டி.கே.சிவக்குமார் வழக்கால் ஜாமீன் பெறும் ப.சிதம்பரம்!

slider அரசியல்

கர்நாடகா காங்கிரஸில் முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு அடுத்து செல்வாக்கோடு இருப்பவர் டி.கே.சிவக்குமார். மேலும், காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியாவின் குட்புக்கிலும் இடம்பெற்றுள்ளவர். அனேகமாக, விரைவில் அடுத்த கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக சிவக்குமார் அறிவிக்கப்படவும் அதிக வாய்ப்பிருக்கிறது. இவர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட பணமோசடி வழக்கில் ஜாமீன் பெற்றிருக்கிறார். இவர் ஜாமீனை ரத்து செய்து மீண்டும் சிறையில் அடைக்க நீதிமன்றத்தை அமலாக்கத்துறை நாடியதால் கர்நாடக காங்கிரஸ் பெரும் அதிர்ச்சிக்குள்ளானது.

கடந்த செப்டம்பர் 3-ம் தேதி அன்று அமலாக்கத்துறையால் கருப்புப் பண மோசடி வழக்கில் டி.கே.சிவகுமார்  கைது செய்யப்பட்டு டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் ஜாமீன்கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிவக்குமார் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் அமலாக்கத்துறை தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தபோதும், டெல்லி உயர் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது.

இதன்பின்னர் கர்நாடகம் திரும்பிய டி.கே.சிவக்குமார் பல்வேறு கோவில்களுக்குச் சென்று வழிபாடு நடத்தி வந்தார்.  திடீரென இவருக்கு  கடந்த திங்கள் கிழமை (11.11.2019) நள்ளிரவு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து பெங்களூரு சேஷாத்திரபுரத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் சிவக்குமார். இதேநேரத்தில் அமலாக்கத்துறை சிவக்குமாரை மீண்டும் சிறையில் அடைக்க நீதிமன்றங்களை நாடியது. உச்சநீதிமன்றத்தில், அமலாக்கத்துறை  இது சம்பந்தமாக மனு ஒன்றும் தாக்கல் செய்திருந்தது. அதில் சிவக்குமாரின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தது.

இந்த மனு இன்று (15..11.2019) நீதிபதிகள் நரிமன் மற்றும் ரவீந்திர பட் ஆகியோரது முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. விசாரணையின் முடிவில், அமலாக்கத்துறையின் மனுவை நீதிபதிகள்  தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு எதிராக அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவில் உள்ள வாதங்களை மாற்றாமல், அப்படியே நகல் எடுத்து இவ்வழக்கில் மனுத் தாக்கல் செய்துள்ளதாக அமலாக்கத்துறைக்கு நீதிபதிகள் கண்டனமும் தெரிவித்தனர்.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் சிவக்குமார் வழக்கில் ப.சிதம்பரம் வழக்கை மேற்கோள் காட்டி அமலாக்கத்துறைக்கு கண்டனம் தெரிவித்து இருப்பதை கவனிக்கையில், அமலக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் இருந்துவரும் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் கிடைப்பதற்கான வாய்ப்புகள் கூடியுள்ளதாகவே டெல்லியிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

விசாகன்