ரஜினி, கமலை எதிர்க்கும் தி.மு.க,. அ.தி.மு.க    

slider அரசியல்

 

pazhanisamy -முதல்வர் பழனிச்சாமி

கமல்ஹாசன் தனது ராஜ்கமல் அலுவலகத்தில், முன்னாள் இயக்குநரும் தனது குருவுமான கே.பாலசந்தருக்கு சிலையமைத்தார். இதனை ரஜினியுடன் சேர்ந்து திறந்தும் வைத்தார். இதற்கான விழா நேற்று (8.11.2019) நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி “தமிழகத்தில் அரசியல் வெற்றிடம்” என்று சொன்னார். இதற்கு தி.மு.க. தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியது. அதி.மு.க. தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக, தமிழக முதல்வரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தற்போது ரஜினியையும், கமலையும் குறிக்கும் முகமாக “அரசியலில் வென்றுவிடலாம் என்று சிலர் கனவு கண்கின்றனர்” என்று பேசியுள்ள பேச்சு, தமிழக அரசியலில் பெரும் பரபரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உதயநிதி ஸ்டாலின்

சமீபத்தில் நடைபெற்ற விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத் தேர்தல்களில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்றது. இதில்    விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட முத்தமிழ்செல்வன் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாகவும் ஆகிவிட்டார்.  இவரது தொகுதியான விக்கிரவாண்டியில், வெற்றி பெறவைத்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நேற்று (8.11.2019) நடைபெற்றது.

இந்த நன்றி அறிவிப்பு பொதுக் கூட்டத்தில் தமிழக முதல்வரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும்போது, ‘’கட்சியை துவக்கியவுடனே வெற்றி பெற முடியாது. 68 ஆண்டுகாலம் வேறு துறையில் இருந்துவிட்டு, திடீரென கட்சி ஆரம்பித்து அரசியலில் வென்றுவிடலாம் என சிலர் கனவு காண்கின்றனர். திடீர் பிரவேசம் செய்து ஆட்சியை பிடிக்க முடியாது. மக்களும் அப்படிப்பட்டவர்கள் அல்ல. யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். ஆட்சியைப் பிடிக்க  நினைக்கலாம். அதேநேரத்தில் அ.தி.மு.க.தான் ஆட்சிக்கு வரும்.

திரைப்படத்துறையில் இருந்த எம்.ஜி.ஆர். எம்.எல்.ஏ.வாக இருந்து பல ஆண்டு காலம்  மக்களுக்காக பணியாற்றினார்.  இவர், மக்களுக்கு நன்மை செய்யவும், அண்ணாவின் கனவை நனவாக்கவும் அ.தி.மு.க.வை உருவாக்கினார். எம்.ஜி.ஆரை தவிர  திரைத்துறையில் இருந்து திடீரென அரசியலில் நுழைந்து  ஆட்சியைப் பிடிக்க முடியாது. அவரைப் பின்பற்றி வந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசாக மக்களுக்கு ஏராளமான திட்டங்களைக் கொண்டு வந்தார். சிலரைப் போல வீட்டில் இருந்து பேட்டிகொடுத்து அரசியல் செய்தவர் அல்ல. களத்துக்கு நேரடியாக வந்து மக்களைச் சந்தித்து, அதற்காக உழைத்து, தனது உழைப்பால்  அ.தி.மு.க.வை உயர்த்தினார். எத்தனையோ பேர் இப்படி சொல்லிக்கொண்டு பின்னர் காணாமல் போய்விட்டனர். எங்களுடைய கூட்டணி பலமானது.  இந்த வெற்றியை போல 2021-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். எங்கள் கூட்டணி எப்போதும் வெற்றி பெறும். அ.தி.மு.க.வில் மிகப்பெரிய வெற்றிடம் உள்ளதாக  சிலர் கூறி வருகின்றனர். இந்த இடம் இப்போது எங்கே இருக்கிறது’’ என்று அதிரடியாக பேசினார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இதற்கு முன்பு நடிகர் கமல்ஹாசன் மற்றும் ரஜினியின் அரசியல் பிரவேசங்களை இப்படி தாக்கி பேசியது கிடையாது. இதுதான் முதல் தடவை. ரஜினி, கமலின் அரசியல் நுழைவுகளை தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் ஒரே அலைவரிசையில் தான் எதிர்க்கத் தொடங்கியிருக்கின்றன என்பது சமீபமாக நன்கு வெளிச்சமாகி வருகிறது.

  • தொ.ரா.ஸ்ரீ.