அயோத்தியில் ராமர் கோவில் கட்டலாம் – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

slider அரசியல்

 

அயோத்தியா-ayothiyah

கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக அயோத்தியிலுள்ள ராமர் பிறந்த இடம் மற்றும் பாபர் மசூதி சர்ச்சைக்குரிய நில விவகாரத்தில் கடந்த 2010 செப்டம்பர் 30-ம் தேதி அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாடா, ராம் லல்லா ஆகிய 3 அமைப்புகளும் சரிசமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று அலகாபாத் நீதிமன்றம் தன் தீர்ப்பில் கூறியிருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில்தான் இப்போது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்திருக்கிறது.

இந்த வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மற்றும் நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.அப்துல் நசீர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி முதல்  தொடங்கி நாற்பது நாட்கள் நடைபெற்ற விசாரணையில் இருதரப்பு வாதங்கள் கடந்த அக்டோபர் 16-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்த அமர்வின் தலைவரும், தலைமை நீதிபதியுமான ரஞ்சன் கோகாய் வரும் 17-ம் தேதி ஓய்வு பெறவுள்ளதால், அதற்குள் தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி இன்று (9.11.2019) வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பின்  முக்கிய அம்சங்கள் பற்றி கொஞ்சம் பார்ப்போம்.

’’அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம். அந்த இடத்தில் ராமர் கோயில் கட்ட மத்திய அரசு ஓர் அமைப்பை உருவாக்க வேண்டும். இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கர் நிலத்தை வழங்க மத்திய அரசும், உத்தரப் பிரதேச அரசும் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். 3 மாதத்தில் இந்த இடம் வழங்கப்பட வேண்டும்.  இஸ்லாமியர்கள் புதிய மசூதி கட்டிக்கொள்ள வக்போர்டு ஏற்கும் இடத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்கப்பட வேண்டும்.  தீர்ப்பை 3 மாதத்தில் செயல்படுத்த வேண்டும்.  சர்ச்சைக்குரிய நிலத்தை 3 தரப்புக்கும் பிரித்து வழங்கி அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சரியானதல்ல.  பாபர் மசூதி இருந்த இடம் முழுக்க முழுக்க தங்களுக்குச் சொந்தமான பகுதி என்பதை இஸ்லாமிய அமைப்புகள் நிரூபிக்கவில்லை.  அரசியலுக்கு அப்பாற்பட்டு சட்டம் நிலைநாட்டப்பட வேண்டும்.  நிலத்தின் உரிமையை நம்பிக்கை அடிப்படையில் முடிவு செய்ய முடியாது.  1857-ம் ஆண்டுக்கு முன்பு வரை அந்த சர்ச்சைக்குரிய இடத்தின் உள்பகுதியில் இந்துக்கள் வழிபடத் தடை இல்லை.    ஒருவரின் நம்பிக்கை மற்றவரின் நம்பிக்கையைச் சீர்குலைக்கக் கூடாது.  தொல்லியல் துறை அறிக்கையை நிராகரிக்க முடியாது.  நிர்மோகி அகாராவின் வாதம் ஏற்புடையதாக இல்லை. காலியிடத்தில் மசூதி கட்டப்படவில்லை.  அயோத்தி ராமர் பிறந்த இடம் என்பது இந்துக்களின் நம்பிக்கை.  அந்த இடம் பாபர் மசூதி என்பது இஸ்லாமியர்களின் வாதம்.  பாபர் மசூதி கட்டப்படும் முன்பு அங்கிருந்த இடம் இஸ்லாமிய கட்டுமானம் அல்ல.  ஆவணங்களின்படி அந்த நிலம் அரசுக்கு சொந்தமானது.  நடுநிலையைக் காக்கும் பொறுப்பு நீதிமன்றத்துக்கு உள்ளது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம். அதற்கான அமைப்பை மூன்று மாதங்களுக்குள் மத்திய அரசு உருவாக்க வேண்டும். அதற்கு பதில் இஸ்லாமியர்கள் விரும்பும் இடத்தில் ஐந்து ஏக்கர் நிலத்தை மத்திய அரசும், உத்தர பிரதேச அரசும் வழங்க வேண்டும்’’ என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெளிவுபட கூறியுள்ளனர்.

இந்தியாவில் ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கு மேலாக, இன்னும் சரியாக சொன்னால் 1992-ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டதிலிருந்து தொடங்கி இப்போதுவரை பலமுறை மதக் கலவரங்கள் ஏற்பட இந்த விவகாரம் வழிவகுத்திருக்கிறது. பல்வேறு மதங்கள் ஒன்றாக வாழும் இந்தியாவில் மத சகிப்பு தன்மை என்பது முக்கியமான ஒன்று. இதற்கு பங்கம் விளைவிக்கும் அயோத்தி ராமர் கோவில் – பாபர் மசூதி விவகாரத்தில், தற்போது உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள இந்த தீர்ப்பு இந்து – முஸ்லீம் என்கிற இருதரப்புக்கும் மன கசப்பு ஏற்படாத வகையில் வழங்கப்பட்டிருக்கிறது. அடுத்த தலைமுறை இந்து – முஸ்லீம் மக்களிடையே பூசலுக்கு வழி வகுக்காதபடி இந்த சர்ச்சைக்கு முற்றுபுள்ளி வைக்கப்பட்டதை சமூக ஆர்வலர்கள் பாராட்டவே செய்வர்.

  • நிமலன்