ரஜினி – அ.தி.மு.க. மோதலில் யாருக்கு நஷ்டம்!

slider அரசியல்
ops and eps

சில தினங்களுக்கு முன்பு பிரமாண்டமான முறையில் நடைபெற்ற கமல்- 60 விழாவில் நடிகர் ரஜினி பேசுகையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதவியில் நீடிப்பது குறித்து மறைமுகமாக விமர்சனம் செய்திருந்தார். இதற்கு முதல்வர் தரப்பிலிருந்து நேரிடையாக எந்த பதிலும் வராத நிலையில், அமெரிக்காவிலிருந்து திரும்பியுள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ரஜினியின் இந்த பேச்சு பற்றி வன்மையாக கண்டித்துள்ளார். இது தமிழக அரசியலில் ரஜினி – அ.தி.மு.க. மோதலை மீண்டும் சூடுபிடிக்க வைத்துள்ளது.

அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் அரசுமுறை பயணமாக அமெரிக்காவுக்கு பத்து நாட்கள்  சென்றிருந்தார். இந்தப் பத்து நாளுக்குள் தான் நடிகர் ரஜினி – அ.தி.மு.க. பிரச்னை பெரும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. குறிப்பாக, கமலின் ராஜ்கமல் அலுவலகத்தில் இயக்குநர் கே.பாலசந்தர் சிலை திறப்பு விழா அன்று செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி “தமிழகத்தில் அரசியல் ஆளுமைக்கான வெற்றிடம் உள்ளது” என்று கூறினார். இந்தப் பேச்சுக்கு அடுத்த நாளே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, “அவர் என்ன கட்சித் தலைவரா… நடிகர் தானே… அரசியல் தலைவர் ஒருவர் சொன்னால் அது குறித்து பதில் சொல்லலாம்’’ என்கிற ரீதியில் செய்தியாளர்கள் சந்திப்பில் ரஜினியை  கடுமையாக விமர்சிக்கும் வகையில் பதிலளித்தார்.

இந்த விவகாரம் ஒருநாள் விட்டு ஒருநாள் மீண்டும் மீண்டும் பூதாகாரமாக வெடித்தபடியே இருந்து வருகிறது. அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர் செம்மலை உட்பட அ.தி.மு.க. தலைவர்கள் ரஜினியை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இதற்கிடையே இரண்டு நாளுக்கு முன்பு நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற கமல் – 60 விழாவிலும் நடிகர் ரஜினி பேசினார். அப்போது அவர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்றபோது அவர் நான்கு மாதம்கூட தாங்கமாட்டார் என்று சொன்னார்கள். ஆனால், அவர் இப்போது வரை முதல்வராக நீடிக்கிறார்.  ‘நேற்று ஒரு அதிசயம் நடந்தது. இன்றும் ஒரு அதிசயம் நடக்கிறது. நாளையும் ஒரு அதிசயம் நடக்கும்’ என்று பகவத்கீதையில் வருவதுபோல பேசினார். இதில் முதல்வரை நேரிடையாக விமர்சிக்கவில்லை என்றாலும், தகுதியால் எடப்பாடி பழனிசாமி முதல்வராக நீடிக்கவில்லை. அதிர்ஷடத்தால் தான் எடப்பாடி பழனிசாமியும், அ.தி.மு.க. அரசும் நீடித்துக் கொண்டிருக்கிறது என்கிற பொருள் அடங்கியிருக்கிறது என்பதாலே அ.தி.மு.க.வின் ஒட்டுமொத்த கோபமும் ரஜினி மீது தற்போது திரும்பியிருக்கிறது.

இந்நிலையில், பத்து நாள் அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று (18.11.2019) சென்னை திரும்பினார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில், முதலமைச்சர் பழனிச்சாமி குறித்து ரஜினி பேசிய கருத்தை தான் வன்மையாக கண்டிப்பதாகவும், அதிர்ஷ்டத்தை நம்பி அ.தி.மு.க. என்றுமே இருந்தது இல்லை என்று கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தில் இப்போது ஓ.பன்னீர் செல்வமும் உள்ளே வந்திருப்பதால் இனியும் ரஜினி – அ.தி.மு.க. மோதல் தொடரும் என்றும், அ.தி.மு.க.வை பொறுத்தவரை பிரதான எதிர்க் கட்சியான தி.மு.க.வை விட்டுவிட்டு ரஜினியுடன் மோதுவது என்பது அரசியல் முதிர்ச்சியின்மையை வெளிப்படுத்தும் ஒன்றாகத்தான் கருதப்படும். மேலும், இது எந்த வகையிலும் அ.தி.மு.க.வுக்கு நன்மை தரப்போவதில்லை என்றும், அதேநேரத்தில் நஷ்டத்துக்கு அதிக வாய்ப்பிருக்கிறது என்கிற ரீதியில் அரசியல் வட்டாரத்தில் விவாதம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

எம்.டி.ஆர்.ஸ்ரீதர்