அந்தப் பதவிக்காக அ.தி.மு.க.வில் பலத்த போட்டி!

slider அரசியல்
ரிப்பன் பில்டிங்

தமிழகத்தில் தள்ளிப்போய்க் கொண்டிருந்த உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இதற்காக தமிழகத்திலுள்ள முக்கியக் கட்சிகள் அனைத்தும் தயாராகி வருகின்றன. இந்த உள்ளாட்சித் தேர்தல் என்பது ஆளும் கட்சியான அ.தி.மு.க.வுக்கு ரொம்பவும் முக்கியத்துவம் கொண்டது. அதனால், கட்சிக்குள் எந்தவித பிரச்னையும் ஏற்படாமல் இந்த தேர்தலை நடத்திடவே இரட்டை தலைமை விரும்புகிறது. ஆனால், கள யதார்த்தம் வேறுமாதிரியாக இருக்கிறது என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

குறிப்பாக, தமிழகத்தின் தலைநகரான சென்னை மேயர் பதவிக்கு ஆளும் கட்சியான அ.தி.மு.க.வுக்குள் பெரும் போட்டியே ஏற்பட்டிருக்கிறதாம். சென்னை மேயர் பதவியை குறிவைத்து அ.தி.மு.க.வின் முக்கிய பிரமுகர்களான நா.பாலகங்கா, வெங்கடேஷ் பாபு,     ஜே.சி.பி. பிரபாகர், பா.வளர்மதி, கோகுல இந்திரா, முன்னாள் எம்.பி. ஜெயவர்தன் ஆகியோர் தலைமையிடம் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்களாம்.

இவர்களில் கோகுல இந்திரா ராஜ்ய சபா சீட்டுக்காக அதிகம் முயற்சித்தவர். எனவே, “அந்தப் பதவிதான் கிடைக்கவில்லை சென்னை மேயர் பதவியை பெண்களுக்கு 50 சதவீத அடிப்படையில் எனக்கு ஒதுக்க வேண்டும்” என்றும், அமைச்சர் ஜெயக்குமார் தனது மகனும், முன்னாள் எம்.பி.யுமான ஜெயவர்தனை எப்படியும் சென்னை மேயர் வேட்பாளராக்கி விடுவது என்பதில் மும்முரமாக இருக்கிறார் என்றும், ஆகவே, இந்த விவகாரம் இரட்டை தலைமைக்கு மிகப்பெரிய சிக்கலை தந்துள்ளது என்கிறார் அ.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள் ஒருவர்.

இது ஒரு பக்கம் என்றால், கூட்டணி கட்சிகளான பா.ஜ.க., தே.மு.தி.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளும் இதே சென்னையைதான் பெரும்பாலும் குறி வைத்திருப்பதால், அவர்கள் தரும் நெருக்கடியையும் சமாளிக்க முடியாமல் இரட்டை தலைமை தவித்து வருவதாகவும் கூட ஒரு தகவல் தற்போது கசிந்துள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை பொறுத்தவரை சென்னை மாநகராட்சியை திரும்பவும் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்கள். இதனால்,  தி.மு.க.வுக்கு சமமான வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று  இரட்டை தலைமை ரொம்பவே யோசித்து வருவதுடன், இது குறித்து உளவுத்துறையிடம் ரிப்போர்ட் கேட்டும், மேலும், மக்கள் செல்வாக்குள்ள ஒருவரை தான் சென்னை மேயர் பதவியின் அ.தி.மு.க. வேட்பாளராக இரட்டை தலைமை தேர்வு செய்யும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

  • நிமலன்