தொப்பையைக் குறைக்க சூப்பர் வழி!

slider மருத்துவம்
shyny-chandran-சைனி-சந்திரன்

ஸ்லிம்மாக இருப்பதுதான் அழகு என்று இளம்வயது பெண்கள் அதற்காக மெனக்கெடுவது உண்டு. ஆனால், இன்று பாரபட்சமில்லாமல் எல்லாத் தரப்பினருக்கும் ஒல்லியாக இருக்க வேண்டும் என்ற அக்கறை வந்துவிட்டது. டயன் பற்றி பத்திரிகைகளில் தேடிப் படிப்பதும், தானாகவே ஒரு டயட்டைப் பின்பற்றுவதும், மற்றவர்களுக்கு ஆலோசனை சொல்வதும் இன்று பரவலான பழக்கமாகிக் கொண்டிருக்கிறது. உணவுப் பழக்க வழக்கங்கள் இதில் எந்த அளவுக்கு முக்கிய இடத்தைப் பிடிக்கிறது, நாம் என்ன செய்ய வேண்டும்? என்பது பற்றி  ‘டயட்டீஷியன்’ ஷைனி சந்திரனிடம் பேசுவோம்..

ஒல்லியாக இருப்பதுதான் அழகு, ஒல்லியாக இருப்பதுதான் ஆரோக்கியம் என்று பெரும்பாலானோர் நினைக்கிறார்கள். இந்தக் கருத்து சரியானதுதானா?

“இது தவறான கருத்து. ஒல்லியாக இருப்பது ஆரோக்கியம் என்றும் சொல்ல முடியாது, குண்டாக இருப்பது ஆரோக்கியக் குறைவு என்றும் சொல்லிவிட முடியாது. ஒருவரது வாழ்க்கை முறையையும், உணவுப் பழக்கத்தையும் வைத்துதான் இதைத் தீர்மானிக்க முடியும். ஒருவர் குண்டாக இருந்தாலும், அதற்கேற்றார்போல் கடினமாக உழைக்கிறவராகவோ, உடற்பயிற்சி செய்பவராகவோ இருந்தால் பிரச்னை இல்லை. ஒல்லியாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தேவையான அளவுகூட சாப்பிடாமல் பட்டினி கிடந்து ஒல்லியாக இருப்பதும் ஆபத்தானதுதான்.”

கொஞ்சம் விரிவாகச் சொல்லுங்களேன்?

“ஒருவர் போதுமான எடையுடன் இருக்கிறாரா அல்லது எடை குறைவாக இருக்கிறாரா அல்லது குண்டாக இருக்கிறாரா என்பதை பி.எம்.ஐ மூலம்தான் அளவிட முடியும். அதாவது, ஒருவரது உடல் எடையையும் உயரத்தையும் வைத்துக் கணிப்பதுதான் பி.எம்.ஐ. அளவு. இந்த பி.எம்.ஐ அளவு 18.5 முதல் 23 வரை இருப்பதுதான் ஆசியாவைப் பொறுத்தவரை ஆரோக்கியமானது என்று வரையறுத்திருக்கிறார்கள். விளம்பரத்துறையில் இருக்கும் நட்சத்திரங்கள் கூட இந்த பி.எம்.ஐ அளவைத்தான் பின்பற்றுகிறார்கள். இதில் 18.5க்குக் குறைவாக பி.எம்.ஐ அளவு இருந்தால் அது ஆரோக்கியமானது இல்லை. இவர்களுக்கு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்படும், முடி கொட்டும், தோல் பகுதி பார்ப்பதற்கே ஆரோக்கியக் குறைவாகத் தெரியும். பெண்களாக இருந்தால் மாதவிலக்கில் பிரச்னை வரும், ஹார்மோன்களின் நிலையில் தடுமாற்றம் இருக்கும், கர்ப்பிணியாக இருந்தால் குழந்தையை நல்ல முறையில் பெற்றெடுப்பதே சிரமமான விஷயமாகிவிடும்.’’

ஒல்லியாக இருக்க முடியாததற்கு என்னென்ன காரணங்கள் இருக்கின்றன?

“உடல் உழைப்பு குறைந்துவிட்டது. பக்கத்துத் தெருவில் இருக்கும் சூப்பர் மார்க்கெட்டுக்குக் கூட பைக்கில் சென்றுவரும் நிலைதான் இன்று இருக்கிறது.  மேலும், எந்தத் திட்டமிடுதலும் இல்லாமல் சமைப்பது. பெரும்பாலும் இந்தத் தவறு இரவு உணவுகளில்தான் நடக்கிறது. அதிக கலோரிகள் உள்ள உணவை இரவில் சாப்பிடுவது அல்லது வருகிற வழியில் ஏதாவது டிபன் செய்வதற்கு வாங்கி வந்து சமைப்பது, மிக்சர், முறுக்கு, பக்கோடா என்று நிறைய சைட்டிஷ் சேர்த்து சாப்பிடுவது என்று நிறைய தப்பு செய்கிறோம். போதுமான அளவு காய்கறிகள் சாப்பிடுவதில்லை. உடற்பயிற்சி செய்வது இல்லை. சர்க்கரை அளவு அதிகம் உள்ள உணவுகள், கலர் கலராக இருக்கும் உணவுகளை விரும்பி உண்பது போன்ற பல காரணங்கள் இருக்கின்றன. ஹார்மோன் குறைபாடுகளுக்கும் இதில் முக்கியப் பங்கு இருக்கிறது. ஆண்களைவிட பெண்களுக்கு இந்த ஹார்மோன் குறைபாடுகள் அதிகம்.’’

சைனிசந்திரன்-shinychandran

 

எடையைக் குறைப்பதற்காக சிலர் தானாகவே ஒரு டயட்டைப் பின்பற்றுகிறார்களே?

“நமக்கு உடம்பு சரியில்லை என்றால் டாக்டரிடம் போகிறோம். அதுபோல், இதற்கும் ஒரு ஒரு டாக்டரிடமோ அல்லது டயட்டீஷியனிடமோ சென்று அட்வைஸ் பெற்றுக் கொள்வதே சரியானது. ஏனெனில், ஒருவர் ஆரோக்கியமாக வாழ உடல் ரீதியாக என்னென்ன தேவை என்பதை ஒரு டாக்டரால்தான் கணிக்க முடியும். உங்களுடைய உடம்பில் என்னென்ன பிரச்னைகள் இருக்கின்றன, என்ன மாதிரியான சத்துகள் தேவை, உங்களுடைய வாழ்க்கை முறை என்ன என்பதையெல்லாம் அலசி ஆராய்ந்துதான் உங்கள் டயட்டை டாக்டரோ, டயட்டீஷியனோ முடிவு செய்வார்.’’

இன்னொருவர்  பின்பற்றும் டயட்டை நாமும் பின்பற்றலாமா?

“டயட் சார்ட் என்பது டைலரிடம் சென்று உங்களுக்கே உங்களுக்கென்று பிரத்யேகமாகத் தைத்துக் கொள்ளும் உடை போன்றது. இதில், உடல் ரீதியான விஷயங்களை மட்டும் டாக்டர்கள் கவனத்தில் கொள்வது இல்லை. நீங்கள் வேலைக்குப் போகிறவரா, கூட்டுக் குடும்பத்தில் இருக்கிறவரா, ஹாஸ்டலில் தங்கிப் படிப்பவரா, தனியாக சமைத்து சாப்பிடுபவரா, ஹோட்டலில் சாப்பிடுபவரா என்ற வாழ்க்கை முறையும் இதில் இருக்கிறது. ஒவ்வொருவரின் உடல் அமைப்பும் வேறு வேறு. அதனால், ஒரு குடும்பத்திலேயே அப்பாவுக்குக் கொடுக்கிற டயட் சார்ட்டை பையனுக்குக் கொடுக்க முடியாது. தம்பிக்குக் கொடுக்கிற சார்ட்டை அக்கா ஃபாலோ பண்ண முடியாது. நாமே ஒரு டயட்டை பின்பற்றுவது நிறைய பிரச்னைகளில் கொண்டு விட்டுவிடும்.’’

தானாகவே எடையைக் குறைப்பதால் உடலில் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்?

“புத்தகங்களில் படிப்பது, இண்டர்நெட் தகவல்கள், நண்பர்கள் சொல்வது என்று பல தகவல்களின் அடிப்படையில் இந்த டயட்டை உருவாக்கிக் கொள்வார்கள். செல்ஃப் டயட் இருப்பதாகச் சொல்பவர்களிடம் முதலில் கால்சியம் போதுமானதாக இருக்கிறதா என்று பார்ப்போம். காரணம், பால் உணவுப் பொருட்களைத் தவிர்த்திருப்பார்கள். இப்போது பரவலாக, ‘முட்டையின் மஞ்சள் கருவை சாப்பிட மாட்டேன்’ என்று தவிர்க்கிறார்கள். நடுத்தர வயதில் இருப்பவர்கள், கொலஸ்ட்ரால் அதிகமாக உள்ளவர்கள், பைபாஸ் சர்ஜரி பண்ணியிருப்பவர்கள்கூட வாரத்தில் இரண்டு முறை சாப்பிடுவதில் தவறு இல்லை என்றுதான் டாக்டர்கள் சொல்வார்கள். ஆனால், சின்ன வயதிலேயே மஞ்சள் கரு சாப்பிட்டால் கொழுப்பு என்று தவிர்க்கிறார்கள். இது புரதச்சத்துக் குறைபாட்டை உண்டாக்கும். அதேபோல், அரிசி உணவுகளைத் தவிர்ப்பதும் பழக்கமாகி வருகிறது. சின்ன வயதிலேயே கார்போஹைட்ரேட் குறைபாடு ஏற்பட்டால் அது குழந்தைகளின் வளர்ச்சியை பாதிக்கும். உடலுக்கு நல்லது என்றாலும் நிறைய க்ரீன் டீ குடிப்பதால் சிலருக்கு ஒத்துக் கொள்ளாமல் போயிருக்கிறது. இதுபோல், பல்வேறு தவறான முடிவுகளால், தாங்களாகவே உடல்நலக் குறைவையும் தேடிக்கொள்கிறார்கள். டயட் பற்றிய தகவல்கள் எல்லா இடங்களில் இருந்தும் நமக்குக் கிடைத்தாலும், நம் உடம்புக்கும் வாழ்க்கை முறைக்கும் சரியாக இருக்குமா என்பதை ஒரு ப்ரொஃபஷனலான டாக்டரிடமோ, டயட்டீஷியனிடம் ஆலோசித்துவிட்டுப் பின்பற்றுவதே சரியானது.’’

நடிகர்கள் திடீரென்று உடல் எடையைக் குறைத்துக் கூட்டுவதன் ரகசியம் என்ன? ‘ஐ’ படத்துக்காக விக்ரம் பாதியாக எடையைக் குறைத்தது போன்று?

“எடையைக் குறைப்பதில் இரண்டு வழிகள் இருக்கின்றன. கேஸ்ட்ரிக் பைபாஸ், கேஸ்ட்ரிக் ஸ்லீவ், லைப்போ சக்ஷன் போன்ற அறுவைச் சிகிச்சைகள் மூலம் சிலர் எடையைக் குறைப்பார்கள். மாத்திரைகள் மூலமும் எடையைக் குறைப்பவர்கள் இருக்கிறார்கள். சிலர், ஆரோக்கியமாக சாப்பிட்டு கடுமையான பயிற்சியின் மூலம் எடையைக் குறைப்பார்கள். நான் விக்ரமின் டயட்டீஷியன் என்ற முறையில் அவரைப் பற்றி எனக்குத் தெரியும். மணிக்கணக்கில் உடற்பயிற்சி செய்வார். இந்த உணவை சாப்பிடக் கூடாது என்றால் அந்த டயட்டை சின்சியராக, கட்டுப்பாடாகப் பின்பற்றுவார். நாங்கள் சொல்கிறோம் என்பது மட்டுமில்லாமல், அவர் நன்றாகப் படித்தவர் என்பதால் என்ன சாப்பிட வேண்டும் என்பது தெளிவாகத் தெரியும். விக்ரமின் மனைவியும் நன்கு படித்தவர். ஹெல்த்தியாகவும், டேஸ்ட்டியாகவும் சமைக்கத் தெரிந்தவர். இதனால் பார்த்து பார்த்து கவனமாகத்தான் விக்ரமுக்கு சாப்பாடு வரும். உடல்ரீதியாகப் பல்வேறு டெஸ்ட் எடுத்துக்கொண்டு, டாக்டர்கள், டயட்டீஷியன், ஃபிட்னஸ் ட்ரெயினர் என்று பலரின் கண்காணிப்பில்தான் இதுபோல் உடல் மாற்றங்களைச் செய்ய முடியும். இதனால், உடலில் சின்ன மாற்றம் ஏற்பட்டாலும் உடனடியாக அதை டாக்டர்கள் கண்டுபிடித்து குணப்படுத்திவிடுவார்கள். ஆனால், இதற்குப் பின்னால் இருக்கும் விஷயங்கள் தெரியாமல் மேலோட்டமாகப் பார்த்து விக்ரம், நயன்தாரா மாதிரி நாமும் எடையைக் குறைக்கலாம் என்று சாப்பிடாமலோ, இஷ்டத்துக்கு டயட்டை மாற்றினாலோ அது ஆபத்தாகத்தான் முடியும்!’’

ஆண்களுக்கு தொப்பை பெரிய பிரச்னையாக இருக்கிறது. இதற்கு தீர்வு என்ன?

“தொப்பையை டயட் மற்றும் உடற்பயிற்சியின் வழியாகப் படிப்படியாக நிச்சயம் குறைக்க முடியும். டயட்டில் எப்படி குறைக்க முடியும் என்றால், கொழுப்பு உணவுப் பொருட்களை சாப்பிடாமல் இருக்க வேண்டும். குறிப்பாக, எண்ணெயில் வறுத்துப் பொரித்த உணவு வகைகள். மைதா பொருட்களில் செய்யும் பரோட்டா போன்ற உணவு வகைகளில் நிறைய எண்ணெய் சேர்த்து செய்கிறார்கள். அதேபோல், நிறைய சர்க்கரை உள்ள உணவுகளான ஜூஸ், மில்க் ஷேக், ஃப்ளேவர் ட்ரிங்க், ஸாஃப்ட் டிரிங்ஸ் போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும். இவற்றில் இருக்கும் அதிகப்படியான சர்க்கரை ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகமாக்கும். இதனால், இன்சுலின் ஹார்மோன் அதிகமாக சுரந்து அது கொழுப்பாக மாறும். அதனால், உடல் உழைப்பு குறைவாக உள்ளவர்கள் சர்க்கரை அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டும். கோதுமை, பார்லி, ஓட்ஸ் போன்ற உணவுகளில் க்ளூட்டன் என்ற புரதச்சத்து இருக்கிறது. இது சிலருக்கு ஒத்துக் கொள்ளாமல் வாயு பிரச்னையை உண்டாக்கிவிடும். இதனாலேயே சிலருக்கு தொப்பை தனியாகத் தெரியும் அளவுக்குப் பெரிதாக இருக்கும். இதேபோல், சிலருக்கு பால் பொருட்களை ஜீரணிக்கும் என்ஸைம் இருக்காது. இவர்கள் அதிகமாக பனீர், சீஸ், பால் போன்ற உணவுப் பொருட்களை சாப்பிட்டுக் கொண்டிருந்தால் அவர்களுக்கும் இதுபோல் வாயு பிரச்னையால் தொப்பை இருக்கும். உங்கள் உடல் என்ன நிலையில் இருக்கிறது என்பதை ஒரு டாக்டர் மூலம் கண்டறிந்து, அதற்கேற்ற உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும். இது தவிர பொதுவான ஒரு அட்வைஸ், நார்ச்சத்து நிறைய உள்ள காய்கறிகள் நிறைய சாப்பிட வேண்டும். நேரத்துக்கு சாப்பிட வேண்டியது இன்னொரு முக்கியமான விஷயம். நேரத்துக்கு சாப்பிடவில்லையென்றால், சில நேரத்தில் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவு திடீரென்று அதிகமாகும், திடீரென்று குறையும். குறிப்பாக, காலை உணவை எக்காரணம் கொண்டும் தவிர்க்கவே கூடாது. தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். டயட்டை மட்டும் பின்பற்றினால் தொப்பை குறைந்துவிடாது. அதற்கேற்ற உடற்பயிற்சியும் அவசியம். பயிற்சி பெற்ற சரியான ட்ரெயினரிடம் சென்றால், சரியாக படிப்படியாக எப்படி உங்கள் தொப்பையைக் குறைப்பது என்று பயிற்சிகளைத் தருவார்கள்.’’

தினசரி வாழ்வில் நாம் பின்பற்றக் கூடிய உணவுமுறைகள் என்னென்ன?

“காலையில் காபி, டீ சாப்பிடுவதற்குப் பதிலாக தேன் கலந்த லெமன் ஜூஸ், தேன் கலந்த நெல்லிக்காய் ஜூஸ், துளசி கலந்த தண்ணீர் போன்றவை சாப்பிட முயற்சிக்கலாம். வேர்க்கடலை கைப்பிடியளவு சாப்பிடலாம். வேர்க்கடலையில் நிறைய புரதச்சத்து இருக்கிறது. வாய்ப்பு இருப்பவர்கள் பாதாம்பருப்பு, வால்நட் பருப்பு போன்றவற்றை சாப்பிடலாம். காலையில் ராகி கலந்த உணவுகள் மிகவும் நல்லது. ராகி கஞ்சி, ராகி அடை, ராகி புட்டு, ராகி தோசை போன்றவற்றை சாப்பிடலாம். சாமை, தினை, வரகு போன்ற சிறுதானியங்களை முடிந்தால் உப்புமா செய்து சாப்பிடலாம். ஒரு கப் பழங்கள் காலையில் சாப்பிடுவதும் நல்லது. இட்லி, தோசை சாப்பிடுவதாக இருந்தால் கைக்குத்தல் அரிசியாக இருக்குமாறு முடிந்தவரை பார்த்துக் கொள்ளுங்கள். கைக்குத்தல் அரிசியில் மினரல், நார்ச்சத்து, வைட்டமின் போன்றவை அதிகம். மதிய உணவில் நிறைய காய்கறிகள் சேர்த்த சாம்பார், கீரை, தயிர் சாப்பிடலாம். வெறுமனே தயிர் மட்டும் சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ளாமல் தயிரில் வாழைத்தண்டு, வெள்ளரிக்காய், முள்ளங்கி, கேரட் போன்றவற்றைப் பொடியாக நறுக்கிச் சேர்த்து பச்சடியாக சாப்பிடுவது இன்னும் சிறந்தது. கூட்டு வகைகளில் சவ்சவ், பீர்க்கங்காய், புடலங்காய் போன்ற நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் நீர்ச்சத்து மட்டும் இல்லாமல், நார்ச்சத்தும் நிறைய இருக்கிறது. காரக்குழம்பு, வத்தல் குழம்பு உடல் நலத்துக்கு நல்லது இல்லை. காரணம், நிறைய புளியும், நிறைய எண்ணெயும் சேர்க்கிறார்கள். அதனால், முடிந்தவரைத் தவிர்த்து விடுங்கள். இதேபோல், கிழங்கு வகைகளைத் தவிர்ப்பதும் நல்லது. கிழங்கும் மாவுச்சத்து என்பதால் அதுவும் கார்பாஹைட்ரேட் என்ற கணக்கில்தான் வரும். அது இன்னும் ஒரு கப் சாதம் சாப்பிட்டது போல்தான் ஆகும். மாலை நேரத்தில் பழங்கள், வேர்க்கடலை, சுண்டல், புதினா சட்னி கலந்த சாண்ட்விச், ஓமப்பொடி, தட்டை கலக்காத பேல் பூரி போன்றவற்றை சாப்பிடலாம். கார்ன் உணவுகள் வேண்டாம். இரவு உணவுக்கு ராகி அடை, ராகி தோசை, ராகி இடியாப்பம் என்று நிறைய இருக்கிறது. இட்லி, தோசை சாப்பிடுவதாக இருந்தால் புதினா சட்னி, கடலை சட்னி போன்றவற்றைச் சேர்த்துக் கொள்ளுங்கள். சப்பாத்தியாக இருந்தால் நிறைய காய்கறிகள் சேர்த்துக் கொள்ளுங்கள். ப்ழங்களைப் பொருத்தவரை ஆப்பிள், மாதுளைதான் சாப்பிட வேண்டும் என்று அவசியம் இல்லை. அந்த அந்த சீஸனுக்கு எந்தப் பழம் குறைவான விலையில் கிடைக்கிறதோ அந்த பழங்களை சாப்பிட்டாலே போதுமானது!’’