எம்.ஜி.ஆர். – ஜெயலலிதா இணைந்து நடித்த படங்கள்

slider இலக்கியம்

தமிழ்நாட்டின் ஈடு இணையற்ற தலைவராக விளங்கிக் கொண்டிருந்தவர் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்.. இன்னும் மனித நேயத்தால் அனைவரின் இதயங்களிலும் வாழ்ந்து கொண்டிருப்பவர் எம்.ஜி.ஆர் அவர்கள். அவருடைய ஆட்சி பொற்கால ஆட்சியாகவும், ஏழை எளியவர்களின் துயர் தீர்க்கிற ஆட்சியாகவும் இருந்தது. அவர் இன்று நம்மிடையே இல்லை, இறந்துவிட்டார் என்ற வார்த்தையைக் கூட ஏற்றுக் கொள்ளாத பல கிராமங்கள் இன்றும் அவரை தெய்வமாக நினைத்து பூஜித்து வணங்கி வருகிறார்கள்.

இப்படி காலத்தை வென்ற காவிய நாயகனான மக்கள் திலகம் எம்.ஜி.ஆரிடம், அவர் உயிரோடு இருந்த காலத்திலேயே தங்களை வாரிசாக ஏற்று அறிவிக்க வேண்டும் என்று எத்தனையோ பேர் முயற்சித்தார்கள். ஆனால், சிலரின் பெயரைச் சொல்லி பாராட்டியிருக்கிறார். ஆனால், அவர்களெல்லாம் எம்.ஜி.ஆரின் வாரிசாக தன்னை நிரூபித்துக் கொள்ள முடியவில்லை. இன்று அவர்களெல்லாம் காணாமல் போய்விட்டார்கள். சிலர் அவரைப்போல் உடையலங்காரம் செய்து நடித்தார்கள். சிலர் அவரைப்போல் நடிப்பதும், ஆடிப்பாடுவதுமாக கூட முயற்சி செய்து பார்த்தார்கள். எதுவும் நடக்கவில்லை. இன்று அவர்களெல்லாம் திரையுலகிலும் அரசியல் உலகிலும் காணாமல் போனார்கள்.

ஆனால், திரையுலகிலும் அரசியல் உலகிலும் புரட்சித்தலைவரின் வாரிசாக தனது கடைசி காலம் வரை எல்லாவிதமான எதிர்ப்புகளையும் புயலையும் எதிர்த்து நின்று சமாளித்து, தானே எம்.ஜி.ஆரின் உண்மையான அரசியல் வாரிசு என்பதை நிரூபித்து, தனது வெற்றிக் கொடியை பறக்கவிட்டுச் சென்றிருப்பவர் ஜெ.ஜெயலலிதா அவர்கள். எத்தனையோ எதிர்ப்புகள், சதிகள் வந்த போதும் அவைகளையெல்லாம் தவிடு பொடியாக்கிவிட்டு, தங்களுடைய மறைவுக்குப் பிறகு, இன்றும் அ.தி.மு.க தொண்டர்கள் மனதிலும், தமிழக மக்களின் மனங்களிலும் கோலோச்சி வருபவர்கள் எம்.ஜி.ஆரும், செல்வி ஜெயலலிதா அவர்களும். புரட்சித்தலைவரின் ஆட்சியைப்போல் ஏழை எளியவர்களின் துயரங்களைத் துடைக்கிற பொற்கால ஆட்சியாகவே தன்னுடைய ஆட்சியையும் நடத்தி வந்தார் ஜெயலலிதா. இவரது வீரமும், விவேகமும் எதையும் துணிச்சலுடன் செயல்படுத்துகிற திறனும் இவரைப்போல் யாருக்குமே அமையவில்லை. இந்த இரண்டு தலைவர்களையும் அரசியல் உலகிற்கு கொண்டுவருவதற்க்குக் காரணமாக அமைந்தது தமிழ்த்திரையுலகம்தான். அந்தத் தமிழ்த்திரையுலகில் இவர்கள் இணைந்து நடித்த படங்கள், கலையுலக உயர்வுக்கும், அரசியல் தலைவர்களாக உருவாவதற்கும் காரணமாக அமைந்தது.

எம்.ஜி.ஆர். – ஜெயலலிதா என்ற மாபெரும் தலைவர்கள் இணைந்து நடித்த படங்களை வரிசைப்படுத்தி உள்ளேன். சுவாரஸ்யமான, ஆச்சர்யமான தகவல்கள்

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் 1936ம் ஆண்டு ‘சதிலீலாவதி’ படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்து 1946ம் ஆண்டுவரை சுமார் பத்து ஆண்டுகள் சிறிய வேடங்களை ஏற்று நடித்து, கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து 1947ம் ஆண்டு வெளிவந்த ‘ராஜகுமாரி’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதன் பிறகு சுமார் 75 படங்களில் பி.எஸ்.சரோஜா, பானுமதி, பத்மினி, அஞ்சலிதேவி, சரோஜாதேவி, சாவித்திரி, கே.ஆர்.விஜயா என்று பல்வேறு கதாநாயகிகளுடன் இணைந்து நடித்தார். இதில் பெரும்பாலானவை கருப்பு வெள்ளைப் படங்கள். ஆனால், அத்தனையும் வெற்றிப்படங்களாகவே அமைந்தன. அதன்பிறகு 76வது படமாக 1965ம் ஆண்டு வெளிவந்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ படம்தான் புரட்சித்தலைவருடன் புரட்சித்தலைவி இணைந்து நடித்த முதல் படமாகும். இந்தப்படத்தை பி.ஆர்.பந்துலு தனது பத்மினி பிக்சர்ஸ் நிறுவனத்திற்காக இயக்கித் தயாரித்தார். படம் சூப்பர் ஹிட்டானது. வசூலை அள்ளித்தந்தது. புரட்சித் தலைவரும், புரட்சித் தலைவியும் அவ்வளவு அழகாக நடித்திருந்தார்கள். படம் பார்த்த ரசிகர்கள் பொருத்தமான ஜோடி என்று பேசத் தொடங்கினார்கள். இவர்கள் இணைந்து நடித்த முதல் படம் மாபெரும் வெற்றி பெற்றதால், இருவரும் சேர்ந்து நடிக்கும் படத்தை இயக்குவதற்கும், தயாரிப்பதற்கும் அனைவரும் முன் வந்தார்கள்.

ஜெயலலிதா திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான படம் ‘ஸ்ரீசைல மகாத்மிலம்’ கன்னடத் திரைப்படமான இது 1960ம் ஆண்டு வெளிவந்தது. அதன்பிறகு 1965ம் ஆண்டில் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த ‘வெண்ணிற ஆடை’ படத்தில் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படத்திலேயே நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கிற கதாபாத்திரத்தில் துணிச்சலாக நடித்திருந்தார் ஜெயலலிதா. அந்த ஆண்டிலேயே எம்.ஜி.ஆருடன் ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் கதாநாயகியாக இணைந்து நடித்தார். திரையுலகின் பல முன்னணி நாயகர்களான சிவாஜி, ஜெமினி, முத்துராமன், ஸ்ரீகாந்த், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், சோ, என்று அனைவருடனும் ஈகோ பார்க்காமல் கதாபாத்திரத்திற்கு ஏற்ற வகையில் ஜெயலலிதா நடித்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம்(எபிஸில்), இந்தி(இஸாத்) என்று சுமார் 137 படங்களில் 1960 முதல் 1980 வரை சுமார் 20 ஆண்டுகள் முன்னணி கதாநாயகியாக தனது வெற்றிக் கொடியைப் பறக்கவிட்டார்.  ‘நதியைத் தேடிவந்த கடல்’ஜெயலலிதாவின் கடைசி படம்.

எம்.ஜி.ஆர் அவர்கள், 1936ம் ஆண்டு தொடங்கி 1978ம் ஆண்டுவரை சுமார் 42 ஆண்டுகள் தமிழ்த்திரையுலகில் சூப்பர் ஸ்டாராக விளங்கி 134 படங்களை நடித்து முடித்திருக்கிறார். இன்றுவரை அந்தப் படங்கள் மக்களால் பெரிதும் ரசித்துப் பார்க்கப்படுகின்றன. இதில் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் 28 படங்களில் இணைந்து நடித்து அனைவரையும் கவர்ந்து வெற்றி படமாக்கியிருக்கிறார்கள்.

‘ஆயிரத்தில் ஒருவன்’ படம் வெளியான அதே ஆண்டு, தேவர் பிலிம்ஸ் தயாரித்த ‘கன்னித்தாய்’ படமும் இவர்கள் இருவரும் இணைந்து நடித்து வெளிவந்தது. குறுகியகால தயாரிப்பான இந்தப்படம் தேவர் ஃபிலிம்ஸ்க்கு நல்ல வசூலைக் கொடுத்தது.

1966ம் ஆண்டு வெளிவந்த சரவணா பிலிம்ஸின் ‘சந்திரோதயம்’ படத்திலும் எம்.ஜி.ஆரும் புரட்சித்தலைவி ஜெயலலிதாவும் இணைந்து நடித்திருந்தார்கள். இந்தப்படம் ஒரு பிரபலமான தினசரி பத்திரிகையை எதிர்த்து போராடுவதைப் போன்று கதையமைப்புக் கொண்ட படமாக உருவாக்கியிருந்தார்கள். இதனால் பிரபலமான அந்த தினசரி பத்திரிகைக்கும், எம்.ஜி.ஆருக்கும் கருத்து மோதல் ஏற்பட்டது. எம்.ஜி.ஆர் நடித்த படத்தின் விளம்பரம், செய்தி எதுவும் அந்தத் தினசரிப் பத்திரிகையில் வெளிவரவில்லை. ஆனால், படம் வெளிவந்து வெற்றி பெற்றது. இவர்கள் ராசியான ஜோடி, இவர்கள் இணைந்து நடித்தால் படங்கள் ஓடும் என்று பத்திரிகைகளில் எழுதத் தொடங்கினார்கள்.

தேவர் பிலிம்ஸின் மற்றுமொரு படமான ‘தனிப்பிறவி’ அதே ஆண்டு 1966ல் வெளிவந்தது இதிலும் இருவரும் இணைந்து நடித்தார்கள். குறுகிய கால தயாரிப்பான இந்தப்படமும் வெற்றி பெற்றது. எம்.ஜி.ஆரின் முகமே ஒரு ராசிதான் என்று தெரிவிக்கிற வகையில் தேவர் பிலிம்ஸ் இந்தப் படத்திற்கு ‘முகராசி’ என்று பெயர் வைத்தது. இதில் ஜெயலலிதாவுக்கு எம்.ஜி.ஆர் சிலம்பாட்டம் கற்றுக் கொடுப்பார். பெண்களுக்கு தற்காப்பு கலை தெரிந்திருக்க வேண்டும் என்று சொல்லி கற்றுக்கொடுப்ப்பார். இருவரும் சரிசமமாக மோதிக் கொள்ளும் சண்டைப் பயிற்சி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

1967ம் ஆண்டு வெளிவந்த ‘அரச கட்டளை’ திரைப்படத்தில் சரோஜாதேவி நாயகியாக நடித்திருந்தாலும் ஜெயலலிதா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். எம்.ஜி.ஆரின் சகோதரரான எம்.ஜி.சக்கரபாணி இந்தப் படத்தை இயக்கியிருந்தார். சத்யராஜ் என்ற நிறுவனத்தின் பெயரில் ‘எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ்’ தயாரித்தது. இதில் ஒரு காட்சியில் எம்.ஜி.ஆர் தனது ராஜா வேடத்தைக் கலைத்து ஜெயலலிதாவுக்கு அந்த வேடத்தைப் போட்டு அரசரைப்போன்று அரண்மனை தர்பாரில் அமர வைப்பார். ‘எனக்கு பதில் நீதான் இந்த நாட்டின் ராஜாவாக இருக்க வேண்டும்’ என்று கூறிவிட்டு மாறுவேடத்தில் அங்கிருந்து சென்று விடுவார். அவர் வரும் வரை அரசவையில் ராஜாவாக ஜெயலலிதா வீற்றிருப்பார். ஜெயலலிதாவின் தலையில் தனது ராஜ கிரீடத்தை வைத்து ஆசீர்வதிப்பார் எம்.ஜி.ஆர். இப்பொழுது அந்த காட்சியை பார்ப்பவர்கள் விசில் அடித்து தியேட்டரையே அலற வைக்கிறார்கள். அந்தப்படத்தில் இடம் பெற்ற காட்சி எதிர்காலத்தில் ஜெயலலிதாவின் எதிர்கால அரசியல் வாழ்க்கையை அன்றே தனது ‘அரசகட்டளை’ படத்தின் மூலம் தீர்மானித்து விட்டார் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

1967ம் ஆண்டு வெளிவந்த ‘காவல்காரன்’ படத்தை சத்யா மூவிஸ் தயாரித்திருந்தது. இந்தப்படத்தில் இருவரும் இணைந்து நடித்தார்கள். ஆனால், உண்மையில் இந்த படத்தில் இருவரும் இணைந்து ந்டிப்பதற்கான வாய்ப்பில்லாமல் இருந்தது. இந்தப்படத்தின் தயாரிப்பாளரான ஆர்.எம்.வீரப்பன் சரோஜாதேவியையோ, கே.ஆர் விஜயாவையோ கதாநாயகியாக நடிக்கவைப்பதற்கு முயற்சி செய்தார். ஆனால், கடைசியில் ஜெயலலிதா நடித்தார். படம் மாபெரும் வெற்றி பெற்று எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருவரின் திரையுலக வாழ்க்கைக்கும் திருப்புமுனையாக அமைந்தது.

1967ம் ஆண்டைத் தொடர்ந்து வெளிவந்த படம் ‘தாய்க்குத் தலைமகன்’ தேவர் பிலிம்ஸ் குறுகிய காலத்தில் தயாரித்து இந்தப்படம் வெளிவந்து வெற்றி பெற்றது. எம்.ஜி.ஆர் கதை எழுதிய ‘கணவன்’ படத்தை வள்ளி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்தது. இதிலும் ஜெயலலிதா இணைந்து நடித்தார். 1968ம் ஆண்டு படம் வெளிவந்தது. ப.நீலகண்டன் படத்தை இயக்கியிருந்தார்.

எம்.ஜி.ஆரின் 100வது படம் ஜெமினியின் ‘ஒளி விளக்கு. இந்தப்படத்தை எஸ்.எஸ்.வாசன் ஜெமினி பிக்சர்ஸ் நிறுவனத்தின் பெயரில் தயாரித்தார். இந்தியில் வெளிவந்த படத்தைத் தழுவி எம்.ஜி.ஆரின் ஆலோசனைப்படி சில மாற்றங்கள் செய்து தயாரித்தார்கள். படமும் வெளிவந்து வெற்றி பெற்றது. இதிலும் இருவரும் இணைந்து நடித்து படத்தை வெற்றி பெற வைத்தார்கள். இருவரும் குறவன் குறத்தியாக மாறுவேடம் போட்டுக் கொண்டு, ‘படி அரிசி கிடைக்கிற காலத்திலே நாங்க படி ஏறி பிச்சை கேக்க போவதில்லே.. குடிசையெலாம் வீடாகும் நேரத்திலே நாங்க தெருவோரம் குடியேறத் தேவையில்லே’ என்று ஆடிப்பாடியிருக்கும் இந்தப்பாடலின் வரிகள் எம்.ஜி.ஆரின் ஆட்சியின் சிறப்பையும், இன்றைய ஜெயலலிதாவின் ஆட்சியின் சிறப்பையும் அன்றே குறிப்பது போல அமைந்திருந்தது.

‘கண்ணன் என் காதலன்’ படத்தில் மற்றொரு கதாநாயகியாக வாணிஸ்ரீ நடித்திருந்தாலும் கணவன் மனைவியாக எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் இணைந்து சிறப்பாக நடித்திருந்தார்கள். இந்தப்படமும் இவர்களுக்கு வெற்றிப் படமாக அமைந்தது. ‘காதல் வாகனம்’ என்று தேவர் பிலிம்ஸ் ஒரு படம் தயாரித்தது. இதிலும் இருவரும் இணைந்து நடித்திருந்தார்கள். ஜி.என்.வேலுமணி தயாரித்த ‘குடியிருந்த கோயில்’ படத்தில் எம்.ஜி.ஆர் இரட்டை வேடம் ஏற்று நடித்திருந்தார். 1968ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படத்தில் ஜெயலலிதா ஜோடியாக நடித்திருந்தார். ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வெள்ளிவிழா கொண்டாடியது.

‘தேர் திருவிழா’ தேவர் பிலிம்ஸ் தயாரித்த மற்றொரு குறுகிய காலபடம். இதிலும் இருவரும் ஜோடியாக இணைந்து நடித்தார்கள். வழக்கம்போல் தேவர் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு மற்றொரு வசூல் படமாக அமைந்தது. ‘புதிய பூமி’ ஜேயர் மூவிஸ் தயாரித்த படம். இதிலும் இருவரும் இணைந்து நடித்தார்கள். 1968ம் ஆண்டு மட்டும் இருவரும் இணைந்து நடித்து வெளிவந்த படங்கள், ‘கணவன்’, ‘ஒளிவிளக்கு’, ‘கண்ணன் என் காதலன்’, ‘காதல் வாகனம்’, ‘குடியிருந்த கோயில்’, ‘தேர்திருவிழா’, ‘புதிய பூமி’, ‘ரகசிய போலீஸ் 115’ போன்ற படங்களாகும் இந்த ஜோடி மக்களை அதிகமாக கவர்ந்ததால்தான் ஒரே ஆண்டில் இத்தனை படங்களில் நடித்திருக்கிறார்கள்.

‘ரகசிய போலீஸ் 115’ படத்தை பி.ஆர்.பந்துலு இயக்கியிருந்தார். இதுவும் வெற்றிப்படமானது. 1969ம் ஆண்டு வெளிவந்த ‘எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ்’ தயாரித்த ‘அடிமைப்பெண்’ படத்தில் இருவரும் இணைந்து சிறப்பாக நடித்திருந்தார்கள். இந்தப்படத்தில் குழந்தைப் பருவத்தில் குகையில் அடைக்கப்பட்ட எம்.ஜி.ஆரைக் காப்பாற்றி கூனை நிமிரவைத்து அனைவரின் அடிமை விலங்குகளை உடைக்க வைக்கும் வீரப்பெண்மணியாக ஜெயலலிதா நடித்திருந்தார். அத்தனை சிறப்பான வேடத்தை எம்.ஜி.ஆர் கொடுத்திருந்தார். கே.வி.மகாதேவன் இசையில், ‘அம்மா என்றால் அன்பு’ என்ற பாடலை ஜெயலலிதா சொந்தக் குரலில் பாட வைத்தார். இந்தப் பாடல் இன்றுவரை அனைவராலும் பாராட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தப்படத்தில் இரட்டை வேடத்தில் ஜெயலலிதா நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாகிரெட்டியார் தயாரித்த ‘நம் நாடு’ எம்.ஜி.ஆர் ஜெயலலிதா இணைந்து நடித்த மற்றொரு வெற்றிப் படம் இது. இதில் எம்.ஜி.ஆரை ஜெயலலிதா ‘வாங்கய்யா வாத்தியாரய்யா.. வரவேற்க வந்தோமய்யா.. ஏழைகள் உங்களை நம்பி எதிர்பார்த்து நின்றோமய்யா’ என்று வரவேற்றுப் பாடி அரசியலுக்கு அழைக்கும் காட்சி இடம்பெற்றிருந்தது. அதேபோல் எதிர்காலத்தில் எம்.ஜி.ஆர் அரசியலுக்கு வந்து ஏழைகளின் கண்ணீரைத் துடைத்தார். எம்.ஜி.ஆரின் வழியில் இன்று ஜெயலலிதாவும் ஏழை, எளிய மக்களின் துயரங்களைத் தீர்த்து அவர்களின் அனபைப் பெற்றவராக இருக்கிறார்.

வீனஸ் பிக்சர்ஸ் தயாரித்த ‘என் அண்ணன்’ படத்திலும் புரட்சித்தலைவரும், புரட்சித்தலைவியும் இணைந்து சிறப்பாக நடித்திருந்தார்கள். படம் வெற்றிபெற்றது. அதேபோல், எம்.ஜி.ஆரை ‘எங்கள் தங்கம்’ என்று மக்கள் அன்போடு அழைப்பதை மையமாக வைத்து, ‘எங்கள் தங்கம்’ என்றே படத்துக்குப் பெயர் சூட்டி, எம்.ஜி.ஆர் & ஜெயலலிதா வெற்றிக் கூட்டணியில் கிருஷ்ணன் பஞ்சு படத்தை இயக்கியிருந்தார்.

‘மாட்டுக்கார வேலன்’ ஜெயஸ்ரீ பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் இரட்டை வேடத்தில் புரட்சித்தலைவியுடன் இணைந்து நடித்த படமாகும். மற்றொரு நாயகியாக நடிகை லட்சுமி நடித்திருந்தார். ஆனால், முக்கிய நாயகியாக ஜெயலலிதா நடித்திருந்தார். தமிழில் ஏ.கே.வேலன் (அருணாசலம் ஸ்டுடியோ அதிபர்) எழுதிய கதை இந்தியில் படமாக வெளிவந்து வெற்றிபெற்றது. அந்தப்படத்தின் உரிமையை தமிழில் எடுத்தப்படம். படம் வெளியான ஊர்களிலெல்லாம் வசூலில் சாதனை புரிந்தது.

பி.ஆர்.பந்துலு தயாரித்து இயக்கிய தேடிவந்த மாப்பிள்ளை’ படத்திலும் இருவரும் ஜோடியாக இணைந்து ‘என்ன பொருத்தம் நமக்குள் இந்தப்பொருத்தம்’ என்று ஆடிப்பாடும் பாடல் காட்சியை ரசிகர் கூட்டம் ரசித்து வரவேற்றது. ‘ஒரு தாய் மக்கள்’ ப.நீலகண்டன் இயக்கத்தில் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் இணைந்து நடித்த மற்றொரு படம். நாஞ்சில் புரொடக்ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்திருந்தது. இதுவும் வெற்றி பெற்றது. ‘குமரிக்கோட்டம்’ ஜே.சி. பிலிம்ஸ் சார்பில் கோவை செழியன் தயாரித்திருந்தார். இருவரும் இணைந்து நடித்திருந்தாலும் கதைப்படி படம் முழுவதும் மோதிக் கொண்டேயிருப்பார்கள் இறுதியில் ஒருவரை ஒருவர் புரிந்துக்கொண்டு இணைந்து கொள்வார்கள். 1971&ஆம் ஆண்டு வெளிவந்த இதுவும் வெற்றிப்படமானது.

‘நீரும் நெருப்பும்’ 1971ம் ஆண்டு வெளிவந்த படமாகும். எம்.ஜி.ஆர் இரட்டை வேடத்தில் நடித்த படம். இதிலும் ஜோடியாக இணைந்து ஜெ.ஜெயலலிதா அவர்கள் நடித்திருந்தார்.

1972ம் ஆண்டு நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளிவந்த கருப்பு வெள்ளை படம் ‘அன்னமிட்ட கை’ இந்தப்படத்தில் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா இருவரும் இணைந்து நடித்தார்கள். இதில் எம்.ஜி.ஆர் அவர்கள் அன்னமிட்டகை நம்மை ஆக்கிவைத்தகை உன்னை என்னை உயரவைத்து உலகமெல்லாம் வாழவைக்கும் ‘அன்னமிட்ட கை’ என்று இந்தப்பாடலை பாடி நடித்திருப்பார். சினிமாவில் பாடியதைப் போல், முதல்வராகி தன் ஆட்சிக்காலத்தில் குழந்தைகளுக்கு சத்துணவு போட்டு ‘அன்னமிட்ட கை’யாக விளங்கினார். அதேபோல் இந்தப்படத்தில் ‘பதினாறு வயதினிலே பதினேழு பிள்ளையம்மா.. தாலாட்டு பாடுகிறேன் தாயாகவில்லையம்மா’ என்று அனாதைக் குழந்தைகளுக்காக பாடி நடித்திருப்பார் ஜெயலலிதா. அதேபோல் ஜெயலலிதாவும் அரசியலுக்கு வந்து தொட்டில் குழந்தை திட்டத்தைக் கொண்டுவந்து அனாதை குழந்தைகளைக் காப்பாற்றியது முதல் பல்வேறு மக்கள்நலன் நடவடிக்கைகளால் தமிழக மக்களால் அன்போடு அம்மா என்று அழைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்.

எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் நடித்த ‘ராமன் தேடிய சீதை’ படத்தை ஜெயந்தி பிலிம்ஸ் தயாரிக்க ப.நீலகண்டன் இயக்கியிருந்தார். இருவரும் இணைந்து நடித்த படங்களிலேயே உடையலங்காரத்துக்காக அதிக செலவு செய்திருந்த படம் இதுவாகத்தான் இருக்கும். இதில் ஜெயலலிதாவைப் பற்றி எம்.ஜி.ஆர் ஒரு பாடல் பாடியிருப்பார். ‘திருவளர்ச் செல்வியோ… நான் தேடிய தலைவியோ..’ என்று தொடங்கும் அந்தப் பாடலே, ‘நான் தேடிய தலைவி’ என்று தீர்க்கதரிசனமாக சொல்லிவிட்டது.

‘பட்டிக்காட்டு பொன்னையா’ எம்.ஜி.ஆர் இரட்டை வேடத்தில் நடித்த படம். எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் இணைந்து நடித்த கடைசிப்படம் இதுதான். ஆக மொத்தம் 28 படங்களில் இருவரும் ஜோடியாக இணைந்து நடித்து வெற்றிகரமான ஜோடியாக வலம் வந்தார்கள். திரையுலகில் ராசியாக இருந்த இந்த ஜோடி அரசியலுக்கும் ராசியாகிவிட்டது. அதனால்தான் எம்.ஜி.ஆர் உருவாக்கிய அ.இ.அ.தி.மு.க இயக்கத்தையும், முதல்வராக தமிழகத்தையும் அவரது வாரிசாக இருந்து இரண்டையும் கண்போல் காத்து வருகிறார் புரட்சித்தலைவி ஜெ.ஜெயலலிதா!

peru- thulasi-palanivel-பெரு-துளசி-பழனிவேல்

 

பெரு.துளசி பழனிவேல்