புதையல் புத்தகம் – தமிழ்க்குமரி ச.து.சு.யோகியார் – சா.கந்தசாமி

இலக்கியம் கட்டுரைகள்
ச.து.சு.யோகியார்

 

சின்னஞ் சிறு குழந்தை

சிங்காரப் பெண் சிறுமி

என் நெஞ்சு அமுதூற்றம்

இனிமை எங்கு போனது

 

பூப்போலக் கண்கள்

பூப்போல புன்சிரிப்பு

பூப்போலக் கைவிரல்கள்

பூப்போலப் பாதங்கள்

 

பூப்போல கன்னம்

புதுமின்போல் வளையும் உடல்

பார்ப்போர் செவிக்குத் தேன்

பாய்ச்சும் குதலைமொழி

 

கண்மணிராஜம் என்ற தன் சின்னஞ்சிறுமகள் சிறுவயதில் இறந்துபோன துக்கம் தாள முடியாமல் நீண்ட கவிதை எழுதியவர் ச.து.சு.யோகியார். அவர் துக்கம் சாவு வழியானது. எல்லா வீடுகளிலும் சாவு நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. அதாவது, சாவு என்பது இல்லாத வீடுகளே இல்லை. பிறப்பு என்பது உண்டென்றால் இறப்பும் உண்டு. ஆனால், சாவு எப்போது எந்த வயதில் நேர்கிறது என்பதைப் பொறுத்து சிலர் கணக்கிடுகிறார்கள். ஆனால், சாவிற்கு வயதில்லை.

சின்ன வயது சாவிற்கு அதிகமான துக்கமென்றோ பெரிய வயது சாவிற்குக் குறைவான துக்கம் என்றோ சொல்ல முடியாது. சாவு என்பதே துக்கமானதுதான். அது இருந்த மனிதனை இல்லாமல் அடித்து விடுகிறது. அந்த மனிதனை, மனுஷியை இனி காண முடியாது. அது மகத்தான துக்கம். துக்கங்களுக்கு எல்லாம் தலையானது. எனவேதான், புத்தர் ‘பிறப்பே துக்கம்’ என்றார். ‘பிறப்பு என்பதே இறப்பிற்குக் காரணமாகிறது. எனவே, பிறப்பை ஒழிக்க வேண்டும், துக்கத்தில் இருந்து விடுபட அதுதான் மார்க்கம்’ என்றார். ஆனால், உயிர்கள் பிறந்து கொண்டும் இறந்து கொண்டும் இருக்கின்றன. வாழ்க்கையில் துக்கம் இருக்கிறது.

கவிஞர்கள், நாடகாசிரியர்கள், காவிய கர்த்தாக்கள், இசைவாணர்கள் நெடுங்காலமாக துக்ககரமான கவிதைகள் நாடகங்கள், காப்பியங்கள் எழுதி வருகிறார்கள். அவை நடிக்கப்பட்டும், இசைக்கப்பட்டும் பெரும் புகழ் பெற்றிருக்கின்றன. அதனால் தான் இலக்கியம் அனைத்தும் சோகமுடைத்து என்று சொல்லப் பட்டு வருகிறது.

sa. kanthasamy-சா.கந்தசாமி

துக்கத்தையும், துன்பத்தையும் பிரதான அம்சமாகக் கொண்ட நாடகங்கள், துன்பவியல் நாடகம் என்று ஒரு துறையாகவே பண்டைய கிரேக்க நாட்டில் கொண்டாடப்பட்டது. துக்கம், துன்பம், துயரம் என்பது எத்தனை தான் மனத்திற்கு வருத்தமளித்தாலும், அது மனிதர்கள் மனத்திற்குப் பிடித்தமானதாகவே இருக்கிறது. கசப்பும், கனிந்துருகளும் மறுபடியும் மறுபடியும் படிக்கவும், பார்க்கவும், கேட்கவும் வைக்கிறது.

உலகத்தின் மகத்தான இலக்கியம் என்று சொல்லப்பட்டு இருப்பதெல்லாம் துக்ககரமான சோகமான படைப்புக்கள்தான். அது பழைய சரித்திரம் இல்லை, புது சரித்திரமும் அதுதான். ஓர் எழுத்து, படைப்பு வழியாகத் தன் சொந்த துக்கத்தை ஆற்றிக் கொள்ள முடிகிறது. அது தான் படைப்பு என்பதின் விளைவு. ஒருமையில் இருந்து பன்மை கொள்கிறது. அது தான் முக்கியம்.

துக்கமும், துக்க நிவர்த்தியும் மனித வாழ்க்கையில் ஓரிழையாகவே இருக்கிறது. அது கவிதையில் நிரந்தரமாகிறது. அது வாசிக்கப்படும்போது சொல்லப்பட்டதின் வழியாகத் தன் துயரத்தின் ஆழத்தை அறியவும், ஆறிக்கொள்ளவும் ஒவ்வொருவருக்கும் சாத்தியமாகிறது. அதன் காரணமாகவே துன்பம், துக்கம் மனித மனத்திற்கு இதமாக இருக்கிறது.

கண்மணி ராஜம் என்றும், துக்ககரமான கவிதைக்காகவே சிறப்பான கவிஞர் என்றும் அறியப்படும் சங்கரி துரைசாமி ஐயர் சுப்பிரமணியம் என்னும் ச.து.சு., ஒரு யோகியாரைப் போலவே வந்தார். எனவே, யோகியார் என்று அழைக்கப்பட்டார். அவர் பெயரோடு யோகியார் என்பதும் சேர்ந்து போக, ச.து.சு.யோகியார் என்பது அவர் பெயராகி விட்டது.

இவர் சேலம் மாவட்டத்தில் 1904 ஆம் ஆண்டில் பிறந்தார். இளம் வயதிலேயே தந்தையை இழந்து விட்டார். தமிழ், ஆங்கிலம் படித்தார். படிப்பில் அக்கறையும் ஈடுபாடும் இருந்தது. பள்ளிப் படிப்பு முடிந்தது. நல்ல உடல் வளமும், சுறு சுறுப்பும் கொண்டிருந்தார். அரசாங்கத்தில் போலிஸ் வேலை கிடைத்தது. உதக மண்டலத்தில் போலிஸ் வேலை பார்த்தார். திருமணம் ஆகிவிட்டது. நாட்டில் சுதந்திர போராட்டம் திவீரமாக நடைபெற்று வந்தது. படிப்பும், சுய சிந்தனையும் கொண்ட அவர் கவிதைகள், கட்டுரைகள் எழுத ஆரம்பித்தார். போலிஸ் வேலையை விட்டுவிட்டு சத்யாகிரகப் போராட்டத்தில் கலந்து கொண்டார். 1932 ஆம் ஆண்டில் சிறைக்குள் தள்ளப்பட்டார். இளம் வயதில் இருந்தே அவருக்கு யோகமார்க்கத்தில் அதிகமான ஈடுபாடு இருந்தது. விடுதலையாகி வெளியில் வந்ததும், பல யோகியார்களோடு பழகி யோக முறைகளைக் கற்றுக் கொண்டார். குறிப்பாக குண்டலியோகத்தில் நல்ல பயிற்சி பெற்றிருந்தார்.

இந்திய வாழ்க்கை முறையில் கவிஞர்களுக்கும், யோகிகளுக்கும் அதிகமான வேறுபாடு கிடையாது. கவிஞர்கள் யோகிகளாகவும், யோகிகள் கவிஞர்களாகவும் காலம் காலமாக வாழ்ந்து வருகிறார்கள். அதன் தொடர்ச்சிதான் ச.து. சுப்பிரமணிய யோகியார். அவருக்கு ஆழ்ந்த இலக்கியப் படிப்பும் தமிழ் இலக்கண அறிவும் இருந்தது. கம்பனை அவர் அதிகம் படித்திருந்தார். அதோடு உலக சரித்திரம், தர்க்கம் எல்லாம் கற்றிருந்தார். கவிதை என்பது அவருக்கு தர்க்க நியாயமாக இருந்தது. வெளியில் இருந்து அதனை அவர் பெறவில்லை. தன்னளவில் யோசித்து முடிவு என்பதை தீர்மானித்துக் கொண்டார். பண்டைய இலக்கியங்களிலும், வரலாற்றிலும் வஞ்சிக்கப்பட்டு, மாறாத துயரத்திற்குள்ளாகியுள்ள பெண்களின் குரலாக எழுத ஆரம்பித்தார். கருத்தும், வளமான சொல்லாட்சியும், சொல்லிய பாணியும் அவர் கவிதைகள் மீது கவனம் கொள்ள வைத்தது. ராமயணத்து அகல்யா, பைபிள் மேரி மக்தலோனா, சிலப்பதிகாரத்து கண்ணகி எல்லாம் அவர் கவிதைகளில் சிறப்பிடம் பெற்றார்கள். ஆனால், அவர்களின் பழங்கதையை பழம் பெருமையைத் திருப்பிச் சொல்லும் விதமாக அவர் ஒன்றும் சொல்லவில்லை.

ஒரு பெண்ணாக என்ன கேட்க வேண்டுமோ அதையே எழுதினார். அது ஆண் கேள்வியோ, பெண் கேள்வியோ கிடையாது. எல்லோரும் கேட்கும் கேள்வி. அதனால் மாமுனிவன் கோதமன், அகல்யாவால் மீட்சியுற்றான். வாழ்க்கை என்பதில் துக்கம் இருக்கிறது என்பதால், அதில் மூழ்கி இருப்பதில்லை. எல்லாம் விலகும். துக்கத்திற்கு இடையில் இன்பம் உண்டு. மகிழ்ச்சி, கொண்டாட்டம் இருக்கிறது. அதை அறியவும், அறிந்ததைச் சொல்லவும் மனம் வேண்டும்.

கல்லாகக் கிடந்த அகல்யா ராமன் கால்பட்டு உயிர்த்தெழுகிறாள். இதனைப் பல கவிஞர்கள், கதாசிரியர்கள் தங்கள் அளவில் விமர்சளித்து எழுதியிருக்கிறார்கள். சிலர் அகல்யா நோக்கில், இன்னும் சிலர் கோதமன் பார்வையில்.  ஆனால் ச.து.சு. யோகியார், கோசலராமன், ‘மனக்குற்றம் இல்லாளை, உனக்குற்ற மலையாளை ஒதுக்குவதால் பழிப்போமோ’ என்று கேட்டு அவனுக்கு அறத்தினை உணர்த்தி அறிவு பெற வைக்கிறான்.

தமிழ்க்குமரி என்னும் ச.து.சு.யோகியார் கவிதைத் தொகுப்பு 1942ஆம் ஆண்டில் வெளிவந்தது. அது தமிழ் என்பது மரபு கவிதையாக இருந்து, உரைநடை கதைக்கு மாறி வந்து கொண்டிருந்த காலம். ஆனால், யோகியார் இலக்கண அமைப்பிற்குள், வரலாற்றையும், வாழ்க்கையையும் இணைத்துப் பார்க்கும் விதத்தில் பொதுத்தன்மை மிளிர கவிதைகள் எழுதினார். அப்படித்தான் அவர் தமிழ்த்தாயை தமிழ்க் குமரியாகக் கண்டார்.

அவர் தமிழ்க்குமரி!

பங்கயத்துக் குமரிமுனைப் பாதம் சேர்த்தாள்

பசும்பொன்முடி வேங்கடத்தைப் புனைந்தங்கார்த்தாள்.

பொங்கி வரும் காவிரியை இடையில் கோத்தாள்

புரமூன்றும் க்டற்கன்னி பணியப் பார்த்தாள்.

மங்கலம் சேர்மேலை மலைச் செங்கோலுற்றாள்

மலர்மெட்டு லங்கையெனும் மகளைப் பெற்றாள்.

எங்கள் குலத் தெய்வம், தாய் எமக்கு வீடு

இளமை குன்றாக் கன்னி எங்கள் தமிழர் நாடு.

ச.து.சு.யோகியார் நவீன கவிஞர். அவர் மரபு பாரம்பரியம் என்பதின் அடியொற்றி புதுமை படைத்தவர். அவர் கவிதை முழுவதிலும் அவற்றைக் காண முடிகிறது. 1963ஆம் ஆண்டில் காலமான அவரை தமிழ்க்குமரி கவிதைகள் நிலைநாட்டி வருகின்றன.