தி.மு.க. தலைவர் ஸ்டாலின் – அமைச்சர் மாஃபா பண்டியராஜன் மோதல் முற்றுகிறதா?

slider அரசியல்
மாஃபா பாண்டியராஜன்-மு.க.ஸ்டாலின்

கடந்த சில தினங்களுக்கு முன்னர், “தி.மு.க. தலைவர் ஸ்டாலின்  எமர்ஜென்சியின்போது கைது செய்யப்பட்டது அரசியல் காரணங்களுக்காக அல்ல” என்றும் தனிப்பட்ட வகையில் என்றும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஒரு பேட்டி கொடுத்தார். அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் பேச்சுக்கு தி.மு.க. சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டதோடு, அமைச்சர் வீட்டின் முன்பு எதிர்ப்பு போராட்டங்களும் நடைபெற்றன. இந்த விவகாரம் இப்போதும் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

கடந்த 1975–ம் ஆண்டு நெருக்கடி நிலையின்போது, ஸ்டாலின் கைது செய்யப்பட்டது, அவரது தவறான செய்கைகளுக்காகத் தான் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சில தினங்களுக்கு கூறியிருந்தார். அமைச்சரின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. தரப்பில் தமிழகம் முழுவதும் கண்டன போராட்டங்கள் நடத்தப்பட்டன. மேலும்,  அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வீட்டின் முன்னால் போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினர் மாஃபா உருவ பொம்மைக்கு பாடை கட்டி எரித்து எதிர்ப்பை காட்டினர்.

இது குறித்து தனது ட்விட்டரில் பதிவிட்ட அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ’’அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே!’’ என பதிவிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அமைச்சர் தி.மு.க.வினருக்கு, “பாண்டியராஜனுக்கு எதிரான போராட்டத்தை தவிர்த்திடுங்கள். அமைச்சர் பாண்டியராஜன் என்ன படித்தார், எதைக் கற்றார், எதை புரிந்து கொண்டார் என்பதை அவர் பேச்சு காட்டிவிட்டது. நாம் பயனுள்ள சொற்களையே பயன்படுத்துவோம்.  இழி சொற்களை ஏற்க மாட்டோம்’’ என்று அறிக்கை மூலம் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த விவகாரம் இத்தோடு முடிந்துவிடும் என்றே பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தற்போது மீண்டும் ஒரு சவால் ஸ்டாலினுக்கு விட்டுள்ளார். அந்த சவால் என்னவென்றால், “தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டது பற்றி, தனக்கு எழுந்த சந்தேகத்தையே கேட்டேன். மிசா சட்டத்தின் கீழ் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டிருந்தால், அதற்கான ஆவணங்களை அவரே வெளியிட்டிருக்கலாமே? இன்னும் இரண்டு நாட்கள் கழித்து இது குறித்து விரிவான பதிலடியை தருகிறேன்’’ என்று கூறியுள்ளார்.

அமைச்சரின் இந்த சவாலால், இந்த விவகாரம் முடிந்துவிடவில்லை என்பதையும், இன்னும் தொடரும் என்பதையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. மேலும், தி.மு.க. தரப்பில் இந்த விவகாரம் பொருட்டு மேற்கொண்டு என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என்கிற சஸ்பென்ஸையும் தந்திருக்கிறது.

 

தொ.ரா.ஸ்ரீ.