இந்தியாவுக்கு நேபாளம் கடும் எதிர்ப்பு!

slider உலகம்
india new map

 

இந்தியாவின் புதிய மாநிலமாகவும், யூனியன் பிரதேசமாகவும் ஜம்மு மற்றும் லடாக் பகுதிகளை சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தது மத்திய அரசு. இவற்றை இந்திய வரைபடத்தில் சேர்த்து புதிய வரைபடமும் (மேப்) சமீபத்தில் மத்திய அரசால் வெளியிடப்பட்டது. ஏற்கெனவே ஜம்மு- காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை அண்டை நாடான பாகிஸ்தான் புகார் கூறிக் கொண்டிருக்கும் நிலையில், இப்போது வெளியிடப்பட்ட வரைபடத்தால் நேபாளமும் இந்தியா மீது புகார் தெரிவிக்கத் தொடங்கியுள்ளது.

கடந்த அக்டோபர் 31-ம் தேதி மத்திய அரசு இந்த புதிய வரைபடத்தை வெளியிட்டது. இந்த புதிய வரைப்படத்துக்கு நேபாளம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த புதிய வரைப்படத்தில், உத்தராகண்ட் மற்றும் நேபாளத்துக்கு இடையே உள்ள காலாபானி மற்றும் லிபூ பகுதிகள் இந்தியாவுக்குள் அடங்கியதாக அமைந்துள்ளது.

இது தொடர்பாக நேபாளத்தின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், “காலாபானி பகுதி எங்கள் பிரதேசத்திற்குள் வரும் என்பதில் நேபாள அரசு மிகத் தெளிவாக இருக்கிறது. மேலும், கிழக்கு இந்திய கம்பெனியுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, காலாபானி, லிபூ பகுதிகள் எங்களுக்கு சொந்தம்” என்று கூறப்பட்டுள்ளது.

நேபாளத்தின் இந்த அறிக்கைக்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார்,  “புதிய வரைபடத்தில் நேபாளத்துடனான இந்திய எல்லையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. நேபளத்துடனான எல்லை நிர்ணயம் என்பது இன்னும் வகுக்கப்படும் பொறிமுறையில் இருக்கிறது. இரு நாடுகளுக்கு இடையே உள்ள நட்புணர்வை அடிப்படையாகக் கொண்டு, பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு எட்டப்படும்’’ என்று கூறியுள்ளார்.

இது குறித்து இந்திய சர்வேயர் ஜெனரலான லெப்டினன்ட் ஜெனரல் கிரீஷ் குமார் கூறுகையில், ’’எந்த எல்லைப் பகுதியும் ஒரு மில்லிமீட்டர் அளவிற்குக்கூட மாற்றம் செய்யப்படவில்லை. ஜம்மு- காஷ்மீர், லடாக்கைத் தவிர, வரைபடத்தின் எந்த பகுதியிலும், வேறு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. நாங்கள் தன்னிச்சையாக எதுவும் செய்யவில்லை. நாங்கள் ஒவ்வோர் ஆண்டும் வரைபடம் வெளியிடுவோம். 2018 அல்லது அதற்குமுன் இருந்த வரைபடத்திலும் காலாபானி, இந்தியாவிற்குள்தான் இருக்கிறது” என்று சொல்லியுள்ளார்.

  • எம்.டி.ஆர்.ஸ்ரீதர்