ரஜினி பற்றி முதல்வர் பழனிச்சாமி தொடர் விமர்சனம் ஏன், எதற்கு,எப்படி, எதனால்,யாரால்?

slider அரசியல்
முதல்வர் பழனிச்சாமி

 

கடந்த இரண்டு, மூன்று நாள்களாகவே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, நடிகர் ரஜினியை நேரிடையாக தாக்கிப் பேசத் தொடங்கியுள்ளார். இதன் பின்னால், வரவுள்ள 2021–ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், இப்போதிருக்கும் பா.ஜ.க. உள்ளிட்ட அ.தி.மு.க. கூட்டணியிலிருக்கும் கட்சிகள் ரஜினி பக்கம் போய்விடக் கூடாது என்கிற அரசியல் ராஜதந்திர கணக்கு அடங்கியிருப்பதாக தமிழக அரசியல் களத்தில் தீவிர அலசல் தொடங்கியிருக்கிறது.

நடிகர் ரஜினியை தாக்கிப் பேசும் முதல் பேச்சு, விக்கிரவாண்டியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது தொடங்கியது. அன்றைய கூட்டத்தில் முதல்வர் பேசுகையில், ‘’பாதிநாள் இங்கேயும் மீதிநாள் வெளியேயும் இருப்பவர்களுக்கு முதல்வர் ஆசை வந்துள்ளது. 67 ஆண்டுகள் வேறொரு தொழிலில் இருந்துவிட்டு, இதையும் ஒரு தொழில்போல எண்ணி வர நினைக்கிறார்கள். இது அரசியல். மக்களுக்காக 24 மணிநேரமும் உழைப்பவர்கள்தான், இதில் இருக்க முடியும். திடீரென அரசியலுக்குள் பிரவேசித்து, பதவியைப் பிடித்துவிடத் துடிக்கிறார்கள். வீட்டிலிருந்து பேட்டி கொடுப்பவர்களால் அது முடியாது. உழைப்பின் மூலமாக மக்களுக்கு அடையாளம் காட்டப்பட்டவர்கள்தான் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா. எத்தனையோ பேர் கட்சி தொடங்கி காணாமல் போய்விட்டார்கள்” என்று பேசினார்.

இதன் தொடர்ச்சியாக சில தினங்களுக்கு முன்பு கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில், ரஜினி குறித்த கேள்விக்கு முதல்வர் பதிலளிக்கையில், “அவர் ஒரு நடிகர். கட்சி தொடங்கியிருக்கிறாரா! அவர் ஒரு தலைவரா! சம்பந்தம் இல்லாத ஒருத்தர் கருத்து கூறினால், அதைப்பற்றி ஏன் கவலைப்பட வேண்டும். தமிழகத்தில் வெற்றிடம் இல்லை என்பது நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க பெற்ற வெற்றியால் நிரூபணமாகிவிட்டது’’ என்று பேசினார். இந்த இரண்டு பேச்சுகளிலும் ரஜினியை நேரிடையாகவே முதல்வர் தாக்கிப் பேசியது பலரையும் ஆச்சர்யப்படுத்தியது.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் திடீர் ரஜினி மீதான தாக்குதல் குறித்து பல்வேறு கருத்துகள் சமூக வலைத் தளங்களில் வலம் வர ஆரம்பித்துள்ளன. குறிப்பாக, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ரஜினியை நேரிடையாக தாக்கிப் பேசத் தொடங்கியுள்ள காலக்கட்டம் ரொம்பவும் முக்கியம். கமல்ஹாசன் நடத்திய விழா அன்று செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, ‘’எனக்கு காவி சாயம் பூச சிலர் நினைக்கிறார்கள். இதில் திருவள்ளுவரும் சிக்கமாட்டார். நானும் சிக்கமாட்டார்’’ என்று பேசியிருந்தார். இதன் பிறகுதான் விக்கிரவாண்டி கூட்டத்தில் ரஜினி மீதான தாக்குதலை முதல்வர் தொடங்கியுள்ளார். இதன் பின்னணியில், கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாகவே இப்போது அ.தி.மு.க. தலைமையிலுள்ள பா.ஜ.க. மற்றும் பா.ம.க. கட்சிகள் ரஜினி தலைமையில்,  செல்லவிருப்பதான பேச்சுக்கள் பலமாகவே அடிபட்டது. இப்படியொரு ஏற்பாட்டுக்கு பா.ஜ.க.வே முயலுவதாகவும் முதல்வர் தரப்பு கணக்கு போடத் தொடங்கியது.

 

ஆக, உள்ளாட்சித் தேர்தலையும், அடுத்துவரும் சட்டமன்றத் தேர்தலையும் இப்போதுள்ள கூட்டணியோடு சந்திக்க திட்டமிட்டிருந்த முதல்வருக்கு இது அதிர்ச்சியளித்தது. இந்த விஷயத்தில் பா.ஜ.க.வை பகைத்து கொள்ள முடியாமலும் தவித்து வந்தார். ரஜினியின் திருவள்ளுவர், காவி பேச்சு வந்தவுடன், இனி பா.ஜ.க பக்கம் ரஜினி செல்ல மாட்டார் என்று முடிவெடுத்த பின்னரே முதல்வரின் ரஜினி தாக்குதல் தொடங்கியிருக்கிறது. இதில் முதல்வரின் ராஜதந்திரம் பெரியளவில் அடங்கியிருக்கிறது’’ என்ற கருத்தை முன்வைக்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

 

தொ.ரா.ஸ்ரீ.