கே.எஸ்.அழகிரிக்கு எதிராக களமிறங்கும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்!

slider அரசியல்

 

evks-ilangovan-ஈவிகேஎஸ்-இளங்கோவன்

கடந்த பாராளுமன்றத் தேர்தலில், தேனி தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டவர் முன்னாள் மத்திய அமைச்சரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். இந்த ஒரு தொகுதியில் மட்டும்தான் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. துணை முதலமைச்சர் ஓ,பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். இப்போது தேனியில் தான் போட்டியிட்டது பெரும் தவறு என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு மத்திய அரசைக் கண்டித்து ஈரோட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இளங்கோவன்  கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியபோது, ‘’தேனி தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளரும், துணை முதல்வர் ஓ.பி.எஸ். மகனுமான ரவீந்தரநாத், ஒரு ஒட்டுக்கு ரூ.2,000 கொடுத்து 200 கோடி ரூபாய் வரை செலவு செய்து வெற்றி பெற்றார். ஈரோட்டில் சீட் கிடைக்காதபோது அடுத்து நான் அமைதியாக இருந்திருக்க வேண்டும். ஆனால், தேனிக்கு சென்று போட்டியிட்டு பெரும் தவறு செய்துவிட்டேன். மத்திய அரசு நாட்டின் பொருளாதாரத்தை மொத்தமாக சீர்குலைத்துவிட்டது’’ என்று பேசினார்.

தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவியில் இருந்தபோது இளங்கோவன் எந்தவொரு பிரச்னைக்கும் கூறும் கருத்து பெரியளவில் பேசப்படும். இவர் வழக்கமாக தனது சொந்த தொகுதியான ஈரோடு பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவதுதான் வழக்கம்.  ஆனால், இந்த தடவை அவருக்கு தேனி தொகுதியை ஒதுக்கியபோதே அவருக்கு இந்த விஷயம் மன வருத்தத்தை தந்தது. இப்போது தேனியில் நின்றது பெரும் தவறு என்று இளங்கோவன் பேசியிருப்பது காங்கிரஸ் வட்டாரத்திலும், தி.மு.க. வட்டாரத்திலும் பெரும் சலசலப்பை உண்டாக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஈரோட்டில் இளங்கோவன் பேசிய பேச்சுக்கு பின்னாடி இப்போதைய தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி மீதான கோபம் மறைமுகமாக வெளிப்பட்டுள்ளது என்றும், இது நாளடைவில் அழகிரிக்கு எதிராக இன்னும் அதிகம் ஆகலாம் என்றும், இது ஏற்கெனவே இந்தியாவெங்கும் காங்கிரஸ் கட்சியில் நிலவிவரும் கோஷ்டி சண்டைகளோடு இதுவும் சேரும்பட்சத்தில் டெல்லி காங்கிரஸ் தலைமைக்கு தலைவலியாக அமையலாம் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

 

– எம்.டி.ஆர்.ஸ்ரீதர்