கோபத்தில் அமித்ஷா!

slider அரசியல்
amithsha-அமித்ஷா

மகாராஷ்டிராவில் கடந்த சில வாரங்களாக நீடித்துவந்த அரசியல் குழப்பத்துக்கு முடிவு ஏற்பட்டுவிட்டது. சிவசேனா கட்சித் தலைவரும், பால் தாக்கரேவின் மகனுமான உத்தவ் தாக்கரே முதல்வராக இன்று (28.11.2019) பதவியேற்றார். சற்றும் எதிர்பாராத வகையில் மகாராஷ்டிராவில் ஏற்பட்டுள்ள இந்தச்  சம்பவம் குறித்து மகாராஷ்டிரா பா.ஜ.க. தலைவர்கள் மீது அமித்ஷா கடும் கோபம் கொண்டிருக்கிறார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. இது மகாராஷ்டிரா பா.ஜ.க. முகாமில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் பிரசாரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து மூன்று முறை மகாராஷ்டிராவில் பிரசாரம் மேற்கொண்டார் பிரதமர் மோடி. கட்சித் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷாவோ பலமுறை மகாராஷ்டிராவுக்கு வந்து 100க்கும் மேற்பட்ட கூட்டங்களில் பிரசாரம் மேற்கொண்டார். இதன் அடிப்படையில் பா.ஜ.க. தனித்தே ஆட்சியமைக்கும் அளவுக்கு வெற்றிபெறும் என்று அமித்ஷா நம்பியும் இருந்தார். அது நடக்கவில்லை. பா.ஜ.க.வுக்கு 104 இடங்கள் தான் கிடைத்த்து. கூட்டணி கட்சியான சிவசேனாவுக்கு 54 இடங்கள் கிடைத்தன. இதில் சிவசேனா முதல்வர் பதவி கேட்டு முரண்டு பிடித்ததால் கூட்டணி உடைந்துபோனது. இதில் சற்றும் எதிர்பாராத வகையில் சிவசேனா கட்சிக்கு தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆதரவு அளிக்க சிவசேனா கட்சித் தலைவர் முதல்வராக பதவியேற்றார். இப்படி நிலைமை தலைகீழாக மாறியதில் அமித்ஷா கடும் அதிர்ச்சியும், கோபமும் கொண்டிருப்பதாகவும், இது குறித்து விரைவில் மகாராஷ்டிரா பா.ஜ.க. தலைவர்களிடம் டெல்லியில் விசாரணை செய்யவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிரா  அரசியலில் ஏற்பட்ட திடீர் திருப்பம் குறித்து நேற்று முன்தினம் (26.11.2019) உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பிரதமர் மோடியும் தீவிரமாக ஆலோசனை செய்தனர். இவர்களின்  இந்த  ஆலோசனைக்கு பின்னரே பட்னாவிஸ் பதவி விலகல் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியுடன் கலந்துபேசி தேவேந்திர பட்னாவிஸ் பதவி விலகல் முடிவை எடுத்தபோதும், மகாராஷ்டிராவில்  பா.ஜ.க.வின் ஆட்சி  பறிபோனதற்கான காரணம் குறித்து அறிய அமித்ஷா விரும்புகிறார் என்றும், இதற்காக இன்றோ அல்லது நாளையோ டெல்லியில் மகாராஷ்டிரா பா.ஜ.க. தலைவர்களிடம் விளக்கம் கேட்கவுள்ளார் என்றும், அப்போது அவர்களிடம் அஜித் பவாரை நம்பி அவசரமாக ஆட்சி அமைத்தது ஏன்? சிவசேனாவுடன் மொத்தமாக உறவு துண்டிக்கப்பட்டது எப்படி? இதில் சரத் பவாரின் அரசியல் காய் நகர்த்தல்கள் என்னென்ன? சோனியா காந்தி கொடுத்த ஐடியாக்கள் என்னென்ன? என்று நிறைய விஷயங்களை பேசவுள்ளார் என்றும் டெல்லி பா.ஜ.க. வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

அனேகமாக இந்த விளக்க கூட்டத்திற்கு பின்னர் மகாராஷ்டிரா பா.ஜ.க. கட்சி நிர்வாகம் முற்றிலும் மாற்றியமைக்கப்பட அதிக வாய்ப்பிருப்பதாகவும். தேவேந்திர பட்னாவிஸை மாநில அரசியலிருந்து தேசிய அரசியலுக்குச் மாற்றப்படலாம் என்கிற பேச்சுகளும் தலைநகர டெல்லியில் பலமாக அடிபட தொடங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

எம்.டி.ஆர்.ஸ்ரீதர்