பா.ம.க.வை ஓரம்கட்ட வேல்முருகனோடு கூட்டணி போடும் தி.மு.க.!

slider அரசியல்

 

stalin-velmurugan-ஸ்டாலின்-வேல்முருகன்

வரும் டிசம்பர் மாதத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு மாநில தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. உள்ளாட்சித் தேர்தல் வெற்றி என்பது அ.தி.மு.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் மிக முக்கியமான ஓன்று. இதில் வட மாவட்டத்தைப் பொறுத்தவரை அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இருப்பதால், வன்னியர்கள் ஓட்டுக்களை பெருவாரியாக இழக்கும் நிலைக்கு தி.மு.க. தள்ளப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனை தி.மு.க. பக்கம் இழுக்கும் வேலையில் இறங்கி வெற்றியும் கண்டுள்ளார்.

வட மாவட்டத்தில் நடைபெற்ற இடைத் தேர்தலான விக்கிரவாண்டியில் தாங்கள் வெற்றி பெற்றிருந்த தொகுதியினை அ.தி.மு.க.விடம் இழந்தது தி.மு.க. இந்த தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தது பா.ம.க. இந்த இடைத் தேர்தல் தோல்விக்கு ஆய்வு செய்த தி.மு.க. தலைமை, இனி அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இருக்கும்வரை வட மாவட்டங்களில் அது உள்ளாட்சித் தேர்தலாகட்டும், அடுத்துவரும் சட்டமன்ற தேர்தலாகட்டும் பா.ம.க.வுக்காக அ.தி.மு.க. கூட்டணிக்கான வன்னியர் சமுதாய ஓட்டுக்களைப் பிரிக்கவும், அந்த ஓட்டுக்களை தங்கள் பக்கம் கொண்டுவரவும், மேலும் வன்னியர்களின் அபிமானம் பெற்ற வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சியோடு கூட்டணி வைக்கும் முடிவை தி.மு.க. தலைமை எடுத்துள்ளது.

இதன் அடுத்தகட்டமாக இன்று தி.மு.க. தலைவர் ஸ்டாலினுடன் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் சந்தித்து உள்ளார். ஏற்கெனவே கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க.வும், அதன் கூட்டணியும் வெற்றி பெற்றதற்கு வட மாவட்டங்களில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியும், அதன் தலைவர் வேல்முருகனின் பிரசாரமும் முக்கிய பங்கு வகித்தது. இதனை கருத்தில் கொண்டும், அ.தி.மு.க. தலைமையோடு ராமதாஸ் கொண்டிருக்கும் நெருக்கத்தை கருத்தில் கொண்டும் தி.மு.க. தலைமை இந்த முடிவை எடுத்திருப்பதாக அறிவாலய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

தி.மு.க.வின் இந்த முயற்சியும், கூட்டணியும் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் முடிவின்போதே வட மாவட்டத்தை பொறுத்தவரை இதனால் தி.மு.க.வுக்கு லாபமா? நஷ்டமா? என்பதை தெளிவுபடுத்திவிடும்.

விசாகன்