தி.மு.க., அ.தி.மு.க. ஒழிக்கப்பட வேண்டும் – தமிழருவி மணியன் ஆவேச பேச்சு!

slider அரசியல்
ரஜினி-தமிழுருவி மணியன்

தமிழக அரசியல் களத்தில், காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியனின் அரசியல் கருத்துகளுக்கு என்று தனிச் செல்வாக்கு உண்டு. அவரது சில பேச்சுக்கள் பெரும் விவாதமாக மாறிய பல சம்பவங்களும் நடந்துள்ளன. தற்போது இவர், ”தி.மு.க., அ.தி.மு.க. ஒழிக்கப்பட வேண்டும். அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன்” என்று ஆவேசமாக பேசியுள்ளார். இது தமிழக அரசியலில் பெரும் கொந்தளிப்பாக மாறியுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகவே, இன்னும் சரியாக சொல்லப் போனால், 2017-ம் ஆண்டு இறுதியில் நடிகர் ரஜினி அரசியல் கட்சி துவங்குவேன் என்று அறிவித்ததிலிருந்தே, அவருடன் நெருக்கமான நட்பை பேணி வருகிறார். மேலும், ரஜினி குறித்து நேர்மறையான தகவல்களை பல சந்தர்ப்பங்களில் சொல்லி வருகிறார்.

சில தினங்களுக்கு முன்பு நடிகர் ரஜினி, ‘’தமிழகத்தில் அரசியலில் ஆளுமைக்கான வெற்றிடம் ஏற்பட்டுள்ளது’’ என்று பேசியதிலிருந்து அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. உட்பட பல கட்சிகளிடமிருந்தும் எதிர்ப்புகளை ரஜினி சந்தித்து வருகிறார்.

இப்படியொரு சூழ்நிலை தமிழக அரசியல் களத்தில் நிலவிவரும் நேரத்தில், சமீபத்தில் ஆங்கில நாளிதழுக்கு காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.

அந்தப் பேட்டியில் தமிழருவி மணியன், ”நான் காவிச் சாயத்திற்கு விழ மாட்டேன் என்று ரஜினிகாந்த் கூறியிருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. இதைத்தான் நானும் கடந்த இரண்டரை வருடமாக சொல்லி வருகிறேன். அவர் யாருக்கும் விழ மாட்டார். அவர் தனியாகவே வருவார். தமிழகத்தில் அவர் இடம் பெறும் கூட்டணிக்கு அவர்தான் தலைவர். கூட்டணி தயாரானதும் அவர் களம் புகுவார். ரஜினியின் கூட்டணியில் யாரெல்லாம் இடம்பெறுவார் என்பதை என்னால் சொல்ல முடியாது. அது அரசியல் சூழலைப் பொறுத்தது. ஆனால், அடுத்த ஆண்டு நிச்சயம் அவர் கட்சி தொடங்குவார். சட்டசபைத் தேர்தலை சந்திப்பார் என்று  நான் உறுதியாக நம்புகிறேன். காவி சாயம் குறித்து ரஜினி கூறிய கருத்துக்களுக்கு சிறப்புக் காரணம் எதுவும் எனக்குத் தெரியவில்லை. திருவள்ளுவரை அவமானப்படுத்தியது தொடர்பான கேள்வியை அவரிடம் கேட்டபோது, அதைப் பயன்படுத்தி பொறுத்தமான கருத்தை, சரியான நேரத்தில் அவர் தெரிவித்துள்ளார். முன்பு அவர் பா.ஜ.க.வின் சில நல்லமுடிவுகளை ஆதரித்துள்ளார். வாஸ்தவம்தான்.

ஆனால், தனக்குப் பிடிக்காத விஷயங்களிலிருந்து அவர் விலகியே இருந்துள்ளார். அதையும் மறக்கக் கூடாது. எனக்கு ஒரே ஒரு கனவுதான், இலக்குதான். அது, தமிழகத்தை விட்டு தி.மு.க., அ.தி.மு.க. இரண்டுமே அழிக்கப்பட வேண்டும். இந்த இரு கட்சிகளும் தமிழ்நாட்டையே குட்டிச் சுவராக்கி அழித்து விட்டன. பெருந்தலைவர் காமராஜர் 1967-ம் ஆண்டு தோற்கடிக்கப்பட்ட நாளிலிருந்துதான் எனது அரசியல் வாழ்க்கை தொடங்கியது.  அ.தி.மு.க., தி.மு.க. இந்த இரு திராவிடக் கட்சிகளையும் கடந்த 50 வருடமாக பார்த்து வருகிறேன். இவர்களின் பிடியிலிருந்து தமிழகத்தை மீட்க என்ன வேண்டுமானாலும் செய்ய நான் தயார். எனது கனவை ரஜினி நிறைவேற்றுவார். இதை நான் 100 சதவீதம் நம்புகிறேன். அவர் ஒரு போதும் தி.மு.க., அ.தி.மு.க.வுடன் அணி சேர மாட்டார். கடந்த 30 மாதமாக அவரை நான் தொடர்ந்து சந்தித்து வருகிறேன். அவரை எனக்கு நன்றாகத் தெரியும். அதில் எனக்கு சிறிதும் சந்தேகம் இல்லை’’ என்றார் தமிழருவி மணியன்.

ரஜினி நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்றும், கூட்டணிக்கு அவர்தான் தலைமை வகிப்பார் என்றும், ரஜினிக்கு நெருக்கமான தமிழருவி மணியன் சொல்லியுள்ளார். ரஜினியின்  ‘தமிழகத்தில் அரசியல் ஆளுமைக்கான வெற்றிடம் ஏற்பட்டுள்ளது’ என்ற பேச்சையும், தமிழருவி மணியன் இந்தப் பேட்டியில் கூறியுள்ள செய்திகளையும் பார்த்தால், அடுத்துவரும் 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு ரஜினி தலைமையில் சில அரசியல் கட்சிகள் அணிதிரளும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவே தோன்றுகிறது.

– தொ.ரா.ஸ்ரீ.