உள்ளாட்சி தேர்தலில்  அ.தி.மு.க.வின் அதிரடி திட்டம்!

slider அரசியல்

 

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்

நடக்குமா, நடக்காதா என்று மதில் மேல் பூனையைப் போல் இருந்த உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு ஒருவழியாக இன்று காலை தமிழக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுவிட்டது. என்றாலும், பொதுத் தேர்தலைப் போன்று உள்ளாட்சித் தேர்தலுக்கான நாட்கள் தனித்தனியாக அறிவிக்கப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

டிசம்பர் 27 மற்றும் 30 தேதிகளில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவித்துள்ளார். ஆகவே, இரண்டு கட்டமாக தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கிறது.

வேட்பு மனுத்தாக்கல் டிசம்பர் 6ம் தேதி துவங்கும்.வேட்பு மனுத்தாக்கல் தாக்கல் செய்ய கடைசி நாள் டிசம்பர் 13. வேட்பு மனுத்தாக்கலை திரும்ப பெறுதல் டிசம்பர் 18. வாக்கு எண்ணிக்கை அடுத்த ஆண்டு ஜனவரி இரண்டாம் தேதி அன்று நடைபெறுகிறது. இதில் வெற்றி பெற்ற வார்டு உறுப்பினர்கள், ஜனவரி 6ம் தேதி பதவி ஏற்பார்கள். ஊராட்சி ஒன்றிய தலைவர், துணை தலைவரின் தேர்தலுக்கான மறைமுக தேர்தல் நாள் ஜனவரி 11.

 

டிசம்பர் 27ம் தேதி முதற்கட்டமாக 194 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 3232 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கும், 6251 கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கும், 49638 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும் தேர்தல் நடக்கும்.

 

நேரடி தேர்தல் உள்ளாட்சி அமைப்புகளில் 1 லட்சத்து 18 ஆயிரத்து தொள்ளாயிரத்து 74 பதவிகளை நிரப்பிட நேரடி தேர்தல் நடைபெறும். இதில் 31 மாவட்ட ஊராட்சிகளுக்கு உட்பட்ட 658 வார்ட் உறுப்பினர் பதவிகளுக்கும், 388 ஊராட்சிக்கு உட்பட்ட 6886 வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கும் நேரடி தேர்தல் நடைபெறும். வாக்கு சீட்டு முறையில் தேர்தல் நடைபெறும்.

உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால், இன்றிலிருந்து தேர்தலுக்கான பரபரபரப்பு அரசியல் கட்சிகளிடம் அதிகமாகிவிடும். ஆளுங் கட்சியான அ.தி.மு.க.வோ மொத்தமுள்ள 15 மேயர் பதவிகளில் ஒன்றுகூட கூட்டணி கட்சிகளுக்கு போய்விடக் கூடாது என்கிற திட்டத்தோடு செயல்படுகிறது. அதனால்தான், நேரடி தேர்தலாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல்,  மறைமுக தேர்தலாக மாற்றியுள்ளது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். மேலும், இந்த தலைகீழ் மாற்றத்தின் பின்னால் கூட்டணி கட்சிகள் மேயர் பதவிகளைக் கேட்டு நெருக்குதல் தந்ததும் காரணமாக சொல்லப்படுகிறது. குறிப்பாக, அ.தி.மு.க. கூட்டணியிலுள்ள பா.ம.க., பா.ஜ.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகள் அனைத்தும் மேயர் சீட்டுகளுக்காக அ.தி.மு.க.விடம் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. சரத்குமார் கூட தங்களது கட்சிக்கு மூன்று மேயர் பதவிகள் கேட்கத் தொடங்கினார்.

உள்ளாட்சித் தேர்தலில் மேயர் பதவி உட்பட முக்கிய பதவிகளை தங்கள் கட்சி நிர்வாகிகளுக்கு கொடுத்து கட்சியை தங்கள் கட்டுபாட்டில் வலுபடுத்த அ.தி.மு.க. இரட்டை தலைமை எடுத்த முடிவுக்கு கூட்டணி கட்சிகள் மேயர் பதவி கேட்டு நெருக்கடி தந்தது பெரும் தர்மசங்கடத்தை தந்ததாகவும் சொல்லப்படுகிறது. நேரடி தேர்தலில் எம்.எல்.ஏ., எம்.பி. தேர்தலில் சீட் ஒதுக்குவது போன்ற சூழ்நிலை இருக்கிறது. ஆனால், மறைமுக தேர்தலில் அதிக கவுன்சிலர் அடிப்படையில்தான் மேயர் சேர்மன் பதவிகள் தேர்வு செய்யப்படும். இது அ.தி.மு.க.வுக்கு சாதகமாக இருக்கும் என்கிற கணக்கு அ.தி.மு.க.வின் இரட்டை தலைமைக்கு உண்டு என்றும் தகவல் கசிந்துள்ளது.

அ.தி.மு.க. குறுக்கு வழியில் இப்படி கணக்கு போட்டு உள்ளாட்சியில் மறைமுக தேர்தல் நடத்த சட்டம் இயற்றியுள்ளதை கொஞ்சம் தாமதமாக புரிந்து கொண்ட பா.ஜ.க., பா.ம.க. தே.மு.தி.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் அதிர்ந்து போயுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது மனக்கசப்பையும், நாளடைவில் இந்தக் கூட்டணிக்குள்ளே மோதல், கூட்டணி முறிவுக்கும் கொண்டு செல்லலாம் என்கிற பேச்சும் தமிழக அரசியல் வட்டாரத்தில் தீவிரமாக பேசப்படுகிறது.

-தொ.ரா.ஸ்ரீ.