ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் மகாராஷ்ட்ரா அரசியல்

slider சினிமா
maharastra politics-மகாராஷ்ட்ரா அரசியல்

மகாராஷ்டிராவில் பா.ஜ.க.வுக்கும், சிவசேனாவுக்குமான முதல்வர் பதவி விவகாரத்தில் அந்தக் கூட்டணி உடைந்தது. அடுத்ததாக சிவசேனா கட்சி சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஆட்சி அமைக்க எடுத்த முயற்சிகளும் தோல்வியை சந்தித்தது. இதனால், கவர்னர் எந்தக் கட்சியும் ஆட்சியமைக்க போதிய பலம் இல்லாததால் குடியரசு ஆட்சியை கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் மீண்டும் சிவசேனா-தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் ஆட்சியமைக்கும் பேச்சுவார்த்தையில் ஈடுபடத் துவங்கியுள்ளன.

மகாராஷ்டிராவில் குடியரசு ஆட்சியை கவர்னர் அமல்படுத்தியபோதும், இது வெறும் ஆறு மாதத்துக்கு மட்டும் தான் என்றும், கட்சிகள் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க முன்வந்தால், அவர்களை ஆட்சியமைக்க அழைப்பேன் என்றும் தெளிவுபடுத்தியுள்ளார். அந்த வகையில் கட்சிகளுக்கு கிடைத்த கால அவகாசம் இது என்றும் சொல்லலாம்.

இந்த கால அவகாச வாய்ப்பை சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் பயன்படுத்திக் கொள்ள தொடங்கிவிட்டன. சென்றமுறை தோல்வியில் முடிந்திருந்தாலும், இரண்டாவது முறையாக ஆட்சியமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் இந்தக் கட்சிகளின் தலைவர்கள் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர். இந்தப் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டும்   சிவசேனாவுக்கு முதல்வர் பதவியை விட்டுத்தர சம்மதம் தெரிவித்துள்ளன. இதன் மூலம் கடந்த சில நாட்களாக நீடித்து வந்த சஸ்பென்ஸ் முடிவுக்கு வந்துள்ளது. சிவசேனா தலைமையில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி உருவாவது உறுதியாகிவிட்டது.

தேசியவாத காங்கிரஸின் மூத்த தலைவர் நவாப் மாலிக் இன்று (15.11.2019) இது குறித்து கூறுகையில் ’’சிவசேனாவுக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையிலான பிளவு முதல்வர் பதவிக்கு மேல் இருந்தது. எனவே, நாங்கள் முதல்வர் பதவிக்கு போட்டியிடப் போவதில்லை. முதல்வர் சிவசேனாவிலிருந்து வருவார்” என்று கூறியுள்ளார். தங்கள் நிலையும் இதுதான் காங்கிரஸும் என்று கூறிவிட்டது.

அனேகமாக நாளை அல்லது நாளை மறுநாள் சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே  கவர்னரை சந்திப்பார் என்றும், அப்போது கூட்டணி கட்சிகளின் ஆதரவுக் கடிதத்தை கவர்னரிடம் கொடுப்பார் என்றும் கூறப்படுகிறது. இதன்பிறகு கவர்னர் சிவசேனா தலைமையிலான கூட்டணி ஆட்சியமைக்க அழைப்பு விடுவிக்க அதிக வாய்ப்பிருப்பதாக மகாராஷ்டிராவிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே சிவசேனா சார்பில் முதல்வராக அதன் தலைவர் உத்தவ் தாக்கரே விரும்பாவிட்டால் அந்தக் கட்சியின் சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்வாகியுள்ள ஏக்நாத் ஷிண்டே முதல்வராக வாய்ப்பு உள்ளதாகவும் பேச்சு கிளம்பியுள்ளது. மேலும், தேசியவாத காங்கிரஸுக்கு துணை முதல்வர் பதவி என்றும், காங்கிரஸுக்கு சபாநாயகர் பதவி என்றும்கூட புதுப்புது தகவல்கள் புறப்படத் தொடங்கியிருக்கிறது.

சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் எதிரெதிர் அணியாக போட்டியிட்ட இந்தக் கட்சிகள் பதவிக்காக இப்போது சமரசம் செய்துகொண்டு ஒருவேளை ஆட்சியமைத்தாலும், இந்த ஜனநாயக விரோத செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் மகாராஷ்டிரா பொது மக்கள்.

 

 எம்.டி.ஆர்.ஸ்ரீதர்