கோபத்தில் முதல்வர் பழனிச்சாமி!

slider அரசியல்
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில், கடந்த பாராளுமன்றத் தேர்தல் முதல் விஜயகாந்தின் தே.மு.தி.க. நீடித்து வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத் தேர்தல்களில் அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக விஜயகாந்தும், பிரேமலதாவும் பிரசாரமும் மேற்கொண்டனர். வரவுள்ள உள்ளாட்சித் தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரவுள்ளது. இந்நிலையில், தமிழக அமைச்சரான பாஸ்கரன் விஜயகாந்தை விமர்சித்து பேசியுள்ள செயல் அ.தி.மு.க. கூட்டணியில் பெரும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கையில் கால்நடைத்துறை சார்பில் நடந்த விழாவில், காதி கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் பாஸ்கரன் நேற்று (13.11.2019) கலந்து கொண்டார்.

இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அமைச்சர் பாஸ்கரன்  ‘‘அரசு சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள்  செயல்படுத்தப்படுகின்றன. சிவகங்கையில் பாதாளச் சாக்கடை திட்டப்பணிகள் உள்ளாட்சி தேர்தலுக்குள் முடிவடையும். காரைக்குடியை தனி மாவட்டமாக பிரிக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை. நடிகர்கள் எல்லாம் கட்சி ஆரம்பித்தார்கள். உங்களுக்கு தெரியாதது இல்லை. விஜயகாந்த் கூட கட்சி ஆரம்பித்தார். அதெல்லாம் அப்டி, இப்டி ஆயிருச்சு. இனிவரும் காலங்களில் நடிகர்கள் கட்சி ஆரம்பித்தால், அதெல்லாம் சரியா வராது’’ என்றார்.

இதேபோன்று நேற்று முன்தினம் (12.11.2019) காரைக்குடியில் நடைபெற்ற இலவச லேப்டாப்  வழங்கும் நிகழ்ச்சியில், ‘செல்போனை கண்டுபிடிச்சவங்களை  தூக்கிப்போட்டு மிதிக்கணும்’என்று அமைச்சர் பாஸ்கர் பேசியதும் பெரும் பரபரபரப்பை ஏற்படுத்தியிருந்ததும் கவனிக்கத்தக்கது.

டிசம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலையும்,  2021-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலையும், இப்போதுள்ள பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க. கூட்டணியுடன் சந்திக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டமிடுதல்களை செய்துவரும் நிலையில், அவரது அமைச்சரவை சகாவான பாஸ்கரன், கூட்டணி கட்சித் தலைவரான விஜயகாந்தை இந்த வகையில் விமர்சனம் செய்துள்ளது முதல்வருக்கு பெருத்த தலைவலியை உண்டாக்கியுள்ளதாகவும், சம்பந்தபட்ட அமைச்சர் மீது முதல்வர் கோபமாக இருப்பதாகவும் அ.தி.மு.க. தலைமை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • நிமலன்