மீண்டும் ஏமாந்த காங்கிரஸ்

slider அரசியல் உலகம் வணிகம்

 

ரஃபேல் போர் விமானம்

மத்தியில் ஆட்சியில் இருந்துவரும் பா.ஜ.க.வுக்கு எதிரான மாபெரும் குற்றச்சாட்டாக தங்களுக்கு கிடைத்த பிரம்மாஸ்திரம் போன்ற ஒன்றாகத்தான் ரஃபேல் வழக்கை எதிர்க்கட்சியான காங்கிரஸ் கருதி வந்தது. மேலும், இதை வைத்து பா.ஜ.க.வுக்கு எதிராக பெரும் அரசியல் செய்யவும் திட்டமிட்டிருந்தது. ஆனால், இன்று (14.11.2019) உச்சநீதிமன்றம் இந்த வழக்கில், “முறைகேடு நடந்திருப்பதாக தெரியவில்லை’’ கூறிவிட்டது. இது காங்கிரஸ் கட்சிக்கு பெருத்த பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த பா.ஜ.க. ஆட்சியில் பிரான்ஸ் நாட்டினரிடமிருந்து இந்திய ராணுவத்திற்கு ரஃபேல் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒரு ஒப்பந்தம் போட்டது. இதில் கோடிக்கணக்கில் ஊழலும், முறைகேடும் நடைபெற்றுள்ளதாக வழக்கறிஞர்கள் எம்.எல்.ஷர்மா மற்றும் வினீத் தண்டா, யஷ்வந்த் சின்கா, பிரசாந்த் பூஷன், ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் உள்ளிட்டோர் பொதுநல வழக்கு தொடுத்தனர். இதில் 50,000 கோடியளவுக்கு அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டுக்கள் வைத்தது. ராகுல் காந்தி இந்த வழக்கு சம்பந்தமாக பிரதமர் மோடி மீதும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீதும் பகிரங்க குற்றச்சாட்டுகளை கூறி வந்தார். கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலின்போது ராகுல் காந்தியும், காங்கிரஸ் மற்றும் எதிர்க் கட்சிகளும் இந்த குற்றச்சாட்டையே பிரதானமாக வைத்து பிரசாரம் செய்தன.

இந்த வழக்கில் பாராளுமன்றத் தேர்தலுக்கு இரண்டு மாதத்துக்கு முன்பே உச்சநீதிமன்றம் முறைகேடு எதுவும் நடைபெறவில்லை என்று தீர்ப்பு கூறியிருந்தது. அந்த தீர்ப்பை எதிர்த்துதான் உச்சநீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில்தான் இப்போது உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, “ரபேல் வழக்கில் நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை தேவை இல்லை. யார் மீதும் எஃப்.ஐ.ஆர். பதிய வேண்டியது இல்லை.இதில் முறைகேடு எதுவும் நடைபெறவில்லை” என்று தீர்ப்பு கூறியுள்ளது. இந்த தீர்ப்பு பா.ஜ.க. தரப்பை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வரும் டிசம்பர் மாதம் ஜார்கண்ட் மாநிலத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதன்பிறகு அடுத்த வருடங்களில் வேறு சில மாநிலங்களிலும் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. இத் தேர்தல்களில் பா.ஜ.க.வுக்கு எதிராக முக்கிய ஆயுதமாக ரஃபேல் ஊழல் வழக்கை தான் காங்கிரஸ் பயன்படுத்த திட்டமிட்டிருந்தது. இதில் தான் இப்போது அந்தக் கட்சிக்கு பெரிய இடி விழுந்திருக்கிறது. பா.ஜ.க. தரப்பில் இந்த வழக்கு சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சரான நிர்மல் சீதாராமனுக்கு இந்த தீர்ப்பு பெரும் நிம்மதியை கொடுத்திருக்கிறது.

எம்.டி.ஆர்.ஸ்ரீதர்