உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க தனித்து போட்டியா?

slider அரசியல்

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் மாதத்தில் நடைபெறவுள்ளது ஏறக்குறைய முடிவாகி விட்டது. மாநில தேர்தல் ஆணையம் டிசம்பர் 2-ம் தேதி தேர்தல் தேதியை அறிவிக்க இருக்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் உள்ளாட்சி தேர்தலுக்கான வேலைகளில் தீவிரமாக இறங்கிவிட்டன. இதில் அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் தே.மு.தி.க. மூன்று மேயர் பதவிகளை கேட்டுள்ளது. அ.தி.மு.க. தலைமைக்கு இது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற வேண்டிய உள்ளாட்சி தேர்தல் மூன்று வருடங்களுக்கு பிறகு இப்போது வரும் டிசம்பரில் நடைபெறவிருக்கிறது. இது தொடர்பான அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் வரும் டிசம்பர் 2-ம் தேதி அறிவிக்கவுள்ளது. உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் வெல்லும்போது தான், கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் பதவிக்கு வர முடியும். இதன்மூலம் கட்சியை கிராமங்கள் மற்றும் வார்டுகள் வாரியாக வளர்க்க முடியும். இதன் காரணமாகவே உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட அனைத்து கட்சிகளுமே ஆர்வம் காட்டிவருகின்றன. அ.தி.மு.க.வை பொறுத்தவரை அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் விதமாக, அதிகாரத்தில் இருக்கும்போதே உள்ளாட்சிகளில் அ.தி.மு.க.வை பலப்படுத்த விரும்புகிறது.

சமீபத்தில் நடைபெற்ற விக்கிரவாண்டி, நாங்குநேரியில் வெற்றிபெற கூட்டணி கட்சிகள் பலம் அ.தி.மு.க.வுக்கு பெரிதும் உதவியது. இந்தக் கூட்டணியை 2021-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத் தேர்தல் வரை கொண்டுசெல்ல அ.தி.மு.க. தலைமை விரும்புகிறது. அ.தி.மு.க.வில் கூட்டணியில் இப்போது பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க. ஆகியவை உள்ளன.

இந்தக் கூட்டணி கட்சிகள் எல்லாமே அ.தி.மு.க.விடம் தமிழகத்திலுள்ள 15 மாநகராட்சிகளில் சில மாநகராட்சிகளை கேட்டு வருகின்றன. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலத்திலே உள்ளாட்சித் தேர்தலை பொறுத்தவரை கூட்டணி கட்சிகளுக்கு மேயர் பதவியை விட்டுக் கொடுத்ததில்லை. இந்த நடைமுறையை கடைபிடிக்கவே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் விரும்புவர் என்கிற தகவல் அ.தி.மு.க. வட்டாரங்களில் ஓடிக் கொண்டிருக்கிறது.

அ.தி.மு.க.வை பொறுத்தவரை இப்படி ஒரு முடிவில் இருக்க, கூட்டணி கட்சியான தே.மு.தி.க.வோ திருப்பூர், திருச்சி, திண்டுக்கல் என்று மூன்று மாநகராட்சிகளை அ.தி.மு.க.விடம் கேட்டு பேரம் பேசுவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அ.தி.மு.க. தலைமையில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாம்.

அ.தி.மு.க.வை பொறுத்தவரை தமிழகம் முழுவதும் பரவலாக நகராட்சித் தலைவர் பதவிகள், ஒன்றிய சேர்மன் பதவிகள், வார்டு பதவிகள், ஏன் மாவட்ட ஊராட்சி தலைவர் பதவியில்கூட, கூட்டணி கட்சிக்காக ஒதுக்கலாம். ஆனால், நிச்சயம் மேயர் பதவி போன்ற பெரிய பதவிகளை ஒதுக்காது. இதற்கு கூட்டணி கட்சித் தலைவர்களிடம் ஜெயலலிதா காலத்து முன்னுதாரணத்தை காரணமாக சொல்லலாம். அப்படி கூட்டணி கட்சிகள் ஒத்துவராவிட்டால், உள்ளாட்சியில் மட்டும் தனித்து போட்டி என்கிற ஆயுதத்தை ஆளுங் கட்சியான அ.தி.மு.க. எடுக்க தயங்காது என்கிற கருத்தையும் முன்வைக்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

 

நிமலன்