தே.மு.தி.க.வில் மீண்டும் சலசலப்பு!

slider அரசியல்
lk sudeesh-எல்கே சுதீஷ்

தமிழகத்தில் வரும் டிசம்பர் மாதத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக எல்லாக் கட்சிகளும் தயாராகி வருகின்றன. ஒருபக்கம் ஆளும் கட்சியான அ.தி.மு.க., தன் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இன்னொரு பக்கம் எதிர்க் கட்சியான தி.மு.க.வும் தன் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் அ.தி.மு.க.வின் கூட்டணிக் கட்சியான தே.மு..தி.க.வில் தொகுதிப் பங்கீடு சம்பந்தமாக பேசுவதற்கு அமைக்கப்பட்ட குழுவுக்கு எல்.கே.சுதீஷை நியமனம் செய்தது தொடர்பாக அந்தக் கட்சியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

தே.மு.தி.க. சார்பில் அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேசுவதற்கு ஒரு குழு அமைத்துள்ளார் அதன் தலைவர் விஜயகாந்த். இந்த குழுவுக்கு அவரது மச்சான் எல்.கே.சுதீஷ்  தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சுதீஷ் தலைமையிலான இந்தக் குழுவில் இளங்கோவன், மோகன்ராஜ், பார்த்தசாரதி, ஏ,எஸ்.அக்பர் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். இந்த நியமனம் கட்சியிலுள்ள சில முக்கிய நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாம்.

இது குறித்து தே.மு.தி.க. தலைமை கழக நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். அவர், “கடந்த பாராளுமன்றத் தேர்தலின்போது அ.தி.மு.க., தி.மு.க. என இரு கட்சிகளிடமும் ஒரே சமயத்தில் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தியவர் சுதீஷ். இந்தமாதிரி செயல் அப்போது பெரும் சர்ச்சையானது. கடைசியில், தி.மு.க.விடமும் கேட்டது கிடைக்காமல், அ.தி.மு.க.விடமும் கேட்டது கிடைக்காமல், வேறு வழியின்றி அ.தி.மு.க. கொடுத்த தொகுதியை வாங்கி தேர்தலில் போட்டியிட்டோம். சுதீஷ் போட்டியிட்ட தொகுதி உட்பட அனைத்து தொகுதியிலும் தோல்வியடைந்தோம். தலைவர் விஜயகாந்த் அப்போது உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். இந்த பின்னடைவுக்கும், அவப்பெயருக்கும் முழுக்காரணமாக இருந்தவர் சுதீஷ். இப்படிபட்ட இவரையே உள்ளாட்சி தேர்தல் தொகுதி பங்கீடு குழுவுக்கு தலைவராக நியமித்ததில் நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் பலருக்கும் வருத்தம் தான்’’ என்று சொன்னார்.

தமிழகத்தைப் பொறுத்தவரை சட்டமன்றத் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல்களைவிட உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி கட்சிகளிடையே மன ஒற்றுமை வருவது என்பது ரொம்பவே கடினம். இறுதிக்கட்டங்களில் கூட பிரிவும் பிளவும் ஏற்பட வாய்ப்புள்ள ஒன்றுதான் உள்ளாட்சித் தேர்தல். இப்படியான ஒரு தேர்தலில் கூட்டணி பேச்சுவார்த்தையில் பங்கெடுப்பவர் அரசியல் முதிர்ச்சியுடனும், ராஜதந்திர விவேகத்துடன் இருப்பாரானால் ஒதுக்கீட்டிலும் லாபம் கிடைக்கும். பேச்சுவார்த்தையும் சுமூகமாக முடியும். இந்த தடவையாவது சுதீஷ் இதுபோல நடந்துகொண்டு தே.மு.தி.க.வுக்கு சாதகமாக முடிப்பாரா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

நிமலன்