கேட்டதும் கேக்’காததும்!

கட்டுரைகள் வணிகம்

பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே கேக்குகள் மேலை நாட்டவர்களின் சம்பிரதாயங்களில் ஒரு பகுதியாக இருந்து வருகிறது.

# பண்டைய ஆங்கிலேயர்களால் கொண்டாடப்பட்ட பெல்டான் எனப்படும் திருவிழா, இதற்கு ஒரு சிறந்த உதாரணம். மலை உச்சியில் நெருப்புப் பந்தங்களை மூட்டி, அங்கிருந்து கேக்குகள் போன்ற பிரட் கட்டிகளை உருட்டி விடுவார்கள். அவ்வாறு மலையிலிருந்து உருண்டு விழும் கட்டிகள் உடையாது விழுந்தால் அது நல்ல சகுனமாகக் கருதப்பட்டது.

# முன்பொரு காலத்தில் கிறிஸ்துவத் திருமணங்களில் மணமக்களின் தலையின் மேல் கேக்குகளை உடைக்கும் பழக்கம் இருந்திருக்கிறது.

# அடுக்கு கேக்குகள் என்பது ஒரு வகை, அதாவது திருமணம் செய்துகொள்ள இருக்கும் ஆண் பெண் இருவரும், தங்கள் உற்றார் உறவினர் நட்புகளுக்கு அழைப்பு விடுப்பார்கள். இத்திருமணத்திற்கு வரும் அவர்கள் எடுத்துவரும் கேக்குகளை அடுக்கி வைத்து அதன் உயரத்தை அளப்பார்கள். அந்த கேக்குகளின் உயரத்தின் படி அவர்களது சமூக அந்தஸ்து கணிக்கப்பட்டது.

# உங்களில் எத்தனை பேருக்கு சீஸ் கேக்குகள் விருப்பம்? அது பிறந்த கதை தெரியுமா? கேக்குகளின் முதாதையர் என்று அவற்றைக் கூறலாம். முதன் முதலில் ஒலிம்பிக் போட்டி நிகழ்ந்த போது, நம்மூர் கிராமத்து நிகழ்ச்சிகளில் சுண்டல் விற்பது போல, சீஸ் கேக்குகளை விற்றுள்ளனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் அது எவ்வளவு பழமையானது என்று.

# ஊஃபி  எனப்படும் ஃபை கேக் வகைகளைப் பற்றிக் கேள்விப்பட்டதுண்டா? அதற்கு அந்த பெயர் வந்ததே ஒரு சுவாரசியமான விஷயம். ரொட்டித் துண்டுகளுக்கு இடையே கிரீம் நிரப்பி தயாரிக்கப்படும் இவ்வகை ஃபை கேக்குகள் தொலைதூரம் வேலைக்கு செல்லும் கணவன்மார்களுக்கு அவர்தம் மனைவிகளால் மதிய உணவுக்காக அளிக்கப்படுமாம். அதைக் கண்டதும் ஆனந்தத்தில் அவர்கள் ‘ஊஃபி’ எனக் கத்திட, அதுவே அந்த கேக்கின் பெயருமாகிப் போனது.

# திருமணமாகாத பெண்களின் தலையணைக்கு அடியில் ஃப்ரூட் கேக்குகள் வைத்தால், அவர்களுக்கு விரைவில் திருமணம் ஆகிவிடும் என்பது ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆங்கிலேயர்களின் நம்பிக்கை.

# கேக்குகளில் மிக உயர்தரமானது ரெட் வெல்வெட் எனப்படும் கேக் வகை. முதன்முதலில் அதனை உண்ட ஒரு பெண் அதன் சுவையில் மயங்கி அதன் கடைக்காரரிடம் அதன் செய்முறையை கேட்கப் போக கடைக்காரகள் அதன் செய்முறை விளக்கத்தையும் கொடுத்து அதற்கு நூறு டாலர்கள் பில்லும் சேர்த்து அளித்தனராம்.

# சிறுபிள்ளைகளுக்கு மிகவும் பிடித்த உணவு வகை கேக் என்பதால், அமேரிக்கா போன்ற நாடுகளில் கேக் செய்முறைகள் வீடியோ கேம்களாக சக்கை போடு போடுகின்றன.

# இடைக்கால மேற்கத்தியப் பாரம்பரியத்தில், கிறிஸ்துமஸ் நிறைவு பெறுவதை குறிக்கும் வகையில் உயிருள்ள பறவைகளையும் தவளைகளையும் நிரப்பி பெரிய கேக்குகளைச செய்வர். அதனை வெட்டப் போகும் வேளையில் அந்த கேக் வெடித்து அந்த உயிரினங்கள் வெளியே வருமாம். நோவாவின் பேழையிலிருந்து உயிரினங்கள் வெளிவந்ததைக் குறிக்கும் வகையில் பின்பற்றிய முறையாம் இது.

# பிறந்தநாள் அன்று கேக் வெட்டிக் கொண்டாடுவது சுமார் 200 ஆண்டுகளாகப் பழக்கத்தில் இருக்கிறதாம்.

# திருமணங்களுக்காக தயாரிக்கப்படும் கேக்குகளில் நாணயங்களை வைத்துத் தயாரிப்பது ஒரு பழக்கமாம். யாருக்கு நாணயம் உள்ள அந்த கேக் துண்டு கிடைக்கிறதோ அவர் விரைவில் செல்வந்தர் ஆகிவிடுவார் என்பது ஒரு நம்பிக்கை.

# உலகின் மிக விலை உயர்ந்த கேக் சுமார் இருபது மில்லியன் டாலர் பணம் செலவழித்து வைரங்கள் பதித்துத் தயாரிக்கப்பட்டதாம். அதனை யாருக்கேனும் சாப்பிட மனசு வருமா சொல்லுங்கள்!