அண்ணே… அந்த ஐநூறு ரூபாய்?

slider சினிமா

 

bharathiraja-பாரதிராஜா

தமிழகம் முழுவதும் ரஜினியின் 70-வது பிறந்தநாள் ரசிகர் மன்றத்தால் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வரிசையில் வேலூர் மாவட்ட ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் ரஜினிகாந்தின் 70-வது பிறந்த நாள் விழா  சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது.

இந்த விழாவில் இயக்குநர் பாரதிராஜா, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, பட்டிமன்ற பேச்சாளர் ராஜா கலந்து கொண்டனர். இங்கே 70 பயனாளிகளுக்கு 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.

rajinikanth-ரஜினிகாந்த்

இயக்குநர் பாரதிராஜா பேசும் போது, “ரஜினி மிகவும் எளிமையானவர்.  ‘16 வயதினிலே’ படத்திற்காக முதலில் ஐந்து ஆயிரம் சம்பளம் கேட்டார் ரஜினி. இது சின்ன பட்ஜெட் படம் தான், அவ்வளவு தொகை சாத்தியமில்லை என்றேன். இதையடுத்து படிப்படியாக குறைத்து 3 ஆயிரம் ரூபாய் சம்பளம் பேசப்பட்டது. அந்த சம்பளத்தில், இன்னும் அவருக்கு 500 ரூபாய் பாக்கி வைத்துள்ளேன். இன்றும் ரஜினி என்னிடம், “அண்ணே அந்த 500 ரூபாய்’’ என்று விளையாட்டாக கேட்பார். ரஜினியின் அரசியல் பயணம் குறித்து பேச விரும்பவில்லை. கடவுளுக்கு உள்ளது போல் அனைவரையும் ஈர்க்கும் சக்தி ரஜினியிடம் உள்ளது’’  என்று பேசினார். இயக்குநர் பாரதிராஜாவின் இந்தப் பேச்சுக்குள் ஒளிந்திருக்கும் அரசியல் மர்மம் என்னவோ?