உத்தவ் தாக்கரே எத்தனை நாளைக்கு? தொடரும் மகராஷ்ட்ரா குழப்பங்கள்!

slider அரசியல்
uddhav_thackeray

கடந்த ஐந்து நாளுக்கு மேலாக நீடித்துவந்த மகாராஷ்டிரா அரசியல் குழப்பத்துக்கு இப்போது முடிவு ஏற்பட்டிருக்கிறது. சிவசேனா – தேசியவாத காங்கிரஸ் – காங்கிரஸ் கூட்டணி உருவாக்கியுள்ள மகாராஷ்டிரா வளர்ச்சி முன்னணி சார்பில் சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ தாக்கரே முதல்வர் பதவியேற்கவுள்ளார். இந்தக் கூட்டணி என்பதும், மகாராஷ்டிராவில் அதன் ஆட்சி என்பதும் டெல்லி பா.ஜ.க. தலைமைக்கு பெரும் நெருக்கடி ஏற்படுத்தியிருக்கிறது.

மகாராஷ்டிரா அரசியலை பொறுத்தவரை இந்துத்வா கொள்கை கொண்ட சிவசேனாவும், பா.ஜ.க.வும் இயல்பான கூட்டணியாக அரசியல் அரங்கில் வலம் வந்தார்கள். இது ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்தது. இப்போதும் அதற்கு ஒரு முற்றுபுள்ளி விழுந்திருக்கிறது. மேலும், மகாராஷ்டிராவை பொறுத்தவரை காங்கிரஸிடம் இருந்துவந்த ஆட்சியதிகாரத்தை 90-களின் தொடக்கத்தில் பா.ஜ.க.வின் துணையுடன் சிவசேனா பறித்தது. இதன் ஆரம்பத்தில் சிவசேனா கூட்டணி தலைமையை வகித்ததால், அதிக தொகுதிகளில் வென்றது மட்டுமல்ல சிவசேனா வசமே முதல்வர் பதவியும் இருந்தது. இந்த பழைய கணக்கு முதல்முறையாக
2014-ம் ஆண்டு மோடி பிரதமராக பதவியேற்றதிலிருந்து மாறி பா.ஜ.க. வசம் முதல்வர் சென்றது.

அன்று தொடங்கி இப்போது வரை சிவசேனாவுக்கு முதல்வர் பதவி இல்லை என்பதாகவும், அது தங்களுக்குரியது என்றும், இதற்கு ஏற்றார்போல் தேர்தல் நேரத்திலே அதிக தொகுதிகளையும் பெற்றுக் கொண்டு போட்டியிட்டது பா.ஜ.க. இந்த அதிக தொகுதிகள் என்பதையே அவ்வளவு எளிதில் ஒத்துக் கொள்ளாமல் இன்னும் சொல்லப் போனால் அரைமனது உறவோடுதான் தேர்தலை பா.ஜ.க.வுடன் இணைந்து சந்தித்து வந்தது சிவசேனா. இந்த அரைகுறை உறவுகூட பல இடங்களில் பா.ஜ.க. மற்றும் சிவசேனா வெற்றி வாய்ப்பை இழப்பதற்கும், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூடுதல் தொகுதிகளை பெறுவதற்கும் வழிவகுத்திருக்கலாம் என்கிற பேச்சும் மகாராஷ்டிரா அரசியல் வட்டாரத்தில் தற்போது அலசப்படுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தமுறை தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்பட்டிருந்தலிருந்தே சிவசேனா ஒரு விஷயத்தில் தெளிவாகவும் கறாராகவும் இருந்து வந்தது. அது என்னவென்றால், கூட்டணி ஆட்சியில் இரண்டரை ஆண்டுகள் சிவசேனா சார்பில் ஒருவர் முதல்வராக இருப்பார் என்னும் முடிவில் உறுதியாக இருந்த வைராக்கியம். இதுதான் இப்போது தாக்கரே குடும்பத்தில் முதல்வராக யாரும் பொறுப்பேற்றதில்லை என்கிற ரொம்ப காலம் கடைபிடித்து வந்த உறுதியை உடைத்தெறிந்து உத்தவ் தாக்கரேவை முதல்வராக பதவியேற்க வைத்திருக்கிறது. இது நிச்சயம் மகாராஷ்டிரா பா.ஜ.க.வை மட்டுமல்ல கட்சித் தலைவர் அமித்ஷா, பிரதமர் மோடி உட்பட டெல்லி பா.ஜ.க. தலைவர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது என்பதை மறுக்க முடியாது என்றும் சொல்லப்படுகிறது.

மகாராஷ்டிராவை பொறுத்தவரை கொள்கையில் ஒத்துப்போன சிவசேனா – பா.ஜ.க. உறவு என்பது ஏறக்குறைய 30 ஆண்டுகள் நீடித்த வரலாறு இருக்கிறது. ஆனால், இதற்கு நேர்மாறாக இந்துத்வா கொள்கை மீதான அபிமானம் கொண்ட சிவசேனாவும், மதசார்பற்ற கொள்கை அடிப்படையில் கட்சியை நடத்திவரும் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸுடனான அரசு சார்ந்த கூட்டணி உறவும் எவ்வளவு நாளைக்கு நீடிக்கும் என்பது வியப்பாய் நகரும் சஸ்பென்ஸ் படம் போன்றதாகவே இருக்க முடியும்.

விசாகன்