சிக்கலில் டிடிவி தினகரன்-அமைச்சர் விஜயபாஸ்கர்

slider அரசியல்
dinakaran-vijaya-baskar – rknagar

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்தபிறகு அவர் வெற்றிபெற்றிருந்த ஆர்.கே.நகர் தொகுதியில் டி.டி.வி. தினகரன் அ.தி.மு.க.வின் வேட்பாளராக நின்றார். அப்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட அனைத்து அமைச்சர்களும் அந்தத் தொகுதியில் முழுமூச்சாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். ஓ.பி.எஸ். தனி அணியாக இருந்தா அந் நேரத்தில் வாக்காளர்களுக்கு அதிகளவில் பணபட்டுவாடா செய்யப்பட்டதின் புகாரின்பேரில் ஆர்.கே.நகர் தேர்தல் நிறுத்தப்பட்டது. இதற்கு அடுத்தமுறை மீண்டும் நடத்தப்பட்ட இடைத் தேர்தலில் தான் டி.டி.வி. தினகரன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்த ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டவர் மருதுகணேஷ். இவர்  தேர்தல் காலங்களில் பணப்பட்டுவாடாவை தடுக்க புதிய விதிமுறைகளை உருவாக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்குகள் நீதிபதிகள் சத்தியநாரயணன் மற்றும் சேஷசாயி அமர்வு முன் இன்று (15.11.2019) மீண்டும் விசாரணைக்கு வந்தது.   அப்போது மருது கணேஷ் சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

அதில் ’இந்த வழக்கு தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் வருமான வரித்துறை சார்பில் சீல் வைக்கப்பட்ட உறையில் விசாரணை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், மனுதாரரால் விசாரணையின் உண்மை விவரங்களை அறிந்து கொள்ள முடியவில்லை. மேலும், இந்த வழக்கின் டைரியும் சீல் வைக்கப்பட்ட கவரில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆகவே, இந்த ஆவணங்களையும் பார்வையிட அனுமதிக்க வேண்டும்’ என்று   தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது தாக்கல் செய்த ரகசிய ஆவணங்களை பொதுவெளியில் வெளியிட முடியாது என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் நீதிபதிகள் கேட்டனர். பின்னர் இது தொடர்பாக டிசம்பர் 18 -ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டனர்.

ஆர்.கே. நகரில் ஆளும் கட்சி சார்பில் தினகரன் போட்டியிட்டபோது, தொகுதியில் பணம் வாக்காளர்களுக்கு அதிகளவில் விநியோகிக்கப்பட்ட புகாரின்பேரில் அப்போது அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் இது சம்பந்தமாக வருமானவரித் துறையினர் ரெய்டு நடத்தினர். இதன்பிறகு தான் பணபட்டுவாடா காரணத்திற்காக அந்த தேர்தல் நிறுத்தப்பட்டது. இந்த வழக்கை பொறுத்தவரை ஒருவேளை தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ் தரப்புக்கு சாதகமாக வழக்கு திசைமாறி செல்லுமானால் அது தினகரன் எம்.எல்.ஏ. பதவிக்கு மட்டுமல்ல, அமைச்சர் விஜயபாஸ்கர் பதவிக்கும் வேட்டு வைக்கவும் அதிக வாய்ப்பிருப்பதாக சொல்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

   – தொ.ரா.ஸ்ரீ.