காங்கிரஸின் தேர்தல் செலவு – அதிர்ச்சியில் அரசியல் கட்சிகள்!

slider அரசியல்

 

சோனியாகாந்தி-ராகுல்காந்தி-soniyagandhi-rahulgandhi

கடந்த 2014 –ம் ஆண்டு பா.ஜ.க.விடம் ஆட்சியை இழந்தது காங்கிரஸ். இப்போது சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற பாராளுமன்றத் பொதுத் தேர்தலில் மீண்டும் பா.ஜ.க.விடம் தோற்றுப்போனது. ஆனாலும், கடந்த
31-ம் தேதி அன்று தேர்தல் ஆணையத்தில், 820 கோடி ரூபாயை தனது தேர்தல் செலவாக காங்கிரஸ் கட்சி காட்டியுள்ளது. இது தேசிய அளவில் அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கடந்த மே மாதத்தில் காங்கிரஸின் சமூக வலைத்தள ஊடக தலைவரும், நடிகையுமான திவ்யா ஸ்பந்தனா,  ’காங்கிரஸ் கட்சியில் பணமே இல்லை’ என்று தெரிவித்திருந்த நிலையில்தான், இப்போது காங்கிரஸ் கட்சியின் சார்பில், கடந்த பாராளுமன்றத் தேர்தலுக்காக, ரூபாய் 820 கோடியளவுக்கு தேர்தல் செலவு செய்யப்பட்டது என்கிற கணக்கு காட்டப்பட்டிருக்கிறது.  இது பலரையும் ஆச்சர்யத்தில் மூழ்கடித்திருக்கிறது.

இப்போது ஆளும் கட்சியாக இருக்கும் பா.ஜ.க.வோ, இதுவரை கடந்த பாராளுமன்றத் தேர்தல் செலவு குறித்து தேர்தல் ஆணையத்தில் கணக்கு ஒப்படைக்கவில்லை.    கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்றத் பொதுத் தேர்தலுக்கான தேர்தல் செலவாக  பா.ஜ.க. கட்சி 714 கோடி ரூபாய் செலவு செய்ததாக கணக்கு காட்டியிருந்தது என்பதும் கவனிக்கத்தக்கது. அந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 516 கோடி செலவு செய்ததாக கணக்கு காட்டியிருந்தது.

இதுவரை பா.ஜ.க.விலிருந்து சமீபத்திய பாராளுமன்றத் தேர்தலுக்கான கணக்கு ஒப்படைக்கவில்லையென்றாலும், அந்தத் தொகை நிச்சயம் காங்கிரஸ் கட்சியின் 820 கோடி ரூபாயைவிட அதிகமாகத்தான் இருக்கும். இரண்டாவது முறையாகவும் ஆட்சிப் பொறுப்புக்கு வரக்கூடிய ஒரு தேசிய கட்சியின் தேர்தல் செலவு என்பது சென்றமுறை செய்யப்பட்ட பாராளுமன்றத் தேர்தல் செலவைவிட அதிகமாக இருப்பதில் ஆச்சர்யப்பட்ட ஒன்றுமில்லை. அதேநேரத்தில் எதிர்க் கட்சியாக இருந்து தேர்தலை சந்தித்த காங்கிரஸுக்கும், அதுவும் அதன் ஊடகத் தலைவர் ‘காங்கிரஸ் கட்சியில் பணமே இல்லை’ என்று கூறியபிறகு, இவ்வளவு பெரிய தொகை தேர்தல் செலவாக காட்டப்பட்டிருப்பது என்பது இயல்பாகவே பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது என்கிற விவாதங்களும் அரசியல் வட்டாரங்களில் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

 

எஸ்.எஸ்.நந்தன்