ஜெயலலிதாவின் பாணியில் ஆயுதத்தை கையிலெடுத்த ஸ்டாலின்!

slider அரசியல்

தி.மு.க.வின் பொதுக்குழு, அக் கட்சியின் தலைவர் ஸ்டாலின் தலைமையில் நேற்று (10.11.2019) நடைபெற்றது. இந்தப் பொதுக்குழுக் கூட்டத்தில், “நான் சர்வாதிகாரியாக மாறுவேன்” என்று ஸ்டாலின் பேசியுள்ளார். இது தி.மு.க.வினர் மத்தியில் பெரும் அதிர்வலைகளை உண்டாகியுள்ளது.

தி.மு.க .வின் சட்டதிட்டத்தின்படி எந்தவொரு திருத்தமும் அந்தக் கட்சியின் பொதுக்குழுவில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டால்தான், அது கட்சியின் விதியாக கொள்ளப்படும். ஆகவே, தி.மு.க.வின் பொதுக்குழு முடிவையும், அதன் தீர்மானங்களையும் தி.மு.க.விலுள்ள நிர்வாகிகள் முதல் தொண்டன் வரை மிகவும் முக்கியமாகக் கருதுவர்.

முன்பே அறிவித்திருந்தபடி நவம்பர் 10-ம் தேதியான நேற்று, சென்னையில் தி.மு.க.வின் பொதுக்குழு கூடியது. இதில் தி.மு.க.வின் மாவட்ட செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், சில எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.  உள்ளாட்சி தேர்தல் உட்பட  பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து இதில் கலந்து ஆலோசிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னையில் நடைபெற்ற இந்தப் பொதுக்குழுவில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பேசும்போது, ‘’கட்சியின் வளர்ச்சிக்காக சர்வாதிகாரியாக மாறுவேன். தனிப்பட்டு எனக்காக அல்ல, கட்சி வளர்ச்சிக்காக. தங்களை திருத்தி கொள்ளாத தி.மு.க. நிர்வாகிகள், திருத்தப்படுவார்கள். தேர்தல் நேரத்தில் மட்டும் நாம் கடுமையாக உழைக்கிறோம். தேர்தல் நேரத்தில் மட்டும் உழைத்தால் போதாது. நிர்வாகிகள் எப்போதும் உழைப்பதற்கு தயாராக இருக்க வேண்டும். என்னுடைய சக்தியையும் தாண்டி நான் உழைத்து வருகிறேன்.   வெற்றி சாதாரணமாக கிடைக்காது, கிடைக்கவும் விடமாட்டார்கள். யாரும் நம்மை கட்டுப்படுத்த முடியாது என்று தி.மு.க. நிர்வாகிகள் கருத கூடாது. விமர்சனங்களை சம்மந்தப்பட்ட நிர்வாகிகள் கேட்டு திருத்திக் கொள்ள வேண்டும். சிலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முழுமையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதனால்தான் பாராளுமன்றத் தேர்தலில் நாம் வெற்றிபெற்றோம். அது மீண்டும் நடக்கும்.  நான் சர்வாதிகாரியாக மாறுவேன் என்று பேச்சுக்காக சொல்லவில்லை. ஒருநாள் கண்டிப்பாக இது நடக்கும். கட்சியின் பல நிர்வாகிகளை அழைத்து பேசிய பின்தான் இப்படி முடிவு செய்துள்ளேன்’’ என்று  பேசியுள்ளார்.

கிட்டதட்ட தனது 60 ஆண்டுக்கும் மேலான தி.மு.க.வின் அரசியல் வாழ்க்கையில் மறைந்த தி.மு.க. தலைவர் கலைஞர் எந்தவொரு பொதுக் குழுவிலும், எந்தவொரு நிகழ்ச்சியிலும் கட்சியினர் மத்தியில் ‘’நான் சர்வாதிகாரியாக மாறுவேன்’’ என்று பேசியதில்லை. இப்போது அவரது மகனும், தி.மு.க.வின் தலைவருமான ஸ்டாலின் இதுபோல பேசியுள்ளார். இப்படியான அரசியல் நடைமுறை மறைந்த ஜெயலலிதா காலத்தில் அ.தி.மு.க.வில் நிலவியது. இதை பிரதிபலிக்கும் வகையில் ஸ்டாலினின் இந்தப் பேச்சு அமைந்திருப்பதால், ஒருவேளை கட்சி விஷயத்தில் ஜெயலலிதா வழி ஆயுதத்தை ஸ்டாலின் கையிலெடுக்கப் போகிறாரோ என்கிற பேச்சு வெகு தீவிரமாக தமிழக அரசியலில் விவாதமாகி வருகிறது.

எம்.டி.ஆர்.ஸ்ரீதர்