மேயர் தேர்ந்தெடுக்கும் முறைக்கு தி.மு.க. கடும் எதிர்ப்பு!

slider அரசியல்

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் தேதியை டிசம்பர் 2-ம் தேதி அறிவிக்கப் போவதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஒருவேளை எந்த இடையூறும் இல்லாமல் டிசம்பர் மாதத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுமாயின், அதில் அதிகளவில் வெற்றிபெற பல்வேறு திட்டங்களை ஆளுங்கட்சியான அ.தி.மு.க. வகுத்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக நேற்று (19/11/2019) தமிழக அமைச்சரவை கூட்டத்தில் மறைமுக தேர்தல் அதாவது கவுன்சிலர்கள் கூடி மேயர், சேர்மன்களை தேர்ந்தெடுக்கும் முறையை கொண்டுவர ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு பிரதான எதிர்க் கட்சியான தி.மு.க. கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் கூட்டணிகள் கட்சிகள் விஷயத்தில் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றன. குறிப்பாக, தி.மு.க.வோ தாங்கள் அமைத்துள்ள கூட்டணி மூலம் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் பெரும் வெற்றியை தி.மு.க. கண்டுள்ளது. சட்டமன்றத்தில் சொற்ப மெஜாரிட்டியில் ஆட்சியில் இருந்துவரும் அ.தி.மு.க.வோ, தற்போது கூட்டணிகள் தந்த பலத்தினால் இடைத்தேர்தல்களில் வெற்றிகள் கண்டு சட்டமன்ற பலத்தை அதிகரித்துள்ளது. ஆகவே, தற்போதைய நிலையில் தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் அதன் கூட்டணிகளை பகைத்துக் கொள்வது அவ்வளவாக இயலாத காரியம் தான். அதேநேரத்தில் கூட்டணிகள் கேட்கும் அளவில் உள்ளாட்சித் தேர்தலில் மேயர் பதவிகள் உட்பட பதவிகளை விட்டுக் கொடுக்க முடியாத நிலை என்று தவித்தும் வருகின்றன.

தமிழக உளவுத்துறை, உள்ளாட்சியில் நேரடி தேர்தல் நடத்தப்பட்டால் தி.மு.க. அதிகளவில் மேயர் பதவிகள், நகர, ஒன்றிய சேர்மன் பதவிகளை பிடிக்க வாய்ப்பிருப்பதாக முதல்வருக்கு சமீபத்தில் ரிப்போர்ட் கொடுத்துள்ளதாம். மறைமுக தேர்தல் மூலம் அதாவது பழைய ஃபார்முலாபடி கவுன்சிலர்கள் மூலம் மேயர், சேர்மன் பதவிகளை தேர்ந்தெடுக்கும் முறையினால் அ.தி.மு.க.வுக்கு லாபம் என்றும் அந்த ரிப்போர்ட்டு கூறுகிறதாம். இதன் பின்னணியில் நேற்று (20.11.2019) நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில் மறைமுக தேர்தல் நடத்துவது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து இன்று (20.11.2019) தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘’நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில், மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல்’ என்று முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளிவந்திருக்கிறது. ஆனால், ஒரு வாரத்திற்கு முன்பு முதலமைச்சர்  பத்திரிகையாளர் சந்திப்பில், ‘நேரடியாக மக்களால் மேயர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்” என்று அறிவித்திருந்தார். ஆனால்,நேற்றைய அமைச்சரவைக் கூட்டம் தொடர்பான செய்திகளோ முதல்வர் கூறியுள்ளதிற்கு முரணாக இருக்கின்றன. நேற்றைய தினம் அப்படியொரு முடிவு எடுக்கப்பட்டிருந்தால் அது பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் அடிப்படை   நோக்கத்தைத் தகர்க்கும் ஜனநாயக விரோத முடிவாகும். ஆகவே அமைச்சரவைக் கூட்டத்தில் ’மறைமுகத் தேர்தல்’ குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்பதை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உடனடியாக அறிவித்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.

உள்ளாட்சித் தேர்தல் என்பது 2021-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலுக்காக முன்னோட்டம் என்பதால் ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வும், எதிர்க் கட்சியான தி.மு.க.வும் தேர்தல் எப்படி நடைபெற வேண்டும் என்பதிலும், கூட்டணிகளுக்கு எந்தவகையில் பங்கீடு வழங்க வேண்டும் என்பதிலும் ரொம்பவே கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருந்து வருகின்றன என்பது இவைகள் மூலம் தெளிவாகிறது.

  • தொ.ரா.ஸ்ரீ.