உலகின் யதார்த்தம் எது?

இலக்கியம்

இந்த மனித வாழ்க்கை மிக அபூர்வமானது. யாருக்கும் கிடைக்காத ஒன்று. ஆனால், கிடைத்தற்கு அரிய இந்த வாழ்க்கையை எப்படி எல்லாம் மனிதர்கள் அலங்கோலமாக்கி அவஸ்தைப்படுகிறார்கள் என்பது கண்கூடு! யாருக்கும் கிடைக்காத ஒரு அரிய பொருள் நமக்குக் கிடைக்கிறது என்றால், அதை எவ்வளவு பத்திரமாக வைத்துப் பாதுகாப்போம்! எப்படி எல்லாம் போற்றுவோம்! அதுபோல, இந்த மனிதப் பிறவியைப் போற்றி, மனிதப் பண்புகளை மதித்து, பிறரது ஆசாபாசங்களுக்கும் இடம் கொடுத்து நல்ல குணங்களுடன் பிறர் மெச்ச வாழ வேண்டும்.

வாழ்க்கையில் தவறு செய்கிற பலரும் சொல்கிற ஒரு தற்காப்புக் காரணம் என்ன தெரியுமா? ‘அவரும் இப்படிச் செய்யறாரேன்னுதான் நானும் இதைப் பண்ணிக்கிட்டிருக்கேன்.’ தாங்கள் செய்கிற தவறுக்குக் காரணம் கற்பிப்பவர்களுக்கு இதே சமூகத்தில் பலர் நல்லதும் செய்கிறார்கள் என்பது தெரியாமல் போய் விடுவது விநோதம்தான்!

ஆம்! நல்லவை எவர் கண்களுக்கும் தெரியாது. உண்மை காலா காலத்துக்கும் நிலைத்து நிற்கும். பொய் என்பது கானல் நீர் போல. ரொம்ப நாள் தங்காது. ஏதாவது ஒரு வகையில் தெரிந்துவிடும். தன்னை அறியாமல் வெளிப்பட்டே விடும்.

 

அந்த நான்கு பேரும் பெரும் பணக்காரர்கள். சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் உள்ளவர்கள். இணை பிரியா நண்பர்கள். எப்போது நேரம் வாய்க்கிறதோ, அது போன்ற சந்தர்ப்பத்தில் ‘ரிஸார்ட்’ போன்ற இடத்தில் ஒன்றாகச் சந்தித்துக் கொள்வது வழக்கம். பல விஷயங்களை வெளிப்படையாகவும், விவாதத்திற்கு உரியதாகவும் பேசுகிற இவர்கள், தாங்கள் செய்கிற விஷயங்களைப் பற்றி இதுவரை விவாதித்ததில்லை. எல்லோரும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவது வழக்கம் உள்ளவர்கள்.

ஒரு நாள் இந்த நான்கு நண்பர்களும் சந்தித்துக் கொண்டனர். பரஸ்பர விசாரிப்புகள் முடிந்தன. பிறகு ஒரு நண்பர் சொன்னார்: ‘நாம அடிக்கடி சந்திச்சுப் பேசுறோம்… ஆனா, வெளித் தோற்றத்துக்கு ஏதோ பேசிட்டுப் போயிடறோம். நம்மால வெளில சொல்ல முடியாத பிரச்னைங்க நிச்சயம் இருக்கு. இன்னிக்கு ஒரு நாள் மட்டும் நண்பர்களான நாம், உண்மையை  அதாவது அவரவர் மனசுக்குள் என்னென்ன தப்பு செய்யறோம்னு ஓப்பனா பேசலாமா?’ என்று சொல்ல, மற்ற மூவரும் ‘ஒய் நாட்?’ என்று உதட்டைப் பிதுக்கிவிட்டு ஓ.கே சொன்னார்கள்.

இந்தத் திட்டத்துக்குப் பிள்ளையார் சுழி போட்ட முதல் ஆசாமி சொன்னார்: ‘எம் மனசைப் போட்டு அரிச்சிட்டிருக்கிற விஷயத்தை அப்படியே சொல்றேன். திடீர்னு ஒரு ரெண்டு வருஷமா நான் ‘குடி’க்கு அடிமை ஆயிட்டேன். தினமும் ராத்திரி என்னால் குடிக்காம படுக்க முடியல. குவார்ட்டர்ல ஆரம்பிச்சு இப்ப ஹாஃப் வரைக்கும் போயிடுச்சு… நிறுத்தணும்னு பாக்கறேன். முடியவே இல்லை. தெனமும் பொண்டாட்டிகூட தகராறுதான்.’ முதலாவது ஆசாமி இப்படி ஓப்பனாகப் பேசியதும் அனைவரும் ஷாக் ஆனார்கள்.

இரண்டாவது நண்பர் கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பேசினார். ‘நானும் ஒரு விதத்துல உன்னை மாதிரிதான். மூணு வருஷம் முந்தி கும்பகோணத்துல ஒரு கல்யாணத்துக்குப் போனப்ப சீட்டாட ஆரம்பிச்சேன். அது தொடர ஆரம்பிச்சிடுச்சு. என்னன்னு தெரியலை… இப்ப நிறைய கிளப்களுக்குப் போய் சீட்டாடறேன். ரேஸுக்கும் போறேன். எம் பொண்டாட்டிக்கும் எனக்கும் பயங்கர தகராறு. மீண்டு வரவே முடியலை.’

மற்ற மூவரும் அதிர்ச்சி ஆனார்கள்.

மூன்றாவது ஆசாமி அடுத்த அணுகுண்டை வீசத் தயாரானார். ‘நீங்களாவது பரவால்லைனு தோணுது… என்னைப் பத்திச் சொல்ல எனக்கே அசிங்கமா இருக்கு. இந்த அம்பத்தஞ்சு வயசுல எம் புத்தி ஏன்தான் இப்படிப் போகுதுன்னு தோணலை. ஆனா, இதை விட்டு வர்றதுக்கு என்னால முடியல…’

இதுவரைக்கும் தன்னைப் பற்றி எதுவுமே சொல்லாத அந்த நான்காவது ஆசாமி பரபரத்தார். ‘சொல்லு… என்ன ப்ராப்ளம்னு சொல்லு.’ ‘கல்யாணம் பண்ற வயசுல எனக்கு ரெண்டு பொண்ணுங்க இருக்கு. ஆனாலும், பொம்பளை மேல் இருக்கிற மோகம் எனக்குப் போகலை. இதுக்காக அப்பப்ப என் மனைவிக்குத் தெரியாம சில தப்பும் பண்ணிடறேன். சமூகத்துல உயர்ந்த அந்தஸ்துல இருந்துக்கிட்டு இப்படிப் பலரை ஏமாத்தறேனோன்னு பயமா இருக்கு’ என்று அடக்கமான குரலில் சொன்னார்.

இப்போது நான்காவது ஆசாமி மட்டும்தான் சொல்ல வேண்டும். மற்ற மூவரும் சொல்லி விட்டார்கள்.

ஏதோ சாதாரணமாகப் பேசப் போக… மற்ற மூவரிடமும் இப்படிப்பட்ட வக்கிரங்கள் இருக்கும் என்று நான்காவது ஆசாமி கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை போலும்!

தன்னைப் போலவே பிறரையும் நினைக்கும் குணமுள்ள முதல் மூன்று ஆசாமிகளும், நான்காவது ஆசாமி என்ன சொல்லப் போகிறான் என்பதிலேயே குறியாக இருந்தார்கள். ஏனென்றால், அவனும் வீட்டுக்குத் தெரியாமல் நிச்சயம் ஏதாவது தப்பு செய்துதான் வாழ்ந்து வருகிறான் என்று தீர்மானித்து விட்டார்கள்.

அந்த நான்காவது ஆசாமி அப்போதுதான் திருவாய் மலர்ந்தார்: ‘உங்களுக்கே தெரியும். நான் ஒரு பத்திரிகைல சீனியர் நிருபரா வேலை பண்றவன்னு… எனக்கும் ஒரு தவறான குணம் இருக்கு…’

மற்ற மூவரும் உற்சாகமானார்கள் & ‘ஆஹா… இவனும் நம்ம ஜாதிதான்’ என்று.

நான்காவது ஆசாமி ஆரம்பித்தார். ‘அது என்ன குணம்னா ஏதாவது ஒரு செய்தி என் காதுக்கு வந்துட்டா, அதை ரகசியமா வெச்சுக்கற குணம் என்கிட்ட இல்லை. அப்படியே என் பத்திரிகைல போட்டுடுவேன்.’

சமூகத்தில் மிக உயர்ந்த அந்தஸ்தில் இருக்கின்ற அந்த மூன்று நண்பர்களுக்கும் மயக்கம் வராத குறைதான்!

இன்றைக்குப் பார்த்தோம் என்றால், தவறு செய்து விட்டு வருந்துகிறவர்கள்தான் அதிகம். தாங்கள் செய்கிற தவறுகளுக்கு ஜோடி சேர்க்கும் குணம் பலருக்கும் இருக்கிறது.

வாழ்க்கை ரொம்பவும் விசித்திரமானது.

எது கிடைக்கவில்லையோ, அது கிடைக்காதா என்று மனம் ஏங்கும்.

எது எட்டாக் கனியோ, அதைப் பறிக்கத்தான் மனம் ஆசைப்படும்.

அந்த வீட்டில் இருக்கிற பையனுக்குக் கிளி என்றால், ரொம்பவும் பிடிக்கும். எனவே, அவனுடைய அப்பா அழகான ஒரு கிளியை வாங்கிக் கொடுத்தார். ஒரு கூண்டில் அடைத்துக் கிளியை வளர்த்து வந்தான் பையன்.

தினமும் காலையில் கிளிக்கு ஏதாவது ஆகாரம் கொடுப்பான். கிளியைக் கொஞ்சுவான். பாவம், கூண்டுக்குள் இருந்தபடி இவனது உபசாரங்கள் அனைத்தையும் ஏற்றுக் கொள்ளும் அந்தக் கிளி. ஆனாலும், என்றைக்கேனும் ஒரு நாள் கூண்டை விட்டுப் பறந்து வெளியே போய் விட வேண்டும் என்கிற ஆசை மட்டும் சிறகடித்துப் பறக்கும்.

இந்தக் கிளிக் கூண்டுக்கு அருகிலேயே ஒரு பெரிய வேப்ப மரம் இருந்தது. அதில் ஒரு குருவி ரொம்ப நாட்களாக வசித்து வந்தது.

குருவிக்கு இந்தக் கிளியைப் பார்த்தால் பரிதாபம் மேலோங்கும். எனவே, தினமும் காலை வேளையில் எவரும் இல்லாத நேரமாகப் பார்த்து கிளிக்குப் பக்கத்தில் அமர்ந்து ஏதாவது பேசிக் கொண்டிருக்கும்.

திடீரென யாராவது வந்தால், ‘எங்கே தன்னையும் பிடித்துக் கொண்டு போய் கூண்டில் அடைத்து விடுவார்களோ’ என்ற பய உணர்ச்சியில் பொசுக்கெனப் பறந்து போய் தன் இருப்பிடமான மரத்தில் உட்கார்ந்து விடும்.

ஒரு நாள் கிளி கேட்டது: ‘என்ன வாழ்க்கை வாழ்ந்திட்டிருக்கே நீ… உனக்குப் பறக்கும் தன்மையும் சுதந்திரமும் இருந்தும் நீ ஏன் இந்த ஒரே மரத்தில் உட்கார்ந்திட்டு இருக்கே? பல இடங்களுக்குப் பறந்து திரியலாமே… ம்ம்ம்… உன்னை மாதிரி நான் இருந்தா, இந்த ஒரே வேப்ப மரமே கதின்னு கெடக்க மாட்டேன். இந்த வீட்டை விட்டுப் பொறப்பட்டுடுவேன். பல இடங்களுக்கும் சுதந்திரமா பறந்து திரிவேன்.’

அதற்கு அந்தப் புத்திசாலி குருவி சொன்னது: ‘எனக்கு எந்த விதமான கட்டுப்பாடும் கிடையாது. அதனால, வேறு இடத்துக்குப் போகணும்னு தோணலை. கட்டுப்பாடு இருந்தால்தான் அதை மீறணும்னு தோணும்.’

என்ன அழகாக வார்த்தைகள்!

இதுதானே உலகின் யதார்த்தம்!

 

பி. சுவாமிநாதன்