கலைஞர் சிலை வைக்க கிரண்பேடி முட்டுக்கட்டை!

slider அரசியல்
கிரண்பேடி

தமிழகத்தை பொறுத்தவரை தி.மு.க. தலைமையில் காங்கிரஸ் கூட்டணி கட்சியாக இருந்து வருகிறது. அதேநேரத்தில் புதுச்சேரியை பொறுத்தவரை காங்கிரஸ் தலைமையில் தி.மு.க. கூட்டணி கட்சியாக இருந்து வருகிறது. புதுச்சேரில் காங்கிரஸ் சார்பில் முதலமைச்சராக நாராயணசாமி இருந்து வருகிறார். முதல்வர் நாராயணசாமி, கலைஞர் மறைந்தபோது, புதுச்சேரியில் அரசு சார்பில் அவருக்கு சிலை வைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இப்போது அதற்கான பணிகள் துவங்கும் நிலையில், புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி, கலைஞர் சிலை வைக்க முடியாது என்று கூறியுள்ளார். இதனால் தமிழகத்திலும், புதுச்சேரியிலும் பெரும் பரபரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரி கவர்னராக கடந்த மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசிலே நியமிக்கப்பட்டவர் தான் கிரண்பேடி. இவர் இங்கு வந்ததிலிருந்து முதல்வர் நாராயணசாமிக்கும், அவருக்கும் ஏழாம் பொருத்தமாகத்தான் நாட்கள் போய்க் கொண்டிருக்கிறது. யாருக்கு அதிகாரம் என்பதை முடிவுசெய்ய நீதிமன்றம் வரை சென்றார்கள். இடையில் இருவருக்கும் மோதல் இல்லாததுபோல் தெரியும். திடீரென்று ஏதாவது ஒரு பிரச்னையில் மோதல் ஆரம்பித்துவிடும். சிலநேரங்களில் ஒரே மேடையிலே இருவரும் காரசாரமாக பேசிக்கொண்ட சம்பவங்களும் நடந்துள்ளது.

முதல்வர் நாராயணசாமி தலைமையில் கலைஞருக்கு சிலை அமைக்க அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள், அனைத்து கட்சி பிரமுகர்கள் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டி சிலை அமையும் இடம், சிலை வடிவமைப்பு ஆகியவை குறித்து கூடி முடிவு செய்யும். ஆனால், இந்த கமிட்டியின் கூட்டம் இதுவரை நடை பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், புதுச்சேரி கவர்னர் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில்,  ‘கலைஞர் சிலை வைக்க அனுமதிக்க முடியாது’ என்று கூறியுள்ளார்.  கடந்த 2013-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு பொது இடங்களில் சிலை அமைக்க தடை விதித்துள்ளதை சுட்டிக்காட்டி இதனை அவர் தெரிவித்துள்ளார். சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை தலைமை செயலாளர்கள் கடைபிடிக்க வேண்டும். இது தொடர்பாக புகார் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் அவர், 2013-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் லோதா, முகோபாத்யாயா ஆகியோர் கொண்ட பெஞ்சு அளித்த தீர்ப்பில் அரசுக்கு சொந்தமான பொது இடத்தில் சிலைகள் வைப்பதோ, மதம் சம்பந்தமான கட்டுமானங்கள் செய்வதோ கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது. அந்த தீர்ப்பை புதுவை மாநில தலைமை செயலாளர்  பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன். தனியார் நிலத்தில் மட்டுமே சிலைகள் வைக்க அனுமதி அளிக்கப்படும்’ என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்.

புதுவை கவர்னரின் இந்த அறிவிப்பு மூலம் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான கமிட்டியால் அரசு நிலத்தில் கலைஞருக்கு சிலைவைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. காங்கிரஸை பொறுத்தவரை கலைஞருக்கு சிலைவைப்பது என்பது அரசியல் ரீதியில் ஆதாயம் அளிக்கக்கூடிய ஒன்று. இப்போது கவர்னரால் இதில் ஏற்பட்டுள்ள சிக்கலை முதல்வர் நாராயணசாமி எப்படி சமாளிக்க போகிறாரோ என்று பல்வேறு விதங்களில் புதுச்சேரி அரசியல் கட்சியினரிடையே தீவிரமாக பேசபடுகிறது.

தொ.ரா.ஸ்ரீ.