நடிகர் சங்கத்துக்கு தனி அதிகாரி கூடாது – விஷால் வழக்கு!

slider சினிமா
vishal-விஷால்

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் ஜூன் – 23-ம் தேதி நடைபெற்றது. இதில் விஷால் தலைமையிலான ஓர் அணியும், பாக்யராஜ் தலைமையிலான அணியும் கடும் போட்டியிட்டன. இந்த தேர்தலின் முடிவை வெளியிடாமல் சென்னை நீதிமன்றம் ஒரு உத்தரவின் மூலம் நிறுத்தி வைத்துள்ளது.

இந்நிலையில், தமிழக அரசு திடீரென்று நடிகர் சங்கத்துக்கு ஏற்கெனவே தயாரிப்பாளர் சங்கத்துக்கு இருப்பது போன்று தனி அதிகாரியை நியமித்துள்ளது. பத்திர பதிவுத் துறையைச் சேர்ந்த உதவி அந்தஸ்திலுள்ள ஐ.ஜி.கீதா நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக அரசு இப்படி தனி அதிகாரி நியமித்துள்ளதை முன்னாள் நடிகர் சங்க பொதுச் செயலாளரும், முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தேர்தலில் அதே பதவிக்கு போட்டியிட்டவருமான நடிகர் விஷால் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், வழக்கும் சென்னை நீதிமன்றத்தில் தொடுத்தார். நீதிமன்றத்தில் இந்த வழக்கை அவசர வழக்காக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று விஷால் தரப்பில் மனுவும் அளிக்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த நீதிபதி ஆதிகேசவலு, “ஏற்கனவே தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் வழக்கை சென்னை ஐகோர்ட்டு நீதிபதி கல்யாணசுந்தரம் விசாரித்து வருகிறார். எனவே, நடிகர் சங்கத் துக்கு தனி அதிகாரி நியமனம் தொடர்பாக அவரிடம் தான் முறையிட வேண்டும” என்று கூறியவர்  பின்னர் இந்த வழக்கை நீதிபதி கல்யாணசுந்தரம் முன்பு விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என்று பொறுப்பு தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்தும் உத்தரவிட்டார்.

தமிழக அரசு திடீரென்று நடிகர் சங்கத்துக்கு தனி அதிகாரி நியமிக்கப்பட்ட விவகாரத்தில், விஷால் அணிக்கு எதிராக போட்டியிட்ட பாக்யராஜ் அணியில் பொதுச் செயலாளர் பதவியில் நின்ற வேல்ஸ் பல்கலைக் கழக வேந்தர் ஐசரி கணேஷின் உள்ளடி வேலைகள் இருக்கலாம் என்றும், ஆளும் அ.தி.மு.க. அரசுக்கும், அதன் இரட்டை தலைமைக்கும் மிகவும் நெருக்கமாக ஐசரி கணேஷ் இருந்துவருவதும் கவனிக்கத்தக்கது என்கிற பேச்சும் நடிகர்கள் வட்டாரத்தில் கிளம்பியுள்ளது.

  • விசாகன்