நன்றி மறவாத மாமனிதர் எம்.ஜி.ஆர்!

கட்டுரைகள் கலை
MGR-M.K.Radhason M.R.Raja

 

தன்னுடைய திரைப்படங்களில் பாடி நடித்ததைப் போலவே, நிஜ வாழ்விலும் மனிதருள் மாணிக்கமாக வாழ்ந்து காட்டியவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள். எம்.ஜி.ஆரின் மகத்தான குணநலன்கள் பற்றி சொல்ல எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. அவைகளில் ஒன்றுதான் ‘நன்றி மறவாத நல்ல மனம் போதும். என்றும் அதுவே என் மூலதனம் ஆகும்!’ என்கிற புரட்சித்தலைவரின் நன்றி மறவாமை!

ஏறி வந்த ஏணியை எட்டி உதைக்கும் மனிதர்கள் மத்தியில், ஒரு சினிமா நடிகராக உச்சம் தொட்ட போதும் சரி.. அரசியல் வாழ்வில் முதல் அமைச்சராக உச்சம் தொட்ட போதும் சரி.. தன்னை உருவாக்கியவர்களை மறவாமல் தன்னுடைய செயல்களின் மூலம் நன்றிக்கடன் செலுத்திக் கொண்டே இருந்தார் எம்.ஜி.ஆர்.

முதல்வரான பிறகும் கௌரவம் பார்க்காமல் பகிரங்கமாக இரண்டு பேரின் கால்தொட்டு எம்.ஜி.ஆர் வணங்கியிருக்கிறார். ஒருவர் இந்திப்பட இயக்குநர் சாந்தாராம், இன்னொருவர் பிரபல வசனகர்த்தா கே.கந்தசாமி முதலியாரின் மகனும் பிரபல நடிகருமான எம்.கே.ராதா. இதுபற்றி, எம்.கே.ராதாவின் புதல்வரும், எம்.ஜி.ஆரிடம் நெருங்கிப் பழகியவருமான எம்.ஆர்.ராஜா அவர்கள் எம்.ஜி.ஆரைப் பற்றி இப்படிச் சொல்லியிருக்கிறார்.

M.K.RadhaSon-M.R.Raja

 

“எங்க தாத்தா கந்தசாமி முதலியார் ‘மதுரை ஒரிஜினல் பாய்ஸ்’ நாடகக் கம்பெனியை நடத்தி வந்தார். அதில் 70 கலைஞர்கள் இருந்தனர். என் அப்பா எம்.கே ராதா, என்.எஸ்.கிருஷ்னன், டி.ஏ.மதுரம், டி.எஸ்.பாலய்யா போன்றோருடன் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரும், தன்னுடைய சகோதரர் எம்.ஜி.சக்கரபாணியுடன் எங்கள் தாத்தாவின் நாடகக் கம்பெனியில் இருந்தார்கள். உள்ளூர், வெளியூர், வெளிநாடுகள் என்று எங்கு நாடகங்கள் போட்டாலும் என் தாத்தா இவர்களை எல்லாம் அழைத்து கொண்டு செல்வார். கிட்டத்தட்ட அறுபதுக்கும் மேற்பட்ட நாடகங்கள் போட்டிருக்கிறார். வை.மு.கோதைநாயகி, பம்மல் சம்மந்த முதலியார், ரெங்கராஜன் இப்படி பலருடைய கதைகளை வாங்கி, அதை நாடக வடிவமாக்கி வசனங்களை என் தாத்தா எழுதுவார்.

 

சிறுவயது முதற்கொண்டு எம்.ஜி.ஆர் அவர்களும், அவரது அண்ணன் எம்.ஜி.சக்கரபாணி அவர்களும் என் தாத்தா மீதும் என் அப்பாவின் மீதும் அளவு கடந்த அன்பும் பாசமும் கொண்டிருந்தார்கள். நாடகத்தில் எல்லோரும் எல்லா வேஷங்களும் போட்டு நடிக்கும் திறன் பெற்றிருந்தார்கள். அப்போது கோயமுத்தூரைச் சேர்ந்த மருதாசலம் செட்டியார் என்பவர் படம் எடுக்கப் போகிறார் என்ற தகவலைக் கேள்விப்பட்டு, ‘சதிலீலாவதி’ கதையைக் கூறியிருக்கிறார். கதை பிடித்துப் போனதால்  ‘மருதாசலம்’ படம் எடுக்கச் சம்மதித்துவிட்டார். இந்தக் கதையை அன்றைய ஆனந்த விகடன் ஆசிரியரும், ஜெமினி ஸ்டுடியோ அதிபருமான எஸ்.எஸ்.வாசன் எழுதியிருந்தார். படம் எடுப்பது என்று முடிவானதும் என் அப்பா எம்.கே ராதா கதாநாயகனாகவும், கதாநாயகியாக என் தாயார் ஞானாம்பாளும், வில்லனாக டி.எஸ்.பாலய்யாவும் நடிப்பது என முடிவானது. இந்தக் கதையில் வரும் இன்ஸ்பெக்டர் வேடத்திற்கு யாரைப் போடுவது என்ற யோசனை வந்தபோது, எம்.ஜி.ஆரை அப்பா சிபாரிசு செய்திருக்கிறார். எல்லோரும் ஒப்புக் கொண்ட பின், அந்த வேடத்திற்காக சம்பளம் ரூ.150 என்று முடிவு செய்து அட்வான்ஸாக ரூ.100ஐ வாங்கி என் அப்பா எம்.ஜி.ஆருக்குக் கொடுத்தார். திரையுலகில் எம்.ஜி.ஆர் நுழைவதற்கு ‘சதிலீலாவதி’ முழுமுதற் காரணமாக இருந்ததால் தன் இறுதிக்காலம் வரை என் அப்பாவின் மீதும் எங்கள் குடும்பத்தின் மீதும் உண்மையான பாசமும், மரியாதையும் கொண்டிருந்தார்.

majordasan-மேஜர்தாதசன்

 

‘சதிலீலாவதி’ படத்தைத் தொடர்ந்து அப்பா பிஸியான நடிகராகிவிட்டார். ‘மாயா மச்சிந்திரா’, ‘அனாதைப் பெண்’, ‘போர்டர் கந்தன்’, ‘சந்திரலேகா’, ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘சம்சாரம்’, ‘தாஸி அபரஞ்சி’, ‘வணங்காமுடி’, ‘புதையல்’, ‘நீலமலைத் திருடன்’.. இப்படி 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டார். ‘சதிலீலாவதி’யைத் தொடர்ந்து எம்.ஜி.ஆரின் வழி ராஜபாட்டையாகிவிட்டது. படிப்படியாக கதாநாயகன் அந்தஸ்துக்கு உயர்ந்து, மக்கள் மனதைக் கவர்ந்த சூப்பர் ஹீரோவாக உயர்ந்து, அதன்பிறகு அரசியலிலும் கால்பதித்திருந்தார். அப்போது நாங்கள் மயிலாப்பூர் பிருந்தாவன் தெருவில் இருந்தோம். சினிமாவில் நடிப்பதிலிருந்து விலகி அப்பா ஓய்வில் இருந்தார்.

 

அப்போது வந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க அமோக வெற்றி பெற்றது. எம்.ஜி.ஆர் தமிழக முதல்வராக பொறுப்பேற்கப் போகிறார் என்று கட்சியினரும், ரசிகர்களும், எம்.ஜி.ஆர் அபிமானிகளும் உற்சாகத்தில் இருந்தார்கள். எல்லாப்பக்கமும் எம்.ஜி.ஆர் பற்றியே பேச்சாக இருந்தது. முதன்முதலில் பதவி ஏற்க இருந்த அன்று காலை 7.00 மணிக்கு எங்கள் வீட்டிற்கு ஒரு தொலைபேசி அழைப்பு. சாதாரணமாக ஹலோ சொன்னால், ‘எம்.ஜி.ஆர் 8:15 மணிக்கு உங்கள் வீட்டிற்கு வரப்போகிறார். தயாராக இருங்கள்’ என்று ஒருவர் தகவல் சொன்னார். முதல்வர் பொறுப்பேற்கப் போகிற நேரத்தில் நம் வீட்டுக்கு வருவதாகச் சொல்கிறார்களே என்று நாங்கள் நம்பவில்லை. ஆனால், சரியாக 7:30 மணிக்கு எங்கள் தெருவில் போலீஸ் வேன் ஒன்று வந்து நின்றது. அப்போதுதான் நாங்களும் உஷாராகி பரபரப்பானோம். சரியாக 8:15 மணிக்கு எம்.ஜி.ஆர் வந்தார். எங்களுக்கெல்லாம் ஆச்சரியமும் ஆனந்தமும் தாங்கமுடியவில்லை. எங்கள் எல்லோரையும் நலம் விசாரித்துவிட்டு, மாடியில் இருந்த அப்பாவின் அறைக்கு கிடுகிடுவெனறு வேகமாக படி ஏறிவிட்டார். அப்பா அறைக்கு முன் இருந்த என் தாத்தா படத்தைத் தொட்டு வணங்கினார். என் அப்பா பெருமிதத்தோடு எம்.ஜி.ஆரைப் பார்த்துக் கொண்டிருந்தார். திடீரென்று என் அப்பாவிடம், ‘‘அண்ணா.. இப்படி வந்து நில்லுங்கள்” என்றார். என்ன என்று புரியாமல் அப்பா வந்து நின்றார். உடனே அப்பாவின் காலில் விழுந்து நமஸ்காரம் செய்தார். சுற்றி இருந்த நாங்கள் எல்லோரும் மெய்சிலிர்த்துப் போனோம்.

என் அப்பா, ஆனந்தக் கண்ணீருடன், ‘‘தம்பி, நீங்க இப்போ முதல்வர் ஆகிட்டீங்க. கோட்டையில் பதவி ஏற்பதற்கு முன்னால் என்னை சந்திக்க வந்தீர்களே.. உங்கள் எண்ணத்தை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன்” என்றார். அதற்கு எம்.ஜி.ஆர், ‘‘என் வாழ்க்கையில் விளக்கேற்றி வைத்த முதல் ஜோதி நீங்கள்தான். என்னைப் போன்ற பலருக்கும் உங்கள் அப்பா வழிகாட்டியாக இருந்தார். இது என்னுடைய கடமை!’’ என்றார்.

“தம்பி.. என்னைப் பெரிய மனுஷனாக்கிட்டீங்க.. ரொம்ப சந்தோஷமா இருக்கு.. நீங்க இன்னும் நல்லாருக்கணும்.. உலகப் புகழ் பெறணும்..’’ என்று அப்பா வாழ்த்தினார். எம்.ஜி.ஆர். அவர்களுக்கு சற்றுநேரம் பேச்சே வரவில்லை.

மீண்டும் அப்பாவே, ‘‘அண்ணா சிலைக்கு மாலை போடாம சட்டசபைக்குப் போக மாட்டீங்களே?’’ என்று அப்பா கேட்டார். ‘‘உங்களைப் பார்த்து ஆசி வாங்கிவிட்டேன். அடுத்தது அண்ணா சிலைக்கு மாலை போட்டுவிட்டுதான் கோட்டைக்குப் போகிறேன். அரசியலுக்கு வழிகாட்டி அண்ணா. என் வாழ்க்கைக்கு வழிகாட்டி நீங்கள்.. உங்கள் இருவருக்கும் மரியாதை செய்ய வேண்டும் என்றுதான் இந்த அவசரத்திலும் வந்தேன்.’’ என்றார் எம்.ஜி.ஆர். அப்போது என் அம்மா ஞானாம்பாள், ‘ஏதாவது சாப்பிட்டுவிட்டு போங்க தம்பி?’ என்றார்.. ‘அம்மா, உங்க கையால பலமுறை சாப்பிட்டிருக்கேன். உங்க குழந்தைகளுக்கு சாப்பாட்டை உருட்டி உருட்டி கையில் கொடுக்கும்போது எனக்கும் கொடுத்திருக்கீங்க. உங்க வீட்டு கல்யாணத்துக்கெல்லாம் வந்து சாப்பிட்டிருக்கேன். கல்யாண சமயத்துல ஷூட்டிங் இருந்தா, ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சாப்பாடு கொடுத்து அனுப்புவீங்க. இது நம்ம வீடு. எப்போ வேணாலும் வந்து சாப்பிட்டுக்குவேன். இப்போ நேரம் இல்லை. தண்ணீர் மட்டும் இப்போ கொடுங்க” என்று தண்ணீர் குடித்துவிட்டு உடனே கிளம்பிவிட்டார்.

அவர் சொன்னதுபோலவே, அவர் எவ்வளவுதான் உயரத்துக்குப் போன போதும் எவ்வளவு பிஸியாக இருந்தபோதும் எங்கள் வீட்டு விசேஷம் என்றால் ஜானகி அம்மாவோடு வந்து வாழ்த்திவிட்டு, சாப்பிட்டுவிட்டுத்தான் செல்வார். மனோகரன், ரவீந்திரன், கமலாதரன், கமலா சீதாராமன், இந்திரா ரவிராஜன், எம்.ஆர்.சுகுமாரன், விஜயன், நான் என்று அண்ணன் தங்கைகள் நாங்கள் மொத்தம் எட்டு பேர். எங்கள் எல்லோரின் திருமணத்திற்கும் ஜானகி அம்மாளோடு வந்திருந்தார். அப்பா, தாத்தாவின் மீது அவர் வைத்திருந்த பாசம், மரியாதையின் அடையாளம் அது!

எனக்கு திருமணப்பரிசாக ஒரு பெரிய கிஃப்ட் பார்சல் கொடுத்துவிட்டுச் சென்றார். அதில் ஆறு பெரிய வெள்ளி டம்ளர்கள் இருந்தது. அதை நான் இன்றுவரை பாதுகாத்துக் கொண்டிருக்கிறேன்.

 

அப்பா 25-08-1985 அன்று இறந்துவிட்டார். நான் அப்போது என் வெளிநாட்டு நண்பர்களுடன் திருப்பதி சென்றிருந்தேன். திருப்பதி கோயிலுக்குச் சென்று இருப்பதைக் கேள்விப்பட்ட எம்.ஜி.ஆர், கோயில் தேவஸ்தானத்தின் மைக் மூலம் என் பெயரைக் கூறி உடனே சென்னைக்கு புறப்பட்டு வர ஏற்பாடு செய்தார். உடனே கார் மூலம் சென்னைக்கு விரைந்தேன். அதையெல்லாம் இன்று நினைத்தாலும் என் உடலெல்லாம் புல்லரிக்கிறது. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் எப்படி எங்களையும் எங்கள் குடும்பத்தாரையும் கடைசிவரையில் மறக்காமல் இருந்தாரோ நாங்களும் எம்.ஜி.ஆர் அவர்களை என்றுமே மறக்காமல் தெய்வமாக நினைத்து வணங்கி வருகிறோம்!’’ என்று சொல்லியிருக்கிறார் எம்.கே ராதாவின் மகன் எம்.ஆர்.ராஜா.

இதனால்தான் எம்.ஜி.ஆர் அவர்களை  ‘பொன்மனச் செம்மல்’ என்றும்,  ‘புரட்சித் தலைவர்’ என்றும்,  ‘மக்கள் திலகம்’ என்றும் எல்லோரும் கொண்டாடுகிறார்கள்.

 

மேஜர்தாசன்