ரஜினிக்கு ஆதரவு தெரிவித்த மு.க.அழகிரி!

slider அரசியல்
rajini with azhagiri

கடந்த 10-ம் தேதி நடைபெற்ற தி.மு.க பொதுக்குழுவில், அக் கட்சியின் தலைவர் ஸ்டாலினுக்கு, பொதுச் செயலாளருக்கு உண்டான அதிகாரங்களும் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. இனி தி.மு.க.வில் எந்தவொரு நிர்வாகியை நீக்கவும், எவருக்கும் பதவி அளித்திடவுமான அதிகாரத்தை அவர் நேரிடையாக பெறுகிறார். இந்தளவுக்கு தி.மு.க.வில் ஸ்டாலின் அதிகாரம் பெற்றுள்ள நிலையில், மு.க.அழகிரிக்கு இனி தி.மு.க.வில் எந்தக் காலத்திலும் நுழைய வாய்ப்பில்லை என்பது உறுதியாகிவிட்டது. இந்நிலையில் மு.க.அழகிரி இப்போது நடிகர் ரஜினிக்கு ஆதரவாக பேசியிருக்கிறார்.

தி.மு.க.வைவிட்டு சில வருடங்கள் ஆனபின்பும் மு.க.அழகிரி வேறு எந்தக் கட்சியிலும் சேராமல்தான் இருந்து வருகிறார். இடையில் பா.ஜ.க.வில் சேரப் போகிறார் என்பது போன்ற தகவல் வந்து கொண்டிருந்தது. ஆனால், அழகிரி தரப்பிலிருந்து எந்தவொரு ரியாக்‌ஷனும் இல்லை. ரொம்ப வருடமாகவே ரஜினியும், அழகிரியும் நட்பு அடிப்படையில் நெருங்கிப் பழகி வருகிறார்கள். இப்போது தமிழகத்தில் அரசியல் ஆளுமைக்கான வெற்றிடம் உள்ளது என்கிற ரஜினியின் பேச்சுக்கு பல அரசியல் தலைவர்களும் கருத்து வருகிறார்கள்.

இது குறித்து அழகிரியிடம் இன்று (14.11.2019) செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அழகிரி, “தமிழகத்தில் வெற்றிடம் இருப்பது உண்மைதான். தி.மு.க. தலைவர் கருணாநிதி, மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆகியோரின் மறைவிற்குபின் தமிழகத்தில் பெரிய வெற்றிடம் இருக்கிறது. நல்ல தலைவர்கள் யாரும் இல்லை. ரஜினி சொன்னது உண்மைதான். அவரின் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன். ரஜினி கட்சி தொடங்க வேண்டும். அவர் வந்த பின் வெற்றிடம் போகும். தமிழகத்தில் ஆளுமையான தலைவராக ரஜினி உருவெடுப்பார். ரஜினி வருவார். ரஜினி கட்சியில் சேர்வது குறித்து எல்லாம் கருத்து கூற முடியாது’’ என்று கூறியுள்ளார்.

பல வருடங்களாக ரஜினியோடு அழகிரிக்கு இருந்துவரும் நட்பு மற்றும் தி.மு.க.வில் இனி அழகிரி சேர்வதற்கான வாய்ப்பு முற்றிலும் அறவே இல்லாமல் போனதோடு, இப்போது ரஜினி பற்றி அழகிரி கூறியுள்ளதையும் பார்த்தால், ஒருவேளை ரஜினி கட்சி ஆரம்பிக்கும்பட்சத்தில் அழகிரி அதில் இணைவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதாகவே தோன்றுகிறது.

  • விசாகன்