சிட்டுக் குருவிகள் காட்டுக்கு சென்றுவிட்டன – முகம்மது அலி

கட்டுரைகள்

இயற்கை பற்றியும், காட்டுயிரினங்கள் பற்றியும் நமக்கு பல்வேறு நம்பிக்கைகள் உண்டு. ஆனால், சுற்றுச்சூழல் ஆர்வலரான ச. முகமது அலியிடம் இது தொடர்பாக சில நிமிடங்கள் பேசினாலே பல தகவல்கள் நம்மை வரிசையாக ஆச்சரியப்படுத்தும். சாம்பிளுக்கு ஒரு விஷயம், சிட்டுக் குருவிகளை செல்போன் கோபுரங்கள் அழித்துவிட்டன என்று பலரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், ‘சிட்டுக்குருவிகளுக்கு இன்றைய நம் வாழ்வில் வாழ இடம் இல்லை. அதனால், காடுகளுக்கே சென்றுவிட்டது இது தவறான செய்தி’ என்று மறுக்கிறார்.

அறிவியலைப் பகுத்தறிவுப் பார்வையோடு பார்க்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வரும் முகமது அலி, இது தொடர்பாக நிறைய புத்தகங்களையும் எழுதியிருக்கிறார். பொதுக்கூட்டங்களில் பேசியும் வருகிறார். கடந்த 45 ஆண்டுகளாக இயற்கை சார்ந்து இயங்கி வரும் ச.முகமது அலி, தன்னைப் பற்றியும், இயற்கை பற்றியும், காட்டுயிரினங்கள் பற்றியும் சூரியகதிருக்காக இங்கே பகிர்ந்துகொள்கிறார்.

“நான் எம்.ஏ., தமிழ் இலக்கியம் படித்தவன். உங்களுக்கு எப்படி சுற்றுச்சூழல் மீதும், வனவிலங்குகள் மீதும் ஆர்வம் வந்தது என்றுதான் பலரும் கேட்கிறார்கள். என்னுடைய தந்தைக்கு வனவிலங்குகள்மீது ஆர்வம் உண்டு. அதனால், எனக்கும் அந்த குணம் இயல்பாகவே வந்திருக்கலாம். நான் குடியிருக்கும் மேட்டுப்பாளையம் மூன்று பக்கங்களிலும் இயற்கை எழில் சூழ்ந்த பகுதி என்பதால் இயற்கை மீதும் ஆர்வம் இயல்பாகவே வந்துவிட்டது. கடந்த 45 ஆண்டுகளாக இந்தத் துறையில் இயங்கிக் கொண்டிருக்கிறேன். ஆரம்பத்தில் ‘அன்பர்கள் கழகம்’ என்ற பெயரில் 35 வருடங்களாக இயங்கி வந்தேன். என்னுடைய சிந்தனையையும், செயலையும் ஒத்த ‘இயற்கை வரலாறு அறக்கட்டளை’யுடன் இப்போது இணைந்து பணிபுரிந்து வருகிறேன். இந்த அறக்கட்டளை மேட்டுப்பாளையத்தில் இயங்கி வருகிறது. இயற்கை வரலாறு அறக்கட்டளையின் தலைமை அலுவலகம் பொள்ளாச்சியில் இயங்கி வருகிறது.

1981ம் ஆண்டிலிருந்து ‘காட்டுயிர்’ என்ற இதழை நடத்தி வந்தேன். எப்போதெல்லாம் பணம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் இதழ் வெளிவந்துகொண்டிருந்தது. ‘இயற்கை வரலாறு அறக்கட்டளை’யில் பணிபுரிய ஆரம்பித்த பிறகு, அறக்கட்டளையே இதழின் தரத்தைப் பார்த்து வெளியிட முன்வந்தது. கடந்த 15 வருடங்களாக அறக்கட்டளை வாயிலாகத்தான் இதழ் வெளி வந்துகொண்டிருக்கிறது. காடுகள், காட்டு உயிரிகள் பற்றி நிறைய இதழ்கள் வந்துகொண்டிருக்கின்றன. ஆனால், இயற்கையையும், விலங்குகளையும், பறவைகளையும் அறிவியல்பூர்வமாக அணுக வேண்டும் என்பதற்காகத்தான் இந்த இதழையே நான் தொடங்கினேன். என்னுடைய முயற்சி வெற்றி பெற்றிருப்பதாகவே உணர்கிறேன்.

ஆதாயம் சார்ந்து ஓடிக் கொண்டிருக்கும் இன்றைய வியாபார உலகில் இயற்கை, விலங்குகள், சொற்பொழிவுகள், எழுத்துகள் என்று நான் பயணப்பட்டுக் கொண்டிருக்கும் பாதை ஆபத்தானதுதான். மனதுக்குப் பிடித்த ஒரு ஆத்மார்த்தமான வேலைகளைச் செய்துகொண்டிருக்கிறேன் என்ற திருப்தி மட்டுமே இருக்கிறது. லட்சியத்தை நோக்கிய பாதையில் பணம் என்ற விஷயத்தை எதிர்பார்க்கக் கூடாது என்பதுதான் என்னுடைய கொள்கை. வாழ்க்கை நடத்துவதற்குத் தேவையான பொருளாதார உதவிகளை நான் பணிபுரியும் அறக்கட்டளை வாயிலாக மதிப்பூதியமாகப் பெற்றுக் கொண்டிருக்கிறேன். நிகழ்ச்சிகளுக்கு அழைக்கும் தோழர்களும் எனக்குப் போதுமான ஊதியத்தை அளிக்கிறார்கள். இதுதவிர, சமூக நலன் சார்ந்த புத்தகங்களின் விற்பனையாளராகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். இந்த நிம்மதி போதும்!

இயற்கை பற்றியும், காட்டுயிரினங்கள் பற்றியும் மனிதர்களுக்கு இருக்கும் போதுமான புரிதல் இல்லை. குறிப்பாகப் பாம்புகள் பற்றி நம்மிடையே இருக்கும் ஏராளமான மூட நம்பிக்கைகளை இதற்கு நல்ல உதாரணமாகச் சொல்லலாம். பாம்புக் கடியினால் உயிர் இழக்கும் மனிதர்களின் எண்ணிக்கை அதிகம். மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே ‘பாம்பு என்றால்’ புத்தகத்தை எழுதினேன். நம் நாட்டில் 270 வகை பாம்புகள் இருக்கின்றன. ஆனால், மூன்று வகை பாம்புகள் மட்டுமே விஷத்தன்மை வாய்ந்தவை. ஆனால், பாம்பை எங்காவது பார்த்தால் உடனடியாக அதற்கு மரண தண்டனைதான் கொடுக்கிறோம். பாம்புகள் உடனடியாக கடிப்பதில்லை. தங்களைத் தற்காத்துக் கொள்ளத்தான் கடிக்கின்றன.

 

மேலும், கரடி, யானைகள் ஊருக்குள் வந்துவிடுகிறது என்று சமீபத்தில் மக்கள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். யானைகளின் குடியிருப்பான காடுகளை அழித்து, அதன் இருப்பிடத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். யானைகள் தங்கள் இருப்பிடத்தில்தான் இருக்கின்றன. மனிதர்கள் யானைகளின் வாழ்விடத்தை ஆக்கிரமித்துக் கொண்டு, யானைகள் தொந்தரவு தருகிறது என்று புலம்புவதைப் போலத்தான் இதுவும். விலங்குகளும், இயற்கையும் இந்து மதத்தில் பின்னிப் பிணைந்திருக்கிறது. பகுத்தறிவுப் பார்வை பார்க்க வேண்டும் என்று நான் ஒரு விஷயத்தைச் சொன்னால் என்னை விரோதியாகவே பார்க்கிறார்கள்.

அமெரிக்காவில் வாழும் தமிழ் விஞ்ஞானியான வெங்கட்ராமன் தனது மேடைப் பேச்சு ஒன்றில், ‘நான் மட்டும் இந்தியாவிலேயே இருந்திருந்தால் என்னால் நோபல் பரிசு வாங்கியிருக்க முடியாது’ என்று பகிரங்கமாகச் சொன்னார். இதுதான் இந்தியா! இயற்கை, விலங்குகள் பற்றி நமக்கு போதுமான அறிவியல் பார்வை இல்லை. ‘மரம் இல்லையென்றால் மழை வராது’ என்கிற ஒரு விஷயத்தைத்தான் நாம் அறிவியல் ரீதியாக அதிகபட்சமாக தெரிந்து வைத்திருக்கிறோம். நமக்கு சமயம் சார்ந்த சிந்தனைகள் இருக்கிற அளவுக்கு அறிவியல் சார்ந்த சிந்தனைகள் இல்லை என்பதைத்தான் நான் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். அரசாங்க விஷயத்திலேயே கவனியுங்கள். அறிவியல் சார்ந்த துறைகள் மத்திய, மாநில அரசுகளிடம் இருக்காது. வனத்துறை என்பதைக்கூட  அமைச்சரவையில் கடைசியாகத்தான் வைத்திருக்கிறார்கள். உடனடி வருமானம் வருகிற துறையில்தான் அரசாங்கம் கூட கவனம் செலுத்துகிறது. காடுகள் என்பது ஒரு நாட்டின் நுரையீரல் என்பதை வசதியாக மறந்துவிடுகிறார்கள். இந்த நிலை மாற வேண்டும்.

‘பறவையிலறிஞர் சாலிம் அலி’, ‘யானைகள் : அழியும் பேருயிர்’, ‘இயற்கை செய்திகள்’,  ‘சிந்தனைகள்’, ‘பாம்பு என்றால்’, ‘வட்டமிடும் கழுகு’, ‘பல்லுயிரியம்’, ‘அதோ அந்தப் பறவை போல’ போன்ற புத்தகங்களை எழுதியிருக்கிறேன். தமிழின் முன்னணி நாளிதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்களிலும் என்னுடைய கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன. சிட்டுக்குருவிகள் பற்றி இருக்கும் தவறான வதந்திகள் தொடர்பாக ‘நெருப்புக்குழியில் குருவி’ என்ற நூலில் எழுதியிருக்கிறேன். சில சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தங்களது அறியாமையால் சிட்டுக்குருவிகளை செல்போன் கோபுரங்கள் அழித்துவிட்டன என்று செய்தியைப் பரப்பிவிட்டார்கள். இது உண்மையல்ல. ஏறக்குறைய 100 ஆண்டுகளில்தான் மனிதர்களுக்கு நெருக்கமாக சிட்டுக்குருவிகள் வாழ்ந்திருக்கின்றன. நம்முடைய வாழ்க்கை மாற்றத்தால், சிட்டுக்குருவிகள் மீண்டும் காடுகளுக்கே சென்று விட்டன என்பதுதான் உண்மை. செல்போன் கோபுரங்களால்தான் சிட்டுக்குருவிகள் அழிந்துபோனது என்று சொல்வார்கள். செல்போன் கோபுரங்களிலேயே குருவிகள் கூடு கட்டி இருக்கின்றனவே எப்படி? முன்பு நம்முடைய வீடுகள் கூரை வீடுகளாக, ஓட்டு வீடுகளாக இருந்தன. அதனால், குருவிகள் வீட்டில் கூடு கட்டிக் குடியிருக்க முடிந்தது. இப்போது, கூடு கட்ட முடியாத அளவுக்கு எல்லாமே கான்க்ரீட் வீடுகளாகிவிட்டன. முன்பு உணவுப் பொருட்களை சுத்தம் செய்யும்போது வாசலில் தானியங்கள் இறைந்துகிடக்கும். அந்த தானியங்களைக் கொத்தித் தின்பதற்காக நம் வாசலில் குருவிகள் இருப்பதைப் பார்த்திருப்போம். ஆனால், இப்போது நமக்குக் கிடைக்கும் உணவுப் பொருட்கள், சுத்தமாக்கப்பட்டு பாக்கெட்டுகளில்தான் வருகிறது. அதனால், சிட்டுக்குருவிகளுக்கு உணவுகளும் இல்லை. இதுதான் உண்மை!’’ என்கிறார் முகம்மது அலி.