் ஆசியாவின் மிகப் பெரிய சாம்ராஜ்ஜியங்களில் ஒன்றான அக்டமெனிட் சாம்ராஜ்ஜியத்தின் பேரரசர். அரச குடும்பத்தில் நல்ல கல்வியறிவும், புத்திக் கூர்மையும் கொண்ட டாரியஸ் மிகவும் பொறுமைசாலி. திறமையான போர்த் தளபதியாக விளங்கிய அக்டமெனிட் சாம்ராஜ்ஜியம் கடும் அரசியல் குழப்பங்களால் தத்தளித்தபோது, அதைத் தனது அசாத்திய திறமையின் காரணமாக, தனது கட்டுப்பாட்டில் வைத்த பெருமை டாரியஸைச் சேறும். இருப்பினும், சரியான நபர்களை அடையாளம் காணத் தெரியாத டாரியஸ், ஒரு துரோகத்தின் காரணமாக வீழ்ந்தார். இப்போது அவர் வீழ்ந்த கதையைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

டாரியஸ், ஆசியாவின் பாரசீக பகுதியில் அக்டமெனிட் சாம்ராஜ்ஜியத்தின் அரச குடும்பத்தில் கி.மு 380 வாக்கில் பிறந்தார். இவரின் இயற்பெயர் அர்தஷாடா. அர்தஷாடாவின் தந்தை அர்சாம்ஸ் சாம்ராஜ்ஜியத்தை ஆட்சி செய்து வந்த பேரரசர் மூன்றாம் அர்தாஜர்சஸரின் நெருங்கிய உறவினர். அதன் காரணமாக அர்சாம்ஸ், அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பில் இருந்தார். அரச குடும்பத்தில் பிறந்த காரணத்தால் அர்தஷாடாவுக்கு எல்லா விதமான சௌகர்யங்களும் வந்து சேர்ந்தன.

DArius 3

 

அதே நேரத்தில் அரச நிர்வாகம் மற்றும் இராணுவப் பயிற்சி போன்றவையும் அர்தஷாடாவுக்கு வழங்கப்பட்டன. இளம் வயதில் இவை அனைத்தையும் பெற்றபோது அர்தஷாடாவுக்கு இராணுவத்தில் சேர்வதில் அதிக ஆர்வம் இருந்தது. உடனே அவருக்கு இராணுவத்தில் ஒரு மரியாதையான பெறுப்பு கொடுக்கப்பட்டது. பேரரசர் மூன்றாம் அர்தாஜர்சஸர் ஆட்சி செய்து வந்த எகிப்து நாட்டில் குழப்பங்கள் தோன்ற ஆரம்பித்தன. எகிப்து நாட்டின் மன்னர் அக்டமெனிட், சாம்ராஜ்ஜியத்துக்கு கட்டுப்பாடாமல் தொடர்ந்து கப்பம் கட்ட மறுத்தார். உடனே பேரரசர் அர்தாஜர்சஸர் ஒரு படையை அனுப்பினார். ஆயினும் அந்தப் படையைப் பார்த்து எகிப்து மன்னர் பயப்படவில்லை.

இந்நிலையில் மீண்டும் ஒரு பெரிய படை எகிப்துக்கு சென்று கலகத்தை அடக்கியது.  இந்தப் படையில் அர்தஷாடாவும் இடம்பெற்றார். அதன் பிறகு அக்ட்மெனிட் சாம்ராஜ்ஜியத்தின் பல்வேறு பகுதியில் ஏற்படும் கலகங்களை அடக்கும் பொறுப்பு அவருக்கு கொடுக்கப்பட்டது. பல வருடங்கள் இப்படியே அவருக்கு கழிந்து போனது. இருப்பினும், இதன் மூலமாக அக்ட்மெனிட் சாம்ராஜ்ஜியத்தில் உள்ள எல்லா மாகாண கவர்னர்கள் மற்றும் படைத்தளபதிகளுடன் அர்தஷாடாவுக்கு நல்ல நட்பு ஏற்பட்டது. அதுதவிர பேரரசர் அர்தாஜர்சஸர், இளவரசர்கள், ராஜதந்திரி பகோஸ் போன்றவர்களுடன் நெருங்கிய சகா ஆனார்.

அப்படிப்பட்ட அந்த சமயத்தில் அக்டமெனிட் சாம்ராஜ்ஜியத்தில் அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டன. பேரரசர் மூன்றாம் அர்தாஜர்சஸர் மற்றும் அவரது முக்கிய ராஜதந்திரியாக விளங்கிய பகோஸுக்கு இடையே பெரும் பிரச்னை ஏற்பட்டது. இந்நிலையில் எவரும் எதிர்பார்க்காத சந்தர்ப்பத்தில் பகோஸைக் கொல்ல அர்தாஜர்சஸர் ஆணையிட்டார். ஆனால், பகோஸ் முந்திக் கொண்டு பேரரசர் மற்றும் இளவரசர்களை மர்மமான முறையில் கொன்றார். ஆனால், அர்சஸ் என்கிற இளவரசனைக் கொல்லாமல், அவனை புதிய பேரரசராக பகோஸ் நியமித்தார். இதன் மூலமாக பகோஸ் சாம்ராஜ்ஜியத்திலேயே மிகவும் சக்தி வாய்ந்த நபராக விளங்கினார். அவரது கைப்பொம்மையாக பேரரசர் அர்சஸ் விளங்கினார்.

ஆனால், இருவருக்குகிடையே மீண்டும் மோதல் வெடித்தது. பகோஸ் யாருக்கும் தெரியாமல் பேரரசர் அர்சஸைக் கொன்றார். இதனால் சாம்ராஜ்ஜியத்தில் மீண்டும் குழப்பம் வெடித்தது. அரச குடும்பத்தினர் அனைவரும் ராஜதந்திரி பகோஸுக்கு எதிராக ஒன்று கூடினர். இதனால் பகோஸ் பயந்து போனார். உடனடியாக அர்தஷாடாவை சந்தித்தார். அவரை பேரரசராக்கப் போவதாக பகோஸ் உறுதியளித்தார். ஆனால், அர்தஷாடாவுக்கு பகோஸ் மீது சந்தேகம் இருந்தது. அதனால் வேண்டாம் என்று அர்தஷாடா மறுத்துவிட்டார். பலமுறை பகோஸ் உறுதியளித்த பின்பு, அர்தஷாடா பேரரசர் பதவியை ஏற்றுக் கொண்டார்.

Battles

 

அர்தஷாடா அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் மற்ற அரச குடும்பத்து பெரியவர்கள் மற்றும் உறவினர்கள் பகோஸை மன்னித்தனர். அர்தஷாடா தனது பெயரை புகழ்பெற்ற டாரியஸ் மன்னரின் நினைவாக டாரியஸ் என்று மாற்றிக் கொண்டார். அன்று முதல் சாம்ராஜ்ஜியத்தில் பேரரசர் அர்தஷாடா என்று அழைக்காமல் பேரரசர் டாரியஸ் (மூன்றாம்) என்று அழைக்கப்படலானார். தனது 46வது வயதில் பேரரசர் ஆவோம் என்று அவர் கனவில் கூட நினைத்தது இல்லை. என்றாலும், பிரச்னைகள் நாளுக்கு நாள் அதிகரித்தன. மக்கள் குறைதீர்ப்பு பிரச்னைகளை கையாள முடியாமல் டாரியஸ் திக்குமுக்காடிப் போனார். இவற்றை ஒரு விதமாக சமாளித்த போது டாரியஸுக்கு உளவாளிகள் மூலமாக ஒரு ரகசிய தகவல் வந்தது. அது, என்னவென்றால் ராஜதந்திரி பகோஸ் பேரரசர் டாரியஸை கொல்லத் திட்டமிட்டிருப்பதாக அந்தத் தகவல் சொன்னது.

ஆரம்பத்தில் இதை கொஞ்சம் அலட்சியம் செய்தாலும், ஒரு கட்டத்திற்குமேல் டாரியஸுக்கு தூக்கம் வரவில்லை. அதிரடியாக காய்களை நகர்த்தி கையும் களவுமாக ராஜதந்திரி பகோஸை பிடித்தார். பகோஸ் கையில் விஷத்தை வைத்து தற்கொலை செய்து கொள்ளுமாறு ஆணையிட்டார். வேறு வழியில்லாமல் பகோஸ் தற்கொலை செய்து கொண்டார்.

அப்போதுதான் பேரரசர் டாரியஸுக்கு நிம்மதி வந்தது. நாட்டுப் பிரச்னைகளில் கவனம் செலுத்தினார். இதுவரையில் எல்லைப் பகுதியை பாதுகாத்தல், கப்பம் வசூலித்தல், போரிடுதல் என்று 30 வருடங்களை செலவிட்ட டாரியஸுக்கு உள்நாட்டு பிரச்னைகள் தலைவலியை ஏற்படுத்தின. ஒரு பக்கம் அரசு நிர்வாகம், மறுபக்கம் நிதிப் பற்றாக்குறை என்று டாரியஸ் திக்குமுக்காடிப் போனார்.

அரசுத் துறையில் திறமையானவர்களை நியமிப்பதில் ஏகப்பட்ட குழப்பங்கள் இருப்பதைக் கவனித்தார். அவற்றைக் களைவதே பிரச்னைக்கு தீர்வு என்று முடிவுக்கு வந்தார். இப்படி 2 வருடங்கள் கடந்து விட்டன. கிமு 334ஆம் ஆண்டு ஐரோப்பாவில் இருந்து ஒரு மாபெரும் அச்சுறுத்தல் வந்தது. கிரேக்கத்தில் இருந்து மாவீரர் அலெக்ஸாண்டர் உலகத்தையே கைபெற்றும் லட்சியத்துடன் கிளம்பி இருந்தார். மாவீரர் அலெக்ஸாண்டர் உலகத்தை கைபற்றும் லட்சியத்தின் முதல் படியாக ஆசியாவின் பாரசீகத்தை ஆண்டு வரும் அக்டமெனிட் சாம்ராஜ்ஜியத்தை நோக்கி போரிட வந்து கொண்டிருப்பதாக பேரரசர் டாரியஸுக்கு தகவல் எட்டியது.

ஆனால், டாரியஸ் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அக்டமெனிட் இராணுவப்படைத் தளபதிகள் சிலரை ஒரு பெரிய படையுடன் அனுப்பி அலெக்ஸாண்டரை தோற்கடிக்குமாறு கூறிவிட்டார். துருக்கி நாட்டுக்கு அருகே கிரானியஸ் எனும் இடத்தில் இருபடைகளும் கடுமையாக மோதிக் கொண்டனர். இறுதியில் அலெக்ஸாண்டர் படைகள் ஜெயித்தன. பெரும் பகுதி அலெக்ஸாண்டர் கைக்கு வந்தது. இருப்பினும் டாரியஸ் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. ஒவ்வொரு முறை அலெக்ஸாண்டர் முன்னேறி வரும் சூழ்நிலையில் இரண்டு மடங்கு படையை அனுப்பிவைத்தார்.

ஆனால், படைகள் தொடர்ந்து தோற்பதை நினைத்து பேரரசர் டாரியஸ் அதிர்ச்சியடைந்தார். இறுதியாக தானே சுயமாக களத்தில் இறங்க முடிவு செய்தார். கி.மு 333ஆம் ஆண்டு துருக்கிக்கு அருகே இருக்கும் ஐசஸ் எனும் இடத்தில் 1 லட்சம் படைகளுடன் பேரரசர் டாரியஸ், மாவீரர் அலெக்ஸாண்டருடன் மோதினார். பல்லாயிரக்கணக்கான வீரர்கள் மாண்டனர். இறுதியில் அலெக்ஸாண்டருக்கே வெற்றி கிடைத்தது. அங்கிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று டாரியஸ் தலைநகருக்கு தப்பி வந்தார். போர்க்களத்தில் தான் செய்த தவறுகளை பற்றி டாரியஸ் தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தார்.

இந்நிலையில் சில மாதங்கள் கழித்து அக்டமெனிட் தலைநகரின் மீது அலெக்ஸாண்டர் தாக்குதல் நடத்துவார் என்று டாரியஸ் உறுதியாக நம்பினார். அதனால் புதிய படை ஒன்றை திரட்டும் முயற்சியில் டாரியஸ்  ஈடுபட்டார். கி.மு 331ஆம் ஆண்டு கவுகமேலா எனும் இடத்தில் அலெக்ஸாண்டரின் படைகளும், டாரியஸுடைய படைகளும் மோதிக் கொண்டன. பயங்கரமான இந்த போரில் டாரியசுடைய படைகள் தோற்றனர். ஆயிரக்கணக்க்கான வீரர்கள் கொல்லப்பட்டனர். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் போரில் பாரசீகம் முழுவதும் அலெக்ஸாண்டரின் கட்டுப்பாட்டுக்கு வரும் சூழ்நிலை உருவானது. ஆயினும் வழக்கம் போல போர்களத்தில் இருந்து தப்பி ஓடுமாறு டாரியஸ் உடைய தளபதிகள் அறிவுரை வழங்கினர். அவர்களது திட்டத்தின்படி மீண்டும் ஒரு புதிய படையை திரட்டி அலெக்ஸாண்டரை வெல்ல முடியும் என்று டாரியஸிடம் கூறி இருந்தனர். ஒரு ரகசிய குகையில் டாரியஸ் ஒளிந்து கொண்டார்.

பாரசீகத்தைக் கைப்பற்றிய அலெக்ஸாண்டர், தன்னை ‘பாரசீகத்தின் பேரரசன்’ என்று அழைக்குமாறு டாரியஸிடம் கோரிக்கை வைத்தார். ஆனால், அலெக்ஸாண்டரின் கோரிக்கையை டாரியஸ் நிராகரித்தார்.

இந்நிலையில், ஒரு நாள் அலெக்ஸாண்டருக்கு ஒரு செய்தி வந்தது. அந்தச் செய்தியில் ஒரு குகையில் டாரியஸ் மற்றும் அவரது மெய்க்காப்பளர்கள் இறந்து கிடப்பதாக அந்த தகவல் சொன்னது. உடனே அலெக்ஸாண்டர் ஒரு படையை அனுப்பி, அந்த உடல்களை எடுத்து வருமாறு கூறினார். அந்த உடல்கள் பாரசீக தலைநகருக்கு எடுத்து வரப்பட்டன. அங்கிருந்த அரச குடும்பத்தினர் இறந்தவர் டாரியஸ் என்று உறுதிபடுத்தினர். டாரியஸுடைய உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. அப்போதுதான் அங்கிருந்த டாரியஸுக்கு நடந்த துரோகம் பலருக்கு தெரிந்தது.

டாரியஸின் நெருங்கிய நண்பரும் தளபதியுமான பெசுசஸ் என்பவர் செய்த சதி புரிந்தது. போர்களத்தை விட்டு டாரியஸ் தப்பிச் செல்ல யோசனை கொடுத்தவன் தளபதி பெசுசஸ். அதே நேரத்தில் அலெக்ஸாண்டரிடம் டாரியஸ் இருக்கும் இடத்தை சொல்ல முயற்சித்தான். ஆயினும், அந்தத் தகவல் டாரியஸுக்கு தெரிந்துவிட்டது. இதனால், தளபதி பெசுசஸ், பேரரசர் டாரியஸைக் கொன்றுவிட்டான்.

இதில் இருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டியது விஷயங்கள் நிறைய இருக்கின்றன. பேரரசர் டாரியஸ் பேரரசர் பதவிக்கு ஆசைப்பட்டதே முதல் தவறு. எப்போதுமே பெரிய பதவிகளோடு பெரிய பொறுப்புகள் மட்டுமல்லாது, பெரிய ஆபத்துகளும் சேர்ந்து வரும். அவற்றை மறந்து எப்படியும் சமாளித்த விடலாம் என்று டாரியஸ் நினைத்தார்.

இரண்டாவதாக இராணுவம் படை பலம் போன்றவற்றை தெரிந்து வைத்த அளவுக்கு டாரியஸ் நிர்வாகம், பொருளாதாரம் போன்ற விஷயங்களை தெரிந்து வைத்திருக்கவில்லை.

மூன்றாவதாக பேரரசர் பதவியை பெறத் தெரிந்த டாரியஸுக்கு அந்த பதவியை தக்க வைத்துக் கொள்ளும் திறமை இல்லை.

 

கிருஷ்ணா