மாபெரும் துரோகங்கள்–கமாடஸ்

இலக்கியம்
commodus-கமாடஸ்

ஐரோப்பாவின் மிகப் பெரிய சாம்ராஜ்யமாகத் திகழ்ந்த ரோம் சாம்ராஜ்ஜியத்தின் பேரரசர் கமாடஸ், மிகுந்த கல்வியறிவு கொண்டவர். இவருடைய காலகட்டத்தில்தான் ரோம் சாம்ராஜ்ஜியம் மிக அமைதியுடன் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், ரோம் சாம்ராஜ்ய வரலாற்றில் அதிகளவில் குடும்பப் பிரச்னைகளால் அவதிப்பட்டவரான இவர், தனது 31 வயதில் ஒரு நம்பிக்கை துரோகத்தின் வாயிலாக தன் உயிரை இழந்தார். போர் அல்லாமல் சாதாரண சூழ்நிலையில் கூட நம்பிக்கைத் துரோகம் நிகழும் என்பதற்கு கமாடஸ் வாழ்க்கை ஒரு உதாரணம்.

 

கமாடஸ், ஐரோப்பாவின் ரோம் நகருக்கு அருகே லெனுவியம் எனும் இடத்தில் கி.பி.161ம் ஆண்டு பிறந்தார். அவருடைய தந்தை மார்க்கஸ், ரோம் சாம்ராஜ்யத்தின் பேரரசராக இருந்தார். கமாடஸ் தனது 5வது வயதை அடையும்போது, கமாடஸுக்கும், அவருடைய சகோதரர் அனியஸ் வேரஸுக்கும், சீசர் பட்டம் கொடுக்கப்பட்டது. கி.பி. 169ஆம் ஆண்டில் அனியஸ் வேரஸுக்கு திடீரென்று உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் பேரரசர் மார்க்கஸ் பதறிப்போனார். நாட்டிலுள்ள முக்கிய மருத்துவர்கள் உடனடியாக அரண்மனைக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள், வேரஸுக்கு சிகிச்சை அளித்தனர். ஆனால், எந்தப் பலனும் கிடைக்கவில்லை. இதனால் அனியஸ் வேரஸ் இறந்து போனான். தன் இளைய மகன் இறப்பு, பேரரசர் மார்க்கஸுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இதுமட்டுமல்லாமல், மூத்தமகனான கமாடஸ் இது போல உடல் நிலை பாதிப்பு வருமோ என்று அவருக்கு பயம் தொற்றிக் கொண்டது. இதனால், பேரரசர் மார்க்கஸ், தனது ஆஸ்தான மருத்துவர் கல்லே என்பவரின் நேரடிப் பார்வையில் தனது மகன் கமாடஸை வளர்க்கத் திட்டமிட்டார். இதுதவிர, கமாடஸுக்கு அறிசார்ந்த கல்விகள் மட்டுமே போதிக்கப்பட்டன. அவருக்கு போர்க்கலை சம்பந்தமான விஷயங்கள் கற்றுக் கொடுக்கவில்லை.

 

கமாடஸ் தனது 16வது வயதை எட்டியபோது பேரரசர் மார்க்கஸ், தன் மகனுக்கு ஆட்சியில் அதிகாரமும், அரசாங்க நிர்வாகப் பயிற்சியும் கொடுக்க விரும்பினார். அதன்படி, அவருக்கு கன்சோல் அதிகாரம் வழங்கப்பட்டது. இதன் மூலமாக எதிர்காலத்தில் கமாடஸ், பேரரசராக வாய்ப்பு அமையும் என்று பேரரசர் மார்க்கஸ் நம்பினார். இந்த சமயத்தில், கி.பி.178ஆம் ஆண்டு, புருட்டியா என்கிற அரச குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணுடன் திருமணம் நடந்தது. கி.பி.180ம் ஆண்டு, பேரரசர் மார்க்கஸுக்கு திடீரென்று நோய்வாய்ப்பட்டு இறந்து போனார்.

 

பேரரசர் பதவிக்கு, அரச குடும்பத்தினர் அனைவரும், கமாடஸை நியமிக்க விரும்பினர். இதன் மூலமாக, கமாடஸ், ரோம் சாம்ராஜ்ஜியத்தின் பேரரசரானார். பேரரசராகி விட்டாலும் கமாடஸுக்கு அண்டை நாடுகளுடன் போரிடுவதில் ஆர்வம் இருக்கவில்லை. இதனால், சாம்ராஜ்ஜியத்தின் எல்லைகளில் ஏற்படும் பிரச்னைகளை சுமுகமாகத் தீர்க்கும் நடவடிக்கைகளில் இறங்கினார். எல்லையில் மீண்டும் அமைதி திரும்பியது. ஆனால், சில மாதங்களில் புது பிரச்னை உருவாகியது. ரோம் சாம்ராஜ்யத்துக்கு பயந்து, கப்பம் கட்டி வந்த சிற்றரசுகள், தங்கள் வரிகளைக் கட்டத் தவறின. பல முறை, ரோம் அரசாங்கம் ஆணை பிறப்ப்பித்தும் வரிகள் சரியாக வரவில்லை. இதனால் சாம்ராஜ்ஜியத்துக்கு வருமானம் குறையத் தொடங்கியது. இந்த தகவல், பேரரசர் கமாடஸுக்கு சென்றது. பேரரசர் கமாடஸ், கவர்னர்கள் மற்றும் சிற்றரசர்களுக்கு நேரடி கடிதம் எழுதினார். அவர்கள், நாட்டில் வறட்சி நிலவுவதால் சரியாக வருமானம் கிடைக்கவில்லை என்று பதில் அனுப்பினர். அவர்களது பதிலை பேரரசர் கமாடஸ் ஏற்றுக் கொண்டார். இதே நிலை மேலும் 2 வருடங்களுக்கு தொடர்ந்தது. இதனால், ரோம் சாம்ராஜ்யத்தின் கஜானா முக்கால்வாசி காலியானது. சாம்ராஜ்யத்தின் பொருளாதாரம் தள்ளாட்டம் கண்டது. நாட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பெரிய பணக்காரர்கள் மற்றும் வியாபாரிகள், பணத்தை பதுக்கி வைக்கத் தொடங்கினர். இதனால் சில்லறைகள் மற்றும் நாணயங்கள் தட்டுப்பாடு ஏற்பட்டது. பேரரசர் கமாடஸ், ரோம் நாணயங்களின் தரம் மற்றும் எடையை குறைத்து வெளியிட ஆணையிட்டார். இது அரசாங்க அதிகாரிகளையும், முக்கிய மந்திரிகளையும் அதிர்ச்சியடையச் செய்தது. மேலும், நாட்டின் முக்கிய அதிகாரிகள் மற்றும் அரச குடும்பத்தினர் தங்களின் செலவுகளைக் குறைத்துக் கொள்ள ஆணையிட்டார். இது, அரச குடும்பத்தினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஆயினும் கமாடஸ் தனது பொழுதுபோக்கும் மற்றும் கேளிக்கை நடவடிக்கைகளைக் குறைத்துக் கொள்ளவில்லை.

 

அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், பேரரசர் கமாடஸுடன் முறையிட்டனர். ஆனால், கமாடஸ் அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கத் தயாராக இல்லை. இதனால், அரச குடும்பத்தினருக்கும், கமாடஸுக்கும் தினமும் சண்டைகள் அதிகரித்தன. சில மூத்த அரசகுடும்பத்தின் உறுப்பினர்கள், நாட்டின் வரி விதிப்பை அதிகரிக்க வேண்டும் என்று ஆலோசனை கூறினர். படைத்தளபதிகள், கப்பம் கட்டாத நாடுகள் மீது படை எடுத்து வரிப் பணத்தை வசூலிக்க வேண்டும் என்று அறிவுரை கூறினர். ஆனால், இவர்களின் ஆலோசனைகளைக் கமாடஸ் ஏற்கவில்லை. இதனால், அரச குடும்பத்தினர் பேரரசர் கமாடஸ் மீது கடும் வெறுப்புடன் இருந்தனர். பல இளவரசர்கள், கமாடஸுக்கு ஆட்சி செய்யத் தெரியவில்லை என்று நேரடியாகக் கருத்து தெரிவித்தனர்.

 

பேரரசர் கமாடஸ் அவர்களது கருத்துகளுக்கு செவி சாய்க்கவில்லை. இந்நிலையில், வழக்கம்போல, ஒரு நாள் பேரரசர் கமாடஸ் தனது கேளிக்கை அரங்கத்துக்குச் சென்றார். அப்போது அரசங்கத்தின் வாசலில் அவர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால், பேரரசரின் மெய்க்காப்பாளர்கள் அதிரடியாக செயல்பட்டு கொலையாளிகளை பிடித்ததுவிட்டனர். பேரரர் கமாடஸ் உயிர் தப்பினார். கைது செய்த கொலையாளிகளிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பேரரசரைக் கொல்ல மாபெரும் சதித்திட்டம் தீட்டப்பட்டது என்பதும் அதை பேரரசரின் சகோதரி லுசிலா தனது கூட்டாளிகளுடன் திட்டமிட்டார் என்பதும் தெரிந்தது. இதைக் கேட்டவுடன் பேரரசர் கமாடஸ் பெரும் அதிர்ச்சியடைந்தார். லுசிலாவின் கூட்டாளிகளுக்கு மரண தண்டனை அறிவிக்கப்பட்டது. ஆனால், தனது சகோதரி லுசியாவைக் கொல்ல கமாடஸுக்கு மனமில்லை. அவளை உடனடியாக நாடுகடத்தி, காப்பிரியா எனும் இடத்தில் சிறை வைக்க கமாடஸ் ஆணையிட்டார்.

 

இந்த சதித்திட்டம், பேரரசர் கமாடஸின் மனதை பாதித்துவிட்டது. அதிலும் தன் சகோதரியே, தன்னை கொல்லும் அளவுக்கு துணிந்த செயலை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. இந்நிலையில் மேலும் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்தேறியது. பேரரசர் கமாடஸின் நம்பிக்கைக்குப் பாத்திரமான, சயோடர் என்ற அதிகாரி மர்மமான முறையில் கொல்லப்பட்டார். இது பேரரசர் கமாடஸின் மனதை மேலும் பாதித்தது. இந்நிலையில், அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பில் இருக்கும் அரச குடும்பத்தினர் தங்களது வேலைகளை சரிவரச் செய்யவில்லை என்பது கமாடஸுக்கு தெரிந்தது.

உடனே அவர்களை அழைத்து விளக்கம் கேட்டார். அவர்கள் சரியான பதிலை கூறாத காரணத்தால் அவர்களை பணியிருந்து நீக்கினார். அந்த பதவிகளை கமாடஸே ஏற்றுக் கொண்டார். இதனால் உள்நாட்டு அரசு நிர்வாகம் அனைத்துமே கமாடஸின் கையில் வந்தது. அரசின் நிர்வாக செயல்பாடுகள் ஆராய்ந்தார். செயல்பாடுகள் அனைத்துமே அவருக்கு பிடிக்கவில்லை. புதிய மாற்றங்கள் கொண்டு வர கமாடஸ் முடிவெடுத்தார். அதன் முதல்படியாக, நூற்றுக்கணக்கான கணக்காளர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளை பணி இருந்து நீக்கினார். இது ஆட்சி நிர்வாகத்தில் உள்ள அரச குடும்பத்தினர் மற்றும் மூத்த மந்திரிகளை அதிர்ச்சியடையச் செய்தது. இதனால் அரச குடும்பத்தினருக்கும் பேரரசருக்கும் இடையே நேரடியாக மோதல் ஏற்பட்டது. அரச குடும்பத்தினர் அனைவருமே பேரரசர் கமாடஸின் நெருங்கி உறவினர் மற்றும் தூரத்து சொந்தங்கள் என்ற காரணத்தால் பேரரசரால் அவர்களை நாடு கடத்தவோ, அடக்கி வைக்கவோ முடியவில்லை. இதுதவிர, மற்ற முக்கிய அரசு பதவிகளில் இருக்கும் தங்களது பொறுப்புகளை செய்ய அலட்சியம் காட்டினர். இதன் காரணமாக, பல்வேறு அரச திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் முடங்கிப் போயின.

 

அடுத்த சில மாதங்களில், பேரரசர் கமாடஸுக்கு அதிர்ச்சிகரமான தகவல்கள் உளவாளிகள் மூலமாக வந்தன. அதாவது கமாடஸைக் கொல்ல பல்வேறு சதித்திட்டங்கள் தீட்டப்படுகின்றன என்பதுதான். இதனால், கமாடஸ் பயந்து போனார். யாரை நம்புவது? யாரை நம்பாமல் இருப்பது? என்ற மனக்குழப்பத்தை சிக்கினார். பல நாட்கள் தூக்கம் இன்றி தவித்தார். ஒரு நாள் காலை எழுந்து கமாடஸ், உடனடியாக நம்பிக்கைக்குப் பாத்திரமாக முக்கிய அதிகாரிகள் சிலரை அழைத்தார். தனது பாதுகாப்பு குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். அவர்கள் ரோம் நகருக்கு வெளியே இருக்கும் லெனுவியம் எனும் இடத்தில் தங்குமாறு ஆலோசனை கூறினர். இது தவிர அரசாங்கத்தின் செயல்பாடுகளை கவனிக்க முக்கிய பொறுப்பாளர்களை நியமிக்குமாறு கூறினர்.

 

அதன்படி கிளிண்டர், பேரின்னஸ், பெண்டாரிக்ஸ் போன்ற அனுபவம் வாய்ந்த அதிகாரிகளிடம் அரசாங்க நிர்வாகங்கள் பகிர்ந்து அளிக்கப்பட்டன. நிதி நிர்வாகம், ராணுவம், வெளியுறவு செயல்பாடுகள், வரி வசூல் போன்ற பேரரசர் கமாடஸுடைய முக்கிய பொறுப்புகள் இவர்களிடம் கொடுக்கப்பட்டன. இதன்படி, தவறுகள் நடந்தால் அது கமாடஸ் மீது சுமத்தப்படாமல் இருக்க இந்த திட்டம் அரங்கேற்றப்பட்டது. இதன் மூலமாக, புதிய அதிகாரிகளை நியமிக்கும் பொறுப்பு கிளிண்டருக்கு வந்தது. முதல் 3 வருடங்களில் பெரிய மாற்றங்கள் எதுவும் நிகழ்ந்ததாக தெரியவில்லை. இந்நிலையில், ரோம் சாம்ராஜ்யத்தின் எல்லைப் பகுதிகளில் மீண்டும் பிரச்னைகள் அதிகரித்தது. அது தவிர, சாம்ராஜ்யத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் கவுல் பகுதிகளில் கிளர்ச்சிகள் வெடித்தன. கிளர்ச்சிகளை அடக்க ரோம் நகரில் இருந்து படைகள் அனுப்பப்பட்டன. ஆயினும் ஒவ்வொரு நாளும் கிளர்ச்சிகள் அதிகரித்தபடியே இருந்தன.

 

இந்நிலையில், 187ம் ஆண்டு, ரோம் நகருக்கு அருகே ஒரு கேளிக்கை நிகழ்ச்சியில் ஈடுபட்டிருந்த பேரரசர் கமாடஸ் மீது கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த முறையும் அதிர்ஷ்டவசமாக பேரரசர் தப்பினார். கொலையாளிகள் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையின் போது கொலையாளிகள் முன்னாள் படைவீரர்கள் என்பதும் கவுல் பகுதிவாசி என்பதும் தெரியவந்தது. இதுதவிர, படைவீரர்கள் கடும் அதிருப்தியில் இருப்பது தெரியவந்தது. அப்போதுதான் முதன் முறையாக படைவீரர்கள், தளபதிகள் சந்திக்கும் பிரச்னைகள் பேரரசர் கமாடஸுக்கு தெரியவந்தது. ஒரு நாட்டின் பாதுகாப்பு படைவீரர்களின் பங்கு எவ்வுளவு முக்கியம் என்பது அப்போதுதான் பேரரசர் கமாடஸுக்கு தெரியவந்தது. இது தவிர, பதவி நியமனம், ஆயுத பேரம் போன்றவற்றில் நடக்கும் ஊழல்களும் தெரியவந்தன. உடனே அவற்றைக் குறித்து விசாரிக்க ஒரு குழுவை பேரரசர் கமாடஸ் நியமித்தார். அந்த குழு, விசாரணையில் பல்வேறு உண்மைகளை வெளியே கொண்டு வந்தது.

 

ராணுவம் நிர்வாகம் சம்பந்தமான துறைகளில் பெரிய ஊழல் நடந்திருப்பது தெரியவந்தது. புதிதாக பதவி ஏற்ற கிளிண்டர், ராணுவ பதவிகள், பணத்திற்காக விற்பனை செய்தது அம்பலம் ஆனது. இதை எதிர்த்த படைவீரர்களை ராணுவத்தில் இருந்து கிளிண்டர் நீக்கியதும் தெரியவந்தது. இவற்றை அறிந்தவுடன் பேரரசர் கமாடஸ் கடும் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக கிளிண்டர் மற்றும் அவரது மகனைக் கைது செய்யுமாறு ஆணையிட்டார். நேரடியாக அவர்களிடம் இந்த ஊழல் பற்றி விசாரணை நடத்தப்பட்டது. இறுதியில், ஊழல் நடந்ததற்காக ஆதாரங்கள் இருந்ததால் அவர்கள் இருவரும் தூக்கிலிடப்பட்டனர்.

 

நாட்டின் நிர்வாகம், பல்வேறு காரணங்களால் சீர்குலைந்து இருப்பதை நினைத்து பேரரசர் கமாடஸ் பெரும் வருத்தத்துடன் இருந்தார். இந்நிலையில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடைபெற்றது. கி.பி 192ம் ஆண்டு பேரரசர் கமாடஸ், தனது அரண்மனைக் குளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த செய்தி கேட்டு ரோம் சாம்ராஜ்ஜியமே அதிர்ச்சியடைந்தது. அடுத்த நாள் ரோம் அரசவையில் பெண்டாரிக்ஸ் என்கிற செனெட் உறுப்பினர், பேரரசர் பதவிக்கு தன்னை நியமிக்குமாறு கோரிக்கை வைத்தார். அவரது கோரிக்கையை ஏற்று பெரும்பாலான உறுப்பினர்கள் மற்றும் சில அரச குடும்பத்தினர் பெண்டாரிக்ஸைப் பேரரசராக அமர வைத்தனர்.

 

ஒரு செனட் உறுப்பினர் தன்னை அரசராக்க வேண்டும் என கோரிக்கை வைப்பதையும், அந்தக் கோரிக்கையைப் பலரும் ஏற்றுக் கொண்டு அவரை அரசராக்கியதையும், இதற்கு அரச குடும்பத்தின் உறுப்பினர்கள் சிலரே ஆதரவாக இருப்பதையும் கண்டு அரச குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் கடும் அதிர்ச்சிக்கு ஆளானார்கள். உளவாளிகள் மூலமாக பெண்டாரிக்ஸ் பற்றியும், கமாடஸ் மரணம் பற்றியும் விசாரணையை நடத்தினர். சில நாட்களிலேயே அவர்களுக்கு இன்னும் அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரியவந்தது. பெண்டாரிக்ஸுடைய சதித் திட்டத்தாலேயே பேரரசர் கமாடஸ் கொல்லப்பட்டார் என்பது தெரியவந்தது. பேரரசர் கமாடஸின் நம்பிக்கையான அதிகாரியாக வேலை செய்து வந்த பெண்டாரிக்ஸ் இப்படி ஒரு துரோகத்தை செய்ததை யாராலும் நம்பவில்லை. இதுமட்டுமல்லாமல் அரசவையில் இருந்து முக்கிய உறுப்பினர்கள் மற்றும் சில குடும்ப உறுப்பினர்களுக்கு பெரும் பணம் கொடுத்து தனக்கு வாக்களிக்குமாறு கட்டாயப்படுத்தியதும் தெரியவந்தது. உடனடியாக, மூத்த அரசகுடும்பத்து உறுப்பினர்கள் ஒன்று கூடினர். அவர்கள் அனைவரும் பெண்டாரிக்ஸின் பேரரசர் பதவியைப் பறித்தனர்.

 

இதில் இருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், பேரரசர் கமாடஸ் எண்ணற்ற தவறுகள் செய்துள்ளார். அதில் அவர் செய்த மிகப் பெரிய தவறு என்னவென்றால், மனித மனங்களையும், அவற்றின் சுபாவங்களையும் அவர் கற்கத் தவறியதுதான். அதன் காரணமாக யாரை நம்புவது? யாரை நம்பாமல் இருப்பது? என்கிற குழப்பத்தில் சிக்கினார். இதை பயன்படுத்தி அவரிடம் நெருக்கமாக இருந்தவனே அவருக்கு துரோகம் செய்துவிட்டார். எப்போதுமே, புத்திசாலியான ஊழியனை விட நம்பிக்கையான ஊழியனே சிறந்தவன்!

கிருஷ்ணா