நினைவுகள் – சிறுகதை – பி.வி.ஆனந்த்குமார்

கதைகள்

“டேய், கோபி டிப்பன்ல சூடா இட்லி வச்சிறுக்கேன். வழக்கம்போல மதியம் சாப்பிடாம அப்படியே எடுத்துட்டு வந்திடாத’’,

“சரி… நான் வரம்மா…”

வீட்டிலிருந்து கிளம்பி பஸ் ஸ்டாப் வந்து காத்திருக்கிறேன். இந்த பஸ் ஸ்டாப்புல நிக்கறப்ப மனசுக்குள் ஏதோ ஒரு வலி! அந்த வலியும் சுகமாத்தான் இருக்கு. நினைவுகள் பின்னோக்கி நகர்ந்தன.

நான் கல்லூரியில் படிக்கும்போது, இந்த பஸ் ஸ்டாப்புலதான் நன்பர்களுடன் காயத்திரிக்காக காத்திருப்பேன். எப்போதாவது ஒரு நாள் நான் நேரத்துக்கு வரலைனா கூட, என் நண்பர்கள் காயத்திரியிடம், எனக்கு ஏதோ ஆகிவிட்டதாகச் சொல்லி அவளை அழ வைப்பார்கள். நான் பஸ்டாப்பில் வந்து நிற்பதை பார்த்ததும்தான் அவள் அழுகையை நிறுத்துவாள்.

 

என் நண்பர்கள் செய்த தவறுக்கு என்னை முறைத்தபடி தன் கோபத்தைக் காட்டுவாள். கல்லூரி முதலாம் ஆண்டிலிருந்து, இறுதி ஆண்டு வரை காயத்திரியிடம் சின்ன, சின்ன சண்டையிலேயே மூன்று ஆண்டுகள் ஓடிவிட்டது. கல்லூரி இறுதிநாள் நெருங்க நெருங்க, என்னுடைய நண்பர்கள் யாரிடமும் பழைய சந்தோசத்தைக் காண முடியவில்லை.

ஒன்றாகப் படித்த தோழிகளை பிரியப் போகிறோம் என்கிற கவலை அவளிடமும் இருக்கும். எப்போதும் கலகலப்பாக சிரித்துக்கொண்டு இருக்கும் காயத்திரி,  இன்று தன் தோழிகளுடன் பஸ்டாப்பில் ஏதையோ பறிகொடுத்ததுபோல் நிற்கிறாள்.

காயத்திரிக்கு நாளையோடு கல்லூரி விடுமுறை ஆரம்பம் என்று நண்பர்கள் சொன்னவுடன், எப்படியாவது நாளை காயத்திரியிடம் என் காதலைச் சொல்லி, மனம் விட்டு பேச வேண்டும் என்று நினைத்தேன். காலை சந்தோசத்துடன் பஸ்டாப் சென்று, பதற்றத்துடன் காத்திருந்தேன். காயத்திரி வரவில்லை. நான் அவளை நினைத்து அழுது புலம்பினேன். எங்கள் இருவருக்கும் கல்லூரி முடிந்த பிறகு கூட, காயத்திரியை தேடி பஸ்டாப் சென்று காத்திருப்பேன். இப்படியே ஒருவருடம் ஓடி விட்டது.

காயத்திரியை பார்ப்போம் என்ற நம்பிக்கை எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கியது. அப்போதுதான் நான் ஒருவரை சந்தித்தது உற்சாகத்தை அளித்தது. நான் பார்த்தது காயத்திரியின் தோழி ரேவதி. சந்தோசத்துடன் ரேவதியின் அருகில் சென்றேன். என்னைப் பார்த்த அதிர்ச்சியில் ஒன்றும் பேசாமல் ஏதோ என்னிடம் சொல்ல வந்தாள். அதற்குள் காயத்திரியைப் பற்றி தெரிந்துக்கொள்ள ஆவலாக ரேவதியிடம் விசாரித்தேன்.

ரேவதியின் கண்கள் கலங்கியது. அவள் சொல்லியதைக் கேட்டு இடிந்து போனேன். நான் காயத்திரியிடம் காதலை சொல்ல நினைத்த அன்று காயத்திரியும் என்னிடம் காதலை சொல்ல பஸ்டாப் வரும் பொழுது, என் நண்பர்கள் வழக்கம் போல காயத்திரியிடம் எனக்கு விபத்து நடந்து, ஆபத்தான நிலையில் நான் இருப்பாதாக காயத்திரியிடம் பொய் சொல்லி உள்ளனர். உண்மை என்று நம்பிய காயத்திரி என்னை நினைத்து கதறி, கதறி அழுது இருக்கிறாள்.

தோழிகள் காயத்திரிக்கு ஆறுதல் சொல்லி  கல்லூரிக்கு ஆட்டோவில் அழைத்துச் சென்று விட்டனர். ஆனால், அன்று என் நண்பர்களை பார்க்காமல் இருந்திருந்தால், காயத்திரி கண்டிப்பாக பஸ்டாப் வந்திருப்பாள். என்னையும் பார்த்திருப்பாள். என் நண்பர்களின் விளையாட்டால், இன்று நான் அவள் நினைவாக தனிமையில். காயத்திரியோ நான் இறந்துவிட்டதாக என்னி, என் நினைவுகளுடன் மற்றோருவர் மனைவியாக.

கல்லூரி முடிந்து ஒரு வருடம் ஓடிவிட்டது, இந்த பஸ்டாப்பை பார்க்கும்போது தவிர்க்க முடியாத அந்த பழைய இனிமையான நாட்கள் மனதில் ஊஞ்சல் ஆடுகிறது.