உள்ளாட்சித் தேர்தலில் தினகரன் கட்சி போட்டி – அதிர்ச்சியில் அ.தி.மு.க.!

slider அரசியல்

 

ttv-dinakaran-டிடிவி-தினகரன்

கடந்த பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் அடுத்துவந்த இடைத் தேர்தல்களில் போட்டியிடாமல் இருந்துவந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், வரப்போகும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடப் போவதாக தினகரன் தற்போது அறிவித்துள்ளார். இதனால், அ.தி.மு.க. முகாமில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

வேலூரில் நடைபெற்ற பாராளுமன்றத்  இடைத் தேர்தலில் அ.ம.மு.க. போட்டியிடவில்லை. அந்த தேர்தலில் தி.மு.க. குறைந்த ஓட்டு எண்ணிக்கையில் அதாவது எட்டாயிரத்து சொச்சம் வாக்குகள் அதிகம் பெற்றே வெற்றி பெற்றது. ஆனால், இந்த தொகுதியில் அ.ம.மு.க. போட்டியிட்டிருந்தால் ஏறக்குறைய 60,000க்கும் மேற்பட்ட வாக்குகளில் தி.மு.க. வெற்றி பெற்றிருக்கும். விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத் தேர்தல்களிலும் அ.ம.மு.க. போட்டியிட்டிருந்தால் தி.மு.க. நிச்சயம் வெற்றி பெற்றிருக்கும் என்பதே அரசியல் வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.

அ/தி.மு.க. தலைமையை பொறுத்தவரை வேலூர், விக்கிரவாண்டி, நாங்குநேரியில் அ.ம.மு.க. போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டதைப் போலவே உள்ளாட்சித் தேர்தலிலும் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொள்ளும் என்ற முடிவில் இருந்து வந்தது. ஆனால், தினகரன் இப்போது உள்ளாட்சித் தேர்தலில் அ.ம.மு.க. போட்டியிடும் என்று சொல்லியிருப்பதால், அ.தி.மு.க. தலைமை அதிர்ச்சியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து தினகரன் கூறுகையில், “மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு, மறைமுக தேர்தல் நடக்கும் என, தமிழக அரசு அவசர சட்டம் இயற்றியுள்ளது. நேரடி தேர்தல் நடந்தால், மிகப்பெரிய தோல்வியை சந்திக்க நேரிடும் என்று பயந்து, இந்த அவசர சட்டத்தை, அரசு கொண்டு வந்துள்ளது. ஏற்கனவே, புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில், வார்டுகள் எவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கான இட ஒதுக்கீடு விபரங்கள் குறித்து, இதுவரை அரசும், தேர்தல் ஆணையமும், வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இந்த காரணத்தைக் கூறி, உள்ளாட்சி தேர்தலை, நீதிமன்றம் வழியே தடுக்கும் முயற்சிகளை, தி.மு.க., மேற்கொண்டுள்ளது. இப்போது அவசர சட்டத்தால், தேர்தலை நடத்த விரும்பாதவர்களுக்கு, மற்றொரு காரணத்தை, அரசு உருவாக்கி கொடுத்து உள்ளது. இந்த செயலை பார்க்கும்போது, உள்ளாட்சி தேர்தலை நடத்தக் கூடாது என்பதில் தி.மு.க., – அ.தி.மு.க. ஆகிய, இரண்டு கட்சிகளுமே கைகோர்த்து செயல்படுகின்றனவோ என்ற, சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது’’ என்று கூறியுள்ளார்.

தமிழக அரசு உள்ளாட்சித் தேர்தலை அறிவித்தபடி நடத்துமானால், அது மறைமுக தேர்தலாகட்டும், நேரடி தேர்தலாகட்டும் இந்த போட்டியில் தினகரன் கட்சியும் இருக்குமானால், அது அ.தி.மு.க.வுக்கு நஷ்டத்தையும், தி.மு.க. லாபத்தையும் அமைவதற்கான வாய்ப்பே அதிகமாக இருக்கிறது.

  • எம்.டி.ஆர்.ஸ்ரீதர்