ரஜினி, கமல் கூட்டணி! அதிக நஷ்டம் தி.மு.க.வுக்கா, அ.தி.மு.க.வுக்கா?

உலகம்
kamal rajini

 

கடந்த 19-ம் தேதி செவ்வாய்க் கிழமையன்று இருவேறு இடத்தில் பேசிய கமலும், ரஜினியும் தமிழக நலனுக்காக இணைந்து செயல்படவும் நாங்கள் தயார் என்று கூறியுள்ள செய்தி தான் தமிழகத்தின் இப்போதைய ஹைலைட் தகவலாக முதலிடத்தை பிடித்துள்ளது. ஆளும் கட்சியான அ.தி.மு.க.வும், எதிர்க் கட்சியான தி.மு.க.வும் எந்த ஒன்று நடக்கக் கூடாது என்று ஒரேமாதிரியான சிந்தனையோட்டத்தில் இருந்ததோ, அது நடக்கும் வாய்ப்பை நோக்கி நகர்ந்துள்ளது. கமலும், ரஜினியும் இப்படி கூறியுள்ளதால், அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட பல கட்சிகள் வியப்பும், அதிர்ச்சியும் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தை பொறுத்தவரை ரஜினியும், கமலும் கடந்த 40 வருடமாகவே செல்வாக்குள்ள பிரபலமாக இருந்து வருகிறார்கள். இவர்களின் சினிமா வாழ்க்கையின் ஆரம்பித்தில் இருந்தே இவர்கள் இருவருக்கும் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கட்சிகளுக்கு இருப்பது போல, தமிழகத்தின் ஒவ்வொரு குக்கிராமம் முதல் மாநகரம் வரை ரசிகர் மன்ற அமைப்புகள் இருந்து வருகின்றன. இவர்கள் அடிப்படையில் சினிமா பிரபலம் என்றபோதும் இவர்கள் பொது விஷயங்களில் சொல்லும் கருத்துகள் உடனடியாக பெரும் தாக்கத்தை உண்டாக்கி விடுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

அ.தி.மு.க.வின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்தபிறகு கமல்ஹாசன் தனது ரசிகர் மன்றத்தை மக்கள் நீதி மய்யம் கட்சியாக ஆரம்பித்தார். ரஜினியும் தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றினார். மேலும், விரைவில் அரசியல் கட்சியும் தொடங்கவுள்ளேன் என்றும் 2017-ம் ஆண்டு வாக்கிலே கூறியும் விட்டார். இதில் முதலில் கட்சியாக ஆரம்பித்த கமல், கடந்த பாராளுமன்றத்தில் போட்டியிட்டு அரசியல் அனுபவமும் பெற்றுள்ளார்.

ஒருவேளை ரஜினியும் கட்சி ஆரம்பித்து போட்டியிட்டால், அவர் தனித்து போட்டியிடுவாரா? அல்லது பா.ஜ.க.வுடன் கூட்டணி போடுவாரா? என்கிற பேச்சு பல மாதம் இருந்து வந்தது. சமீபத்தில் திருவள்ளுவர் பிரச்னையில் காவி பிரச்னையை மையமாக வைத்து பா.ஜ.க.வுக்கு எதிராக தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்றன. இந்த சமயத்தில் ரஜினி இது குறித்து கூறுகையில், ‘’திருவள்ளுவரும் காவிக்கு சிக்கமாட்டார். நானும் காவிக்கு சிக்க மாட்டேன்’’ என்று சொன்னது மூலம் பா.ஜ.க.வுக்கான தன் கதவை அடைத்து விட்டார்.

இந்த விவகாரத்தை தொடர்ந்து கமல் விழா ஒன்றில் ரஜினியின் ‘’தமிழகத்தில் அரசியல் ஆளுமைக்கான வெற்றிடம் ஏற்பட்டுள்ளது’’ என்கிற பேச்சும் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வை பெரிதும் சீண்டியது. இதில் அ.தி.மு.க. தான் அதிகளவில் ரஜினிக்கு எதிரான கருத்துகளை முன்வைத்தது. இதில் அதிகபட்சமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ‘’அவர்  என்ன அரசியல் தலைவரா… அவர் ஒரு நடிகர்’’ என்கிற ரீதியில் ரஜினியின் இந்தப் பேச்சை வெகுவாக மட்டம் தட்டினார்.

இதற்கு ரஜினி நேரிடையாக பதில் தரவில்லையென்றாலும், கமலுக்கான    இன்னொரு விழாவில் மறைமுகமாக அதிர்ஷ்டத்தாலும், அதிசயத்தாலும் தான் எடப்பாடி பழனிசாமி முதல்வராக நீடிக்கிறார் என்கிற பொருளில்  பதிலடி தந்தார்.

ரஜினியின் இந்த பேச்சுக்கும் அ.தி.மு.க.வில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உட்பட பல அமைச்சர்கள் விமர்சனம் செய்யத் தொடங்கினர். இதன் தொடர்ச்சியாகவே கடந்த 19-ம் தேதி அன்று இருவேறு இடத்தில் கமலும், ரஜினியும் தனித்தனியாக பேசியபோதும், தமிழக நலனுக்காக இணைந்து செயல்படவும் தயார் என்று தெரிவித்துள்ள சம்பவம் நடந்துள்ளது. இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக இன்று (20.11.2019) சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள தனது கட்சி அலுவலகத்தில் கட்சியினருடன் ஆலோசனை நடத்தியுள்ளார் கமல். செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள்  இதில் கலந்து கொண்டுள்ளனர். இந்தக் கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்தும், ரஜினியுடன் இணைந்து அரசியலில் செயலாற்றுவது குறித்தும்  அப்படி அரசியலில் இணைந்து ஈடுபடுவது பயன் தருமா என்றும், எதிர்காலத்தில் உதவுமா என்றும், 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் கூட்டணி வைக்கலாமா என்றும், அப்படி வைத்தால் திராவிட கட்சிகளை வெல்ல முடியுமா என்றும், தொண்டர்கள் ஆதரவு தொடருமா என்றும், ரசிகர்கள் இடையே சண்டை நீடிக்குமா  என்றும் விவாதித்தார் எனக் கூறப்படுகிறது.

மக்கள் நீதி மய்யம் ஆலோசனைக் கூட்டத்தில் இணைப்புக்கு ஆதரவாகவே பலரும் பேசினர். ஆகவே, இன்னும் ஒரிரு நாளில் ரஜினியை சந்தித்து கமல் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பேசுவார் என்கிற தகவலை தெரிவிக்கின்றன கமல் கட்சி வட்டாரம். இவர்கள் இணைந்தால் அடுத்த சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியை பிடிப்பார்களா? என்பதைவிட இதனால் அதிகம்  நஷ்டம் அடையப் போவது அ.தி.மு.க.வா? அல்லது தி.மு.க.வா? என்கிற விவாதமே பட்டிதொட்டியெங்கும் அலசலாக விவாதமாகி வருகிறது.

எம்.டி.ஆர்.ஸ்ரீதர்