மாபெரும் துரோகங்கள்  – ஒட நெபுனாகா

slider உலகம்
oda-nebuneha-ஒடநெபுனாக

 

ஒட நெபுனாகா! இவர் 16ஆம் நூற்றாண்டில் ஜப்பான் நாட்டில் வாழ்ந்த புரட்சியாளர். ஜப்பான் நாட்டின் ஒவாரி பகுதியில் 1534ம் ஆண்டு பிறந்தார். அவருடைய தந்தை ஒட நொபுஹிடி, ஒவாரி பகுதியின் ராணுவ ஆட்சியாளராக இருந்தார். சிறுவயதில் இருந்தே நெபுனாகா ஒரு முரட்டு பிள்ளையாக வளர்ந்தார். எவருடைய கட்டுப்பாட்டிலும் அவர் வர விரும்பவில்லை. எதையும் தன் இஷ்டம் போல செய்தார். மற்ற சகோதரர்களிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டார். ஷாகுனேட் பாரம்பரியத்தை சார்ந்தவர்கள் எவருக்குமே நெபுனாகாவை பிடிக்கவில்லை. நெபுனாகாவை ஒதுக்கி வைத்தனர். ஆனால், ஒட நொபுஹிடி தனது மகனை மிகவும் நேசித்தார். ஹிராட்டி மசாஹிதிட் என்கிற ஹோகுனேட் தலைவரும் நெபுனாகா மீது மிகுந்த அன்பு செலுத்தி வந்தார். இந்த நிலையில் ஜப்பான் பல்வேறு பகுதிகளாக பிரிந்து கிடந்தது. அந்தப் பகுதிகள், ஷாகுனேட் எனப்படுகிற ராணுவ ஆட்சியாளர்கள் ஆண்டு வந்தனர். இவர்களுக்குள் அடிக்கடி சண்டை வருவது உண்டு. இதன் காரணமாக, நெபுனாகாவுக்கும் கட்டாய ராணுவ பயிற்சி அளிக்கப்பட்டது.

போர்க்களம்

 

இந்த சமயத்தில் ஒரு நாள், அவருடைய தந்தை ஒட நொபுஹிடி திடீரென்று இறந்து போனார். இறப்பதற்கு முன்னர் தனது கடைசி ஆசையாக தனது பதவியை தனது மகன் நெபுனாகாவுக்கு கொடுக்க விரும்பினார். அந்த ஆசையை நிறைவேற்ற மசாஹிதிட் உறுதி பூண்டார். ஆனால், மற்ற ஷாகுனெட் உறுப்பினர்கள் இதை கடுமையாக எதிர்த்தனர். ஒரு நாட்டை ஆள்வதற்கு நெபுனாகாவுக்கு எந்த தகுதியும் இல்லை என்று அறிவித்தனர். இந்த விஷயம் நெபுனாகாவுக்கு தெரிந்து போனது. மிகுந்த கோபத்துடன் தனது தந்தையின் இறுதி சடங்கு நடக்கு இருக்கும் இடத்திற்கு வந்தார். அப்போது மசாஹிதிட், நெபுனாகாவை பொறுமையுடன் இருக்குமாறு கூறினார். சில நிமிடங்களிலேயே, அங்கிருந்த மற்ற சாமுராய்கள் அடுத்த ஆட்சியாளர் யார்? என்கிற ரீதியில் பேச்சை ஆரம்பித்தனர். சிலர் நெபுனாகாவுக்கு அந்த தகுதி இல்லை என்று அவர் காதுபட பேச ஆரம்பித்தனர். உடனே நெபுனாகாவுக்கு கோபம் வந்தது. அங்கிருந்தவர்களை தாக்கத் தொடங்கினார். இருதரப்பினரும் மோதிக் கொண்டனர். இறுதி சடங்கு நடக்கும் இடம் போர்க்களமாக காட்சியளித்தது. எல்லா தரப்பில் இருந்து நெபுனாகாவுக்கு எதிர்ப்பு அதிகரித்தது. மசாஹிதிட்டுக்கும் மிகப் பெரிய அவமானமாகிவிட்டது. இதை நினைத்து ஒரு நாள் மசாஹிதிட் தற்கொலை செய்து கொண்டார். இதை நெபுனாகா கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. தன் மீது அன்பும் பாசமும் கொண்ட மசாஹிதிட் இறந்ததை அவரால் நம்பவே முடியவில்லை. இந்த மரணம், நெபுனாகாவின் மனதில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. தீவிர சுய சிந்தனையில் ஈடுபட்டார்.

OdaNobunaga

 

கொஞ்ச நாட்கள் அமைதியாக இருந்தார். அதன் பிறகு ஒவாரி பகுதியின் தலைமை பதவிக்கு உரிமை கோரினார். ஆனால், ஷாகுனேட் சாமுராய்கள் அதை ஏற்கவில்லை. அவர்கள் அனைவரும் நொபுஹிடி மூத்த மகனான நெபுஹூக்கிக்கு தலைவர் பதவியைக் கொடுத்தனர். இதனால் நெபுனாகாவுக்கு மீண்டும் கோபம் வந்தது. ஆனால், இந்த முறை பொறுமையுடன் தீவிரமாக யோசிக்கத் தொடங்கினார். ஒவாரி பகுதியில் இருந்த அதிருப்தியாளர்களை தன் பக்கம் இழுத்துக் கொண்டார். சில நூறு சாமுராய்களை தன் பக்கம் சேர்த்துக் கொண்டார். இப்படி ஒரு சிறுபடையை உருவாக்கினார். சில மாதங்களில் ஒவாரி பகுதியில் நெபுஹூக்கி மீது கடும் போர் தொடுத்தார். ஆனால் அந்த போர் சில நாட்களே நீடித்தது. இறுதியில் அது தோல்வியில் முடிந்தது.

போர்க்களம் – பேட்டில்

அப்போதுதான் பெரிய படை தேவை என்பது அவருக்கு புரிந்தது. உடல் பலத்தோடு திட்டமிடல் மூலமாக மட்டுமே ஆட்சியைப் பிடிக்க முடியும் என்பது அவருக்கு புரியத் தொடங்கியது. இதுதவிர ஒரு ஆட்சியைப் பிடிக்க, வலுவான ஆயுதமும் படைபலமும் தேவை என்பதும் அவருக்கும் புரிந்தது. ஒவாரி பகுதிக்கு அருகே இருக்கும், மற்ற ஷாகுனேட் ஆட்சியாளர்களின் நட்பை வளர்த்துக் கொண்டார்.

சில மாதங்களில் அவருக்கு உதவ மற்ற ஷாகுனேட் ஆட்சியாளர் முடிவுக்கு வந்தனர். ஒரளவுக்கு பெரிய படைகளை நெபுனாகாவுக்கு தந்தனர். அதன் மூலமாக ஒவாரி பகுதிகளில் தனக்கு எதிரியாக விளங்கிய ஷாகுனேட் உறுப்பினர்களை வீழ்த்தினார். இறுதியில் நொபுஹிடியையும் வீழ்த்தினர். இறுதியில் ஓவாரி பகுதி, நெபுனாவின் ஆட்சியாளரானார்.

ஆனால், அந்த சந்தோஷம் வெகுகாலம் நீடிக்கவில்லை. ஒவாரி பகுதியின் மற்றொரு பகுதியில் இருந்த சுருகா பகுதியின் ஆட்சியாளர் யோசிமோட்டோவின் பார்வை பட்டது. ஏற்கனவே, ஒவாரிக்கும் சுருகாவும் எல்லை பிரச்னை இருந்தது. இந்நிலையில் சுருகாவின் ஆட்சியாளர் யோசிமோட்டோ பெரும் படையும் ஒவாரியை கைபற்ற நினைத்தார். சுமார் 40 ஆயிரம் வீரர்களுடன் ஒவாரியை நோக்கி படைத்து வந்தார். நெபுனாகாவின் தளபதிகள் பயந்து போயினர். சிலர், சமாதானம் செய்து கொள்ளலாம் என்று கூறினர். சிலர், அடிமை சாசனம் எழுதி, வருடா வருடம் கப்பம் கட்டி ஒவாரியை தக்க வைத்துக் கொள்ளலாம் என்று யோசனை கூறினர். ஆனால், நெபுனாகாவுக்கு சிந்தனை வேறு விதமான இருந்தது.

பல்வேறு விதமான தந்திரங்களை கையாண்டு பழக்கப்பட்ட நெபுனாகாவுக்கு இது பெரிய சவாலாக இருந்ததாலும் இந்த பெரும் படையை ஜெயித்து, யோசிமோட்டோவை கொல்ல முடியும் என்று நம்பினார். அதிரடியாக நம்பிக்கையான சில உளவாளிகளிடம் சுருகா படையின் நடமாட்டங்களை கவனிக்க அனுப்பினார். சில நாட்களில் அவருக்கு சுருகா படை பற்றிய பல்வேறு விதமான தகவல்களை கொண்டு வந்து சேர்த்தனர். அப்போது சுருகா படையின் எண்ணிக்கை வெறும் 20 ஆயிரம் மட்டும் என்கிற் தகவல் தெரிந்தது. இதுதவிர அது பல்வேறு பிரிவுகளால் பிரிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளில் நிற்க வைக்கப்பட்டுள்ளது என்பதும் தெரிந்தது. இப்போது நெபுனாகாவுக்கு நிச்சயம் சுருகா படையை ஜெயித்து விட முடியும் என்று உறுதியாக தெரிந்து விட்டது. உடனடியாக ஒரு ரகசிய திட்டம் ஒன்றை நெபுனாகா செயல்படுத்தினார்.

சில நூறு படை வீரர்கள் அடங்கிய தொகுதி ஒன்றை ரகசியமாக உருவாக்கினார். அந்த தொகுதிக்கு நெபுனாகாவே தலைமை வகித்தார். அவர்கள் எவர் கண்ணிலும் படாமல், யோசிமோட்டோ தங்கி இருக்கும் படை முகாமுக்கு சென்றனர். முகாமில் யோசிமோட்டோ படை வீரர்கள் கொண்டாட்டத்தில் இருந்தனர். அவர்களது கொண்டாட்டம் இரவு முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

இதனிடையே விடியற்காலையில் மற்றொரு படை ஒன்றை, சுருகா படை தங்கி முகாமிட்டு இருக்கும் பின்பகுதியில் தாக்குதல் நடத்துமாறு ஆணையிட்டார். விடியற்காலையில், சுருகா படை மீது தாக்குதல் நடத்தியது. இதனால், திடீர் தாக்குதல் மூலமாக கொண்டாட்டத்தில் இருந்த யோசிமோட்டோவும் அவரது படைகளும் குழப்பம் அடைந்தனர். இந்நிலையில் யோசிமோட்டோ தங்கி இருக்கும் முகாம்கள் மீது நெபுனாகா தாக்குதல் நடத்தினார். இருப்பினும் யொசிமோட்டோ படை வீரர்கள் சுதாரித்துக் கொண்டு சமாளித்தனர். இரு தரப்பினரிடையே கடுமையான சண்டை நடைபெற்றது.

இறுதியில், யோசிமோட்டோ கொல்லப்பட்டார். தங்களது தலைவர் கொல்லப்பட்ட செய்தி கேட்டு சுருகா படை வீரர்கள் அதிர்ச்சியடைந்தனர். பல ஆயிரம் வீரர்கள் ஓட்டம் பிடித்தனர். சில நூறு வீரர்கள் சரணடைந்தனர்.

இதன் மூலமாக ஒரு மாபெரும் படையை வீழ்த்திய பெருமையை நெபுனாகா அடைந்தார். சுருகா பகுதியை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். இந்த வெற்றியை, ஜப்பான் பகுதியில் இருந்த மற்ற ஷாகுனேட் ஆட்சியளர் அதிர்ச்சியும் ஆச்சரியமும் கலந்து பார்த்தனர். இந்த வெற்றி, நெபுனாகாவின் மனதில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அப்போதுதான் திட்டமிடலும், திறமையும் இருந்தால் உலகத்தை வெல்ல முடியும் என்று அவருக்கு நம்பிக்கை உருவாகியது.

அந்த நிலையில்தான் ஜப்பான் உடைய எல்லா பகுதியையும் கைப்பற்றி ஒரே ஆட்சியின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று நெபுனாகாவுக்கு தோன்றியது. ஆனால், அப்படி ஒரு முயற்சிக்கு மிகப் பெரிய படை தேவைப்படும் என்பதை நெபுனாகா அறியாமல் இல்லை. எனவே, முதலில் சிறுசிறு ஷாகுனேட் பகுதிகளை கைப்பற்றத் தொடங்கினார். நெபுனாகாவின் புத்திசாலித்தனத்துக்கும் தந்திரத்துக்கும் எந்த ஷாகுனேட்டும் ஈடு கொடுக்க முடியவில்லை. வெறும் 10 வருடங்களிலேயே ஜாப்பானின் மூன்றில் ஒரு பகுதியை கைப்பற்றினார்.

இந்நிலையில், ஜப்பானின் சக்திவாய்ந்த ஆசாய் மற்றும் அசகுரா வம்சத்தினரை எதிர்க்க வேண்டிய சூழ்நிலை நெபுனாகாவுக்கு வந்தது. திறமையும் பாரம்பரியமும் கொண்ட அசகுரா வம்சத்தின் படைகளை ஜெயிப்பது என்பது அசாதாரணமான விஷயம். எனவே, மற்றொரு ஷாகுனேட் ஆட்சியாளர்களில் ஒருவரான தோகுவா உடனே சேர்ந்து கொண்டார். இருவரும், ஆசாய் மற்றும் அசகுரா வம்சத்தினரை எதிர்க்கத் தயாரானார்கள். அனேக்வா எனும் இடத்தில் அசாய் படைகளும், நெபுனாகா மற்றும் தோகுவா படைகள் கடுமையாக மோதிக் கொண்டனர். இரு தரப்பிலும் பல்லாயிரக்கணக்கான வீரர்கள் மோதினர். ஆனால் , யவருமே எதிர்பார்க்காத வகையில் ஒரு வித்தியாசமான திட்டம் ஒன்றை நெபுனாகா அரங்கேற்றினார். ஜாப்பானிய வராலாற்றில், போரில் அதிகளவில் துப்பாக்கிகளை பயன்படுத்தினார்.

கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட போர் துப்பாக்கிகள் கொண்ட வீரர்களை போரில் களம் இறக்கினார். பல்லாயிரக்கணக்கான வீரர்கள் ஓரே நாளில் மாண்டனர். இறுதியில் நெபுனாகா படைகளே வெற்றி பெற்றனர். அந்த போரின் மூலமாக அசகுரா வம்சமே அழிந்து போனது. ஜப்பானின் மிக சக்தி வாய்ந்த ராணுவ ஆட்சியாளர் என்கிற பெயரை நெபுனாகா பெற்றார். ஜப்பானில் அவரது பலத்தை எதிர்கொள்ள சில ஷாகுனேட்கள் மட்டுமே இருந்தன. இந்நிலையில். 1582ம் ஆண்டு, பிச்சு பகுதிகளை தானே முன்னின்று கைப்பற்ற முடிவெடுத்தார். ஆயினும் தனது தளபதிகளில் ஒருவரான ஹிடயாசி என்பவரை அப்பகுதிகள் மீது படை எடுத்து செல்லுமாறு ஆணையிட்டார்.

அந்த சமயத்தில் டாகாமாட்சூ கோட்டையில் தங்கி இருந்தார். மோரி என்கிற வம்சத்தினரால் நெபுனாகாவின் உயிருக்கு அச்சுறுத்தல் என்கிற செய்தி பரவியது. ஆனால் அதைப் பற்றி நெபுனாகா கவலைப்படவில்லை. இருப்பினும், தளபதிகள் அவரை பாதுகாப்பான இடத்தில் தங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். சரியென்று அவர்களின் ஆலோசனைகள் ஏற்று ஒவாரி பகுதியில் இருந்த கோவில் ஒன்றில் தங்கினார்.

சில நாட்களில் நெபுனாகா பற்றி எந்த தகவலும் இல்லை. இதனால் ஒவாரி பகுதி மக்களும் எல்லையில் இருந்த தளபதிகளும் அச்சம் அடைந்தனர். இதனிடையே, கோவில் வளாகத்தில் நெபுனாகாவின் உடல் கண்டு எடுக்கப்பட்டது. அவர் சாமுராய் பாரம்பரியத்தின்படி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

அடுத்த சில நாட்களில், நெபுனாகாவின் தளபதிகளில் ஒருவரான அக்சி மிட்சுஹிட் என்பவன் ஒவாரி பகுதிகளுக்கு தலைவனாக அறிவிக்கப்பட்டான். இதை கண்டு தளபதிகள் அதிர்ச்சியடைந்தனர். அப்போது உளவாளிகள் மூலமாக பல்வேறு விதமான தகவல்கள் அவர்களுக்கு தெரியவந்தது. அதாவது, தளபதி அக்சி மிட்சுஹிட், தளபதி ஹிடயாசி மீது கோபம் கொண்டிருந்தான். தளபதி ஹிடயாசி அளவுக்கு அதிகமாக நெபுனாகா முக்கியத்துவம் கொடுப்பது அவனுக்கு பிடிக்கவில்லை. இது குறித்து நெபுனாகாவிடம் அடிக்கடி சண்டை போட்டிருக்கிறான். இருப்பினும், நெபுனாகா, ஹிடயாசியையே பெரிதும் நம்பினார். இதனால், நெபுனாகாவை அழிக்க திட்டமிட்டார். சொந்த ஊரில் நெபுனாகா பாதுகாப்புக்கு குறைந்த வீரர்கள் இருப்பது அவனுக்கு தெரியும். அந்த சமயத்தில் தனது சகாக்களுடன் கோவில் மீது தாக்குதல் நடத்தினார். எல்லா பாதுகாவலர்களும் கொல்லப்பட்டனர். இனிமேல் எப்படியும் தான் நிச்சயம் கொல்லப்படுவோம் என்பதை அறிந்த நெபுனாகா தற்கொலை செய்து கொண்டார். ஆனால் இந்த துரோகத்தை நிகழ்த்திய மிட்சுஹிட் வெகுநாட்கள் நீடிக்கவில்லை. அடுத்த சில நாட்களில் தளபதி ஹிடயாசி உடனான போரில் கொல்லப்பட்டான்.

 

இதில் இருந்து நாம் அறிந்து கொள்ளவது என்னவென்றால், நெபுனாகா போர் தந்திரங்களை தெரிந்து வைத்த அளவுக்கு மனித மனங்களைப் பற்றி தெரிந்து வைத்துக் கொள்ளவில்லை. எப்போதுமே நாம் முன்னேறிக் கொண்டிருக்கும் போது நமது முன்னேற்றத்துக்கு உதவியாக இருக்கின்ற நமது சகாக்களின் எண்ணங்களை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். நெபுனாகா அதை செய்யத் தவறினார்.

கிருஷ்ணா