உள்ளாட்சி தேர்தல் வெற்றிக்கு புது வியூகம் வகுத்துள்ள முதல்வர்!

slider அரசியல்
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

அ.தி.மு.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவர் தம்பிதுரை. கடந்தமுறை மோடி ஆட்சியில் பாராளுமன்ற துணை சபாநாயகராகவும் இருந்தவர். அ.தி.மு.க.வின் டெல்லி அரசியலை ஜெயலலிதா காலத்திலே கவனித்தவர். இவரை தற்போது முதல்வர் இ.பி.எஸ். அழைத்து கரூர் மாவட்ட உள்ளாட்சித் தேர்தல் பணிகளை பார்த்துக் கொள்ள சொல்லியுள்ளார். இதனால் தம்பிதுரை மீண்டும் கட்சிப் பணிகளில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கியுள்ளார். இதன்மூலம், உள்ளாட்சி வெற்றிக்கு முதல்வர் ஏதோ வியூகம் வகுத்து செயல்படத் தொடங்கியுள்ளதாக பேச்சு கிளம்பியுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்தபிறகு அடுத்து யார் முதல்வராவார் என்கிற விவாதம் வந்தபோது, அதில் தம்பிதுரையின் பெயரும் அடிபட்டது. இதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. சசிகலாவுக்கு நெருக்கமாக இருந்தவர்களில் தம்பிதுரையும் ஒருவர். பல சந்தர்ப்பங்களில் ஜெயலலிதாவிடம் சொல்லி அவருடைய அரசியல் வளர்ச்சிக்கு சசிகலா உதவியும் உள்ளார். மேலும், எம்.ஜி.ஆர். காலத்திலிருந்து நிர்வாகியாக இருப்பதால், தனக்கு அந்த சீனியாரிட்டி இருப்பதாகவும் தம்பிதுரை எண்ணியிருந்தார். ஆனால், முதல்வர் பதவி விஷயத்தில் கட்சியே அணி அணியாக பிரிந்தது. சசிகலா சிறை செல்ல நேரிட்டது. மேலும், பாராளுமன்றத் தேர்தலில் தோல்வி என ஒன்றன்பின் ஒன்றாக பல சரிவுகள் வந்ததால், பெரியளவில் கட்சி நடவடிக்கைகளில் கலந்து கொள்ளாமல், தனது சொந்த ஊரான கிருஷ்ணகிரியிலே இருந்து வந்தார் தம்பிதுரை.

இது குறித்து அ.தி.மு.க. நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். அவர்கள்,  ‘’அ.தி.மு.க.விலிருந்து தி.மு.க.வுக்குச் சென்று, கரூர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளராக வலம்வரும் செந்தில் பாலாஜியை உள்ளாட்சித் தேர்தலில் எதிர்கொண்டு முறியடிக்க தம்பிதுரையை பயன்படுத்த முதல்வர் முடிவெடுத்தார். அதற்காகத்தான் நீண்ட நாள்களுக்குப் பின்னர் அவரை கூப்பிட்டு பேசியுள்ளார். முதல்வருடனான சந்திப்புக்கு பின் தம்பிதுரை உற்சாகமாகி, சில தினங்களுக்கு முன்பு கரூர் விசிட் அடித்து, அங்கு அ.தி.மு.க.வினரிடம் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளிக்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதன்மூலம் அ.தி.மு.க. நடவடிக்கைகளில் தம்பிதுரை அதிகளவில் பங்கெடுப்பார்’’ என்று தெரிவித்தார்கள்.

உள்ளாட்சித் தேர்தலில் பெரும் வெற்றிகளைக் குவிக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மாவட்டவாரியாக கணக்குகள் போடத் துவங்கியுள்ளது கரூரில் தம்பிதுரையை களம் இறக்கியுள்ளது மூலம் தெரிய வருகிறது. இதன்மூலம் முதல்வர் பெரிய வியூகங்களோடு உள்ளது தெளிவாகிறது. அ.தி.மு.க.வின் இந்தமாதிரியான சவால்களை எதிர்கொள்ள தி.மு.க. எந்த வியூகத்தை உள்ளாட்சித் தேர்தலில் பயன்படுத்த போகிறதோ?

 -விசாகன்