ஏழு ஆண்டுகளாக தொடரும் டோனி – கவுதம் காம்பீர் பகை!

slider விளையாட்டு
தோனி-காம்பீர்

2011-ம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணி இரண்டாவது முறையாக உலக கோப்பையை டோனி தலைமையில் வென்ற அணியில் முக்கிய வீரராக இருந்தவரும், தற்போது பா.ஜ.க.வின் டெல்லி மக்களவை எம்.பி.யாகவும் இருப்பவருமான கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர், முன்னாள் இந்திய அணி கேப்டன் டோனி குறித்து இப்போது விமர்சித்துள்ளது கிரிக்கெட் உலகில் பெரும் பரபரபரப்பை உண்டாக்கியுள்ளது.

கவுதம் காம்பீர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்று ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. கவுதம் காம்பீர், டோனி குறித்து விமர்சிப்பது புதிதல்ல என்றாலும், தற்போது ஏழு ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் ஒன்றைக் கூறி கடுமையான வார்த்தையைப் பயன்படுத்தி விமர்சித்துள்ளதுதான் இவ்வளவு பெரிய பரபரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியன் அணியின் கேப்டனான டோனி தலைமையில் 2012 –ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் முத்தரப்பு சிபி தொடரில் இந்தியா பங்கேற்றது. 2015 உலகக்கோப்பையை முன்னிட்டு அந்த தொடரில் இளம் வீரர்களை தயார் செய்ய திட்டமிட்ட கேப்டன் டோனி, அணியில் இருந்த மூன்று டாப் ஆர்டர் வீரர்களான சச்சின், சேவாக் மற்றும் கம்பீரை அழைத்து தன்னால் அனைத்து போட்டிகளிலும் மூவருக்கும் ஒரே நேரத்தில் அணியில் இடம் அளிக்க முடியாது என்று கூறவே, ஒவ்வொரு போட்டியிலும் இவர்கள் மூவரில் இருவர் மட்டுமே சுழற்சி முறையில் பங்கேற்றனர். கம்பீர் தான் இதில்  அதிகமாக பாதிக்கப்பட்டார். அவர் அப்போது சிறப்பாகவே ஆடினார் என்றாலும் அணியில் தொடர்ந்து இடம் அளிக்கப்படவில்லை.   அந்த தொடரில் இந்தியா சரியாக ஆடவில்லை. அதிக தோல்விகளை சந்தித்து தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியாத நிலையில் இருந்தது. சில போட்டிகளில் வெற்றி பெற்றால்  தான் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும் என்ற நிலையும் ஏற்பட்டது. அதுமாதிரியான கட்டங்களில் சச்சின், சேவாக், கம்பீர் மூவரும் அணியில் இடம் பெற்றனர். அந்த தொடரில் தனக்கு கிடைத்த போட்டிகளில் மட்டும் ஆடி 308 ரன்கள் குவித்த கம்பீர், கோலிக்கு அடுத்து அதிக ரன் குவித்த வீரராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த 2012-ம் ஆண்டில் நடந்த சம்பவத்தையும், அப்போது கேப்டனாக டோனியின்  எடுத்த முடிவுகளை விமர்சித்து தான் இப்போது கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.

அந்த சம்பவத்தை குறிபிட்டு கவுதம் காம்பீர், “ஒருவர் கேப்டனின் முடிவுகளை பின்பற்ற வேண்டும். ஆனால், அது முற்றிலும் குப்பை. நீங்கள் ஒரு சுழற்சி முறையை துவக்கி வைத்தீர்கள். ஆனால், கட்டாய வெற்றி தேவைப்படும் போட்டிகளில் மூவரையும் ஆட வைத்தீர்கள். நீங்கள் ஒரு முடிவு எடுத்தால், உங்கள் முடிவுகளை ஆதரியுங்கள். அதை பின்பற்றுங்கள்” என்பதாக கவுதம் காம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த தொடரில்  டோனிக்கும் கவுதம் காம்பீருக்கும் ஏற்பட்ட விரிசலுக்கு பின்னர், அடுத்த ஆண்டிலிருந்து காம்பீர் இந்திய அணியில் தன் இடத்தை இழந்தார். அப்போது முதல் டோனியை பல சந்தர்ப்பங்களில் விமர்சித்து வருகிறார். இது குறித்து கிரிக்கெட் உலகில் மிஸ்டர் கூல் என்று சொல்லப்படும் டோனி பதில் ஒன்றும் கொடுக்கவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

  எஸ்.எஸ்.நந்தன்