ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் – ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

slider அரசியல்

தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டித் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் அரசியல் கருத்துகள் ஒவ்வொன்றும் அதிரடியாகவும், பரபரபரப்பு ஏற்படுத்துவதாகவும் இருப்பது வழக்கம். அந்தவகையில், இப்போது தமிழக முதல்வர் நாவடக்கத்துடன் பேசவேண்டும் என்றும்,   நடிகர் ரஜினி கண்டிப்பாக அரசியலுக்கு வர மாட்டார் என்றும் கூறியிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஒரு வாரத்துக்கு மேலான அரசியல் விஷயங்களில், ’நடிகர் ரஜினியும், கமலும் அரசியலுக்கு வந்தால் சிவாஜிகணேசனுக்கு ஏற்பட்ட நிலைமைதான் ஏற்படும்’ என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதுதான் ஹைலைட்டாக விவாதிக்கப்பட்டும், பேசப்பட்டு வரப்படுகிறது.

இந்நிலையில்,  விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நேற்று (13.11.2019) பேட்டி அளித்தார். அப்போது அவர், “நடிகர் திலகம் சிவாஜி கணேசனைப் பற்றி தமிழக முதல்வர் எடப்பாடி மிகவும் மோசமாக விமர்சித்திருக்கிறார். அவர் நாவடக்கத்துடன் பேச வேண்டும்.   சிவாஜிக்கு தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு முக்கியக் காரணம் எம்.ஜி.ஆருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற முயன்றதால்தான். சிவாஜி கணேசன் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்திருந்தால் அவரது இயக்கம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கும். சிவாஜி பற்றி பேசுவதை முதல்வர் பழனிசாமி நிறுத்திக் கொள்ள வேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இருக்கிறோம். இன்னும் இரண்டு நாட்களில் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச, தி.மு.க. தலைவரை காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி சந்திக்க உள்ளார்.    நாங்குநேரியில் காங்கிரஸ் செய்த மிகப்பெரிய தவறு உள்ளூர் ஆட்களுக்கு வாய்ப்பு வழங்காமல், வெளியூர் வேட்பாளரை நிறுத்தியதுதான். நடிகர் ரஜினி கண்டிப்பாக அரசியலுக்கு வரமாட்டார். ஒவ்வொரு படம் வெளிவரும்போதும் இதுபோன்ற கருத்தை அவர் கூறி வருகிறார். அரசியலுக்கு வருவதற்கு அவருக்கு தைரியம் இல்லை. கமலஹாசன் மிக அழகாக, யாருக்கும் புரியாத மொழியில் பேசி வருகிறார். போகப்போகத் தான் அவர் என்ன செய்யப் போகிறார் என்பது தெரியும்’’ என்று கூறியுள்ளார்.

சமீபத்தில் நடிகர் ரஜினி,  ’தமிழகத்தில் அரசியல் ஆளுமைக்கான வெற்றிடம் ஏற்பட்டுள்ளது’ என்று சொல்லியிருந்தார். இதற்கு தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. உள்ளிட்ட பல கட்சிகள் தங்களுக்கேரிய விதங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த எதிர்ப்பு என்பது ரஜினியை பல வகைகளிலும் விமர்சனம் செய்வதாகவும் அமைந்து வருகிறது. இந்த வரிசையில் காங்கிரஸ் தரப்பிலிருந்து கே.எஸ்.அழகிரியைத் தொடர்ந்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் விமர்சனம் செய்துள்ளார். மேலும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சிவாஜி குறித்த பேச்சுக்கும் கண்டம் தெரிவித்துள்ளார். இதன்மூலம் பாராளுமன்றத் தேர்தல் முடிவுக்கு பிறகு சத்தமில்லாதிருந்த இளங்கோவன் குரல் மீண்டும் பலமாக ஒலிக்கத் ஆரம்பித்திருக்கிறது.

 

தொ.ரா.ஸ்ரீ.