எனக்கு காவி நிறம் பூசாதீர்கள் – ரஜினி அதிரடி!

slider சினிமா
rajinikanth-ரஜினிகாந்த்

நடிகர் கமல்ஹாசனின் 65-வது பிறந்தநாள் நேற்று (7.11.2019) அவரது பிறந்த ஊரான பரமக்குடியில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மேலும், தனது தந்தை சீனிவாசனுக்கு சிலையமைத்து, தன் சொந்த ஊரில் அதனை திறந்தும் வைத்தார் கமல். இதன் தொடர்ச்சியாக இன்று (8.11.2019) சென்னை ஆழ்வார்பேட்டையில் தனது சொந்த நிறுவனமான ராஜ்கமல் அலுவலகத்தில், தனது கலையுலக குருவான கே.பாலச்சந்தர் சிலையை அமைத்திருந்தார் கமல். அந்தச் சிலையை இன்று ரஜினியும், கமலும் திறந்து வைத்தனர்.

மறைந்த இயக்குநர் கே.பாலச்சந்தர் சிலையை திறந்து வைத்த பின்னர் இந்த விழாவில் ரஜினி பேசினார். அப்போது ரஜினி, “கமலின் கலையுலக தகப்பனார், என்னுடைய குரு கே.பாலசந்தர் சிலையை ராஜ்கமல் அலுவலகத்தில் திறந்து வைத்திருக்கிறார் கமல். அழகான, பிரம்மாண்டமான அலுவலகம். கமல் அரசியலுக்கு வந்தால் கூட தாய் வீடான சினிமாவை விடமாட்டார். கமலுக்கு கலை உயிர் என்பதால், எங்கு சென்றாலும் அதை மறக்கமாட்டார். ராஜ்கமல் தயாரிப்பில் எனக்கு மிகவும் பிடித்தது  ‘அபூர்வ சகோதரர்கள்’. இந்தப் படத்தை இரவு 2 மணிக்கு பார்த்து முடித்து கமல் வீட்டிற்குச் சென்று, தூங்கிக்கொண்டிருந்த அவரை எழுப்பி, கைகொடுத்து வாழ்த்தினேன். அவர்கள் தயாரித்த அடுத்த படமான  ‘தேவர் மகன்’ ஒரு காவியம். கமல் எவ்வளவு சிந்தனை செய்து அந்த படத்தை எடுத்திருப்பார். எனக்கு போர் அடித்தால் அடிக்கடி  ‘காட்பாதர்’,  ‘திருவிளையாடல்’,  ‘ஹேராம்’ படங்களை பார்ப்பேன். இதுவரை  ‘ஹேராம்’ படத்தை 30, 40 முறை பார்த்திருப்பேன். கே.பாலசந்தர் சிலையை திறந்தவுடன் என்னால் வார்த்தைகளைச் சொல்ல முடியவில்லை. பெரிய மகான் நம்முடன் இல்லை. சிலையைப் பார்க்கும் போது அவருடன் நான் இருந்த ஞாபகங்கள் கண்முன் வந்து நிற்கிறது.

‘தமிழ் மட்டும் கற்றுக் கொள். நான் உன்னை எங்கு கொண்டுபோய் உட்கார வைக்கிறேன் பார்’ என்று கே.பாலசந்தர் என்னிடம் சொன்னார். அவருக்கு மிகவும் பிடித்த குழந்தை கமல். அவர் மீது அபார பிரியம், தூரத்தில் இருந்து கமலை ரசித்துக் கொண்டே இருப்பார்” என்று கூறினார்.

இதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ரஜினி, “என்னை பா.ஜ.க. தலைவர் என்பதுபோல நிறுவ முயற்சி நடக்கிறது. பா.ஜ.க.வின் நிறத்தை எனக்குப் பூச முயற்சி நடைபெறுகிறது. திருவள்ளூவர் நாத்திகர் இல்லை. அவர் ஆத்திகர். திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசியது போல எனக்கும் பூச முயற்சி நடக்கிறது. இந்த காவிக்கு திருவள்ளுவரும் சிக்க மாட்டார்.. நானும் சிக்க மாட்டேன்” என்று கூறினார்.

நடிகர் ரஜினியின் இந்தப் பேச்சு இப்போது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பையும், விவாதத்தையும் கிளப்பியுள்ள நிலையில், இன்னும் ரஜினியின் அரசியல் நிலைப்பாடு பெரும் குழப்பமாக இருக்கிறது என்றும் ஒருசாரார் பேசத் தொடங்கியுள்ளனர்.

  • எம்.டி.ஆர். ஸ்ரீதர்