ஜனநாயகத்தை இழிவு செய்த மஹராஷ்ட்ர அரசியல்!

slider அரசியல்
hahaha maharastra

மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தலுக்கு முன்பு பா.ஜ.க. – சிவசேனாவும்  கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. இரண்டு கட்சிகளும் சேர்ந்து பெரும்பான்மையைத் தாண்டியும் வெற்றிகள் பெற்றன. ஆனாலும் முதல்வர் பதவி யாருக்கு? என்பதில் தகராறு வந்து கூட்டணியைவிட்டு பிரிந்தன. மேலும், இப்போது மகாராஷ்டிராவில் குடியரசு ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.

தேர்தல் கூட்டணியில் பா.ஜ.க.வுடன் உடனிருந்த சிவசேனாவோ, தேர்தல் முடிவுக்கு பிறகு, “இரண்டரை ஆண்டுகள் எங்கள் கட்சிக்கும் முதல்வர் பதவி வேண்டும்” என்று பா.ஜ.க.விடம் கண்ட்டிப்புடன் பேசத் தொடங்கியது. இதற்கு பா.ஜ.க. ஒத்துக் கொள்ளாததுடன் தனிப்பெரும் கட்சியான தங்களை ஆட்சியமைக்க கவர்னர் அழைத்தபோது, தாங்கள் ஆட்சியமைக்கவில்லை என்று எடுத்த முடிவை கவர்னரிடம் தெரிவிக்கவும் செய்தது.

பா.ஜ.க.வுடனான மோதலால் பா.ஜ.க.வுக்கு அடுத்த தனிப்பெரும் கட்சியான சிவசேனாவை ஆட்சியமைக்க அழைத்தார் கவர்னர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த நினைத்த சிவசேனா, தேசியவாத காங்கிரஸுடன் ஆட்சியமைக்கும் பேச்சுவார்த்தை தொடங்கியது. இதற்காக அதன் தலைவர் சரத்பவாரை சிவசேனா தலைவர்கள் சந்தித்து பேசினார்கள். சரத்பவாரும் இது சம்பந்தமாக டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் தீவிர ஆலோசனை நடத்தினார்.

இந்த நிகழ்வுகளால் ஊடகங்களும் சிவசேனா – தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைத்து மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்கப் போகின்றன என்றும், காங்கிரஸ் வெளியிலிருந்து ஆதரவு கொடுக்க தயாராகிவிட்டதாகவும் செய்திகளை வெளியிடத் தொடங்கின. காங்கிரஸ் தலைவர் சோனியாவும், மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர்களுடன் இது சம்பந்தமாக பேசியதன் பின்னால், சிவசேனாவுக்கு முதல்வர் பதவியை விட்டுக் கொடுக்கவும், சிவசேனா- தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கும் மனநிலைக்கும் வந்திருந்தார். இதனால் சிவசேனா தரப்பு உற்சாகம் அடைந்திருந்தது.

ஆனால், நடந்ததோ வேறு. கடந்த திங்கள் கிழமை (11-ம் தேதி),  இரவு 7 மணிக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சோனியா காந்திக்கு போன் செய்துள்ளார். அப்போது பேசிய சரத் பவார், ’’சிவசேனாவுடன் சேர்வது சரியாக வரும் என்று தோன்றவில்லை. ஆறு மாதம் காத்திருந்து தேர்தலை சந்திக்கலாம். பா.ஜ.க. – சிவசேனா தனித்தனியாக நிற்கும். அதனால் நமக்கு பலன் ஏற்படும். நாம் ஆட்சி அமைக்க முடியும். நாம் அவசரப்படக் கூடாது.  தேசியவாத காங்கிரஸைவிட சிவசேனா இரண்டு இடங்கள்தான் அதிகமாக வென்றுள்ளது. அப்படி இருக்கும்போது சிவசேனாவிற்கு மொத்தமாக முதல்வர் பதவியை வாரி வழங்குவது சரியாக இருக்காது. அதனால் கொஞ்சம் யோசிக்கலாம்’’ என்று கூறியுள்ளார். இந்த நிமிடம்தான் மகாராஷ்டிரா அரசியலை மாற்றி இருக்கிறது. இதனால்தான் சோனியா சிவசேனாவிற்கு ஆதரவு அளிக்கும் முடிவை மாற்றிக்கொண்டார் என்கிறார்கள். இதனால் சிவசேனா ஆட்சி அமைக்க முடியாமல் போனது. மகாராஷ்டிராவில் குடியரசு ஆட்சி நடைமுறைக்கு வந்துள்ளது.

கவர்னர் தரப்பில் ஆறு மாதத்துக்கு குடியரசு ஆட்சி என்றும், பெரும்பான்மை நிரூபிக்க கூட்டணி கட்சிகளின் அதிகாரப்பூர்வ கடிதத்துடன் வந்தால் ஆட்சியமைக்க வாய்ப்பு தரப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு மீண்டும் சிவசேனா – காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் இடையே பேச்சுவார்த்தை ஆரம்பமாகியுள்ளதாக மகாராஷ்டிராவிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிவசேனா தலைவர் உத்தவ் தக்கரேவும் இதை உறுதிபடுத்தியுள்ளார். மும்பையில் இன்று ( 13.11.2019) தமது கட்சி எம்.எல்.ஏக்களுடனான ஆலோசனை கூட்டம் நடத்தினார் உத்தவ் தாக்கரே. இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘’ சிவசேனாவும், பா.ஜ.க.வும் நீண்டகாலம் கூட்டணி அமைத்திருந்தன. தற்போது நாங்கள் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸுடன் இணைந்து செல்ல இருக்கிறோம். காங்கிரஸ், சிவசேனாவிடம் நாங்கள் நேற்று முறைப்படி ஆதரவு கேட்டிருந்தோம். எங்களுக்கு கவர்னர் 24 மணிநேரம்தான் அவகாசம் கொடுத்திருந்தார். என்.சி.பி.யுடன் ஆலோசனை நடத்திவிட்டு, காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது பட்டேல் குறைந்தது 48 மணிநேர அவகாசமாவது எங்களுக்கு தேவைப்பட்டது. ஆனால்,கவர்னர் எங்களுக்கு போதுமான அவகாசத்தை தரவில்லை. எங்களிடையே கொள்கை வேறுபாடுகள் உள்ளன. ஆகையால், எப்படி இணைந்து செயல்படுவது என்பது குறித்து விவாதித்து முடிவெடுக்க வேண்டியுள்ளது. இரு கட்சிகளுடனும் குறைந்தபட்ச பொதுசெயல் திட்டத்தை முன்வைத்து இணைந்து செயல்படுவோம்’’  என்று கூறியுள்ளார்.

மகாராஷ்டிரா அரசியலில் 30 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு தலைகீழ் அரசியல் கூட்டணி ஏற்பட்டு அரசு அமைப்பதற்கான ரகசிய பேச்சுவர்த்தைகள் தொடங்கியுள்ளதாக தெரிய வருகிறது. தேர்தலுக்கு முன்பு அதாவது மக்களிடம் ஓட்டு கேட்கும்போது எதிர் எதிராக இருந்த கட்சிகள், தேர்தல் முடிவுக்கு பின்பு அதிகாரத்துக்காக அரசு அமைப்பது என்பது மக்களையும், ஜனநாயகத்தையும் கேலி செய்வதாகவே பொருள்படும்.

எம்.டி.ஆர்.ஸ்ரீதர்