உள்ளாட்சித் தேர்தலுக்கு மீண்டும் முட்டுக்கட்டை போடும் தி.மு.க!

slider அரசியல்

தமிழகத்தில் 2016-ம் ஆண்டு நடைபெற வேண்டிய உள்ளாட்சித் தேர்தல் மூன்று ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இப்போது வரப்போகும் டிசம்பர் மாதத்தில் நடைபெறவிருக்கிறது. உள்ளாட்சியில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாததால் பொது மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகிறார்கள். அ.தி.மு.க. அரசு சமீபத்தில் தமிழகத்தில் ஐந்து புதிய மாவட்டங்களை உருவாகியுள்ளது. இந்தப் புதிய மாவட்டங்களில் தேர்தல் வரையறைகளை செய்தபின் தான் உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கைக்காக தி.மு.க. நீதிமன்றத்தை நாடியுள்ளது. இதனால் டிசம்பரில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுமா? என்கிற சந்தேகம் பலருக்கும் ஏற்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்தபிறகு அ.தி.மு.க. அரசில் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றார். இந்த அரசு தமிழகத்தில் பெரிய மாவட்டங்களாக இருந்தவற்றை நிர்வாக வசதிக்காக பிரிக்க கொள்கை முடிவு எடுத்தது. அதன்படி  காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து தென்காசி, வேலுார் மாவட்டத்தை பிரித்து திருப்பத்துார், ராணிப்பேட்டை மாவட்டங்கள் என்று புதிதாக 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து தமிழக மாவட்டங்களின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது.

தமிழக மாநில தேர்தல் ஆணையம் டிசம்பர் 2-ம் தேதி உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் என்று இரண்டு தினங்களுக்கு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இந்நிலையில்,  தமிழ்நாட்டில் புதிதாகப் பிரிக்கப்பட்டுள்ள ஐந்து மாவட்டங்களுடன் மொத்தம் ஒன்பது மாவட்டங்களுக்கும் தொகுதி மறுவரையறைப் பணிகளை முழுமையாக முடித்தபிறகே உள்ளாட்சித் தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க. தரப்பு மூத்த வழக்கறிஞர்கள் நேற்று (18.11.2019) வாதிட்டனர்.

இதற்கு நீதிபதிகள், ’”உள்ளாட்சித் தேர்தல் குறித்த முழுமையான அறிவிப்பாணையை டிசம்பர் 13-ம் தேதிக்குள் மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிடும் என நம்புவதாக’’ தெரிவித்தனர். பின்னர் இந்த வழக்கின் அடுத்த விசாரணையையும் டிசம்பர் 13-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

தி.மு.க. சார்பில் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்தச் சொல்லி முன்பு போடப்பட்ட வழக்கில் தான் திடீரென்று இப்படியொரு வாதத்தை தி.மு.க. தரப்பில் நேற்று உச்சநீதிமன்றத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. ஒருவேளை இதன்படி நடவடிக்கை எடுக்கப்படுமாயின் டிசம்பரில் தேர்தல் நடைபெறுவது சாத்தியக் குறைவானது என்று அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. தரப்பில் நேற்று இப்படியொரு வாதம் வைக்கப்பட்டவுடன் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் ட்விட்டர் பக்கத்தில்,  “ஐந்து புதிய மாவட்டங்கள் உருவாக்கத்தைக் காரணம் காட்டி உள்ளாட்சித் தேர்தலை தாமதப்படுத்தும் முயற்சிகள் ஆபத்தானவை. இந்த முயற்சி முறியடிக்கப்பட வேண்டும். விரைவாக தேர்தல்கள் நடத்தப்பட்டு புத்தாண்டு மலர்வதற்குள் உள்ளாட்சிகளில் புதிய நிர்வாகம் மலர வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

இதுவரை உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் காலம் கடத்துவதாக ஆளும் கட்சியான அ.தி.மு.க.வை குறைகூறி வந்த தி.மு.க. திடீரென்று எதனால் ஐந்து புதிய மாவட்டங்களை காரணமாக சொல்லி உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப் போவதற்கு முயற்சி எடுக்கிறது என்கிற மர்மம் புரியவில்லை என்றும், இந்த மர்ம முடிச்சுகள் இன்னும் சில நாள்களில் தெரியவரலாம் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.