ஸ்டாலினுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதிலடி!

slider அரசியல்
eps-stalin

உள்ளாட்சியில் மறைமுக தேர்தல் குறித்து தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அ.தி.மு.க. அரசையும், முதல்வரையும் குற்றம்சாட்டி கடும் விமர்சனம் செய்திருந்தார். இதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. “நீங்கள் கொண்டுவந்தால் சரி,,, நாங்கள் கொண்டுவந்தால் தவறா?’’ என்று ஸ்டாலினுக்கு பதிலடி தந்துள்ளார்.

சில தினங்களாகவே தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அ.தி.மு.க. அரசு கொண்டு வந்திருக்கும் தற்போதைய மறைமுக தேர்தல் என்பது சர்வாதிகார செயல்பாட்டுக்கு உதாரணம். 2006–ம் ஆண்டில் அப்போது இருந்த அரசியல் சூழலால் மறைமுக தேர்தலை நடத்தினோம். சமீபத்தில்கூட மறைமுக தேர்தல் குறித்து அமைச்சரவையில் எதுவும் பேசவில்லை என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியிருந்தார். இந்நிலையில் மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களை மறைமுகமாக தேர்ந்தெடுக்க அ.தி.மு.க. அவசர சட்டத்தை கொண்டு வந்தது கண்டனத்துக்குரியது என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பேசி வருகிறார்.

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஐந்து மாவட்டங்களில் ஒன்றான கள்ளக்குறிச்சி மாவட்ட தொடக்க விழாவில் நேற்று (27.11.2019) கலந்துகொண்டு புதிய மாவட்டத்தை அதிகாரபூர்வமாக தொடங்கி வைத்தார். இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசும்போது, “உள்ளாட்சி தேர்தல் நடைபெறுமா? நடைபெறாதா? என்று தினமும் சந்தேகத்தை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் எழுப்பியபடியுள்ளார். தமிழகத்தில் நிச்சயமாக உள்ளாட்சி தேர்தல் நடக்கும். அதற்கான ஆயத்தப் பணிகளை மாநில தேர்தல் ஆணையம் செய்து கொண்டே உள்ளது.

இன்னும் விரிவாக சொன்னால்  1996-ம் ஆண்டு வரை மறைமுக தேர்தல் தான் தமிழ்நாட்டில் நடந்த வந்தது. 1996ல் (அப்போது) தி.மு.க. ஆட்சி வந்தபோது, மு.க.ஸ்டாலின் முதன்முதலாக நேரடி தேர்தலை சந்தித்தார் என்பதை அவர் மறந்துவிட்டு பேசுகிறார். அதன்பிறகு மறைமுக தேர்தல் கொண்டு வந்ததும் அவரே தான். நீங்கள் தான் மறைமுக தேர்தல் அறிவித்தீர்கள். மறைமுக தேர்தலுக்கு சட்டசபையில் விளக்கம் கொடுத்தீர்கள். தற்போது ஏன் மறைமுக தேர்தலை சந்திக்க தயங்குறீங்க? மக்கள் ஓட்டுபோட்ட பிறகுதான் கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். கவுன்சிலர்கள் தான் தலைவரை தேர்ந்தெடுக்க போகிறார்கள். அதில் என்ன தவறு உள்ளது. இதுவும் சரிதான். நீங்கள் கொண்டு வந்தால் சரி! நாங்கள் கொண்டு வந்தால் தவறா?. தவறு என்றால் நீங்கள் 2006-ம் ஆண்டில் கொண்டு வந்ததும் தவறா?, தவறான திட்டத்தை தான் நடைமுறைப்படுத்தினீர்களா? அது சரி என்றால், இதுவும் சரி தான்”  என்று ஸ்டாலினுக்கு பதிலடி தொனியில் பேசியுள்ளார்.

உள்ளாட்சித் தேர்தல் நடந்து மக்கள் நலன் சார்ந்த அடிப்படை பணிகள் யாவும் நிறைவேறும். அதன் மூலமாக அன்றாட வாழ்க்கையை எளிமையாக்கும் வகையில் நன்மை அளிக்கும் பல செயல்பாடுகள் நிறைவேறும் என பொது மக்கள் அனைவரும் உள்ளாட்சித் தேர்தலை எதிர்நோக்கியுள்ள நிலையில், ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வும், பிரதான எதிர்க் கட்சியான தி.மு.க.வும் மறைமுக தேர்தல், நேரடி தேர்தல் மோதலில் ஈடுபட்டுள்ளது தேவவையற்றது என்கிற கருத்தும் பொது மக்களில் ஒரு சாராரிடமும் நிலவுதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

தொ.ரா.ஸ்ரீ.