அருணா இன் வியன்னா புத்தக விமர்சனம் – aruna in vienna book review

கட்டுரைகள்

கிண்டில் பதிப்பில் முதல் வாசிப்பு இதுதான். வாசித்தலின் பசிக்குத் தீனி போடும் விறுவிறுப்பான ஒரு பாக்கெட் நாவலின் அடுத்தடுத்த அத்தியாயங்கள் எப்படி நகர்ந்து செல்லுமோ, அதைப்போன்றே பயணிக்கின்றன  ‘அருணா இன் வியன்னா’ பயணக் கட்டுரை. (அல்ல, அல்ல..) பயண நாவல். ஆம், ஒரு பயணக் கட்டுரையை ஒரு நாவலைப் போன்று எழுதியிருக்கிறார் அருணாராஜ்.

 

Aruna in Vienna

மூன்று பெண்கள் சேர்ந்து உற்சவ மூர்த்திகளாய் புடாபெஸ்ட், வியன்னா, ப்ராக் ஆகிய மூன்று ஐரோப்பிய நகரங்களில் பத்து நாட்கள் உலாவந்ததையும், அங்கே கண்டு, கேட்டு, உணர்ந்த விஷயங்களையும் தனது அழகான எழுத்து நடையால் பரிமாறியிக்கிறார அருணாராஜ்.

பெரும்பாலும் பயணக் கட்டுரைகள் என்பது, சலிப்பு தட்டும் விதமாக புள்ளிவிபரங்களின் தொகுப்புகளாவே வெளிவந்திருக்கின்றன. ஆனால், ‘அருணா இன் வியன்னா’வில் புள்ளிவிபரங்களுக்கு முற்றுப் புள்ளி வைத்துவிட்டு, மாற்றுப் பாதையில் எழுத்துகள் பயணிப்பது, வாசகனுக்கு கூட்டாஞ்சோறு.

முத்தக் காட்சி பற்றியும்,  ‘செக்ஸ் மியூசியம்’ பற்றியும் வெளிப்படையாக எழுதியிருக்கிறார். அனுபவங்களை சென்ஸார் செய்யாமல், இப்படி எழுத ஆண் எழுத்தாளர்களே தயங்குவார்கள் எனும்போது, இவர் எழுத்தின் வெளிப்படைத் தன்மை வியக்க வைக்கிறது. மட்டுமல்ல, அந்தப் பக்கங்களை ‘ஒன்ஸ்மோர்’ செய்யவும் தூண்டுகிறது.

“தூண்டுதல் வாசிப்பிற்கின்பம் அவ்வின்பம் பக்கத்தை

ஒன்ஸ்மோர் படிக்கத் தூண்டும்.”

மேலும், ஐரோப்பிய மனிதர்கள் பற்றி மட்டுமல்ல, அங்கு வாழும் புறாக்கள், நாய் பற்றியெல்லாம் கவனித்து எழுதியிருக்கிறார்.

ஒரு புத்தகத்தை கையில் விரித்து வைத்துக்கொண்டு, ஒவ்வொரு பக்கமாக வாசித்து முடித்து, அடுத்த பக்கத்தைத் திருப்பி, தொடர்ந்து வாசிக்கொண்டே போகையில், பிடித்த வரிகளை பென்சிலைக் கொண்டு அடிக்கோடிட்டு படிக்கும் உணர்வு இந்த கிண்டில் பதிப்பில் மிஸ்ஸிங். இன்னும் கூடுதலான புகைப்படங்களை இணைத்திருந்தால், எழுத்தில் புரிந்ததை புகைப்படங்கள் மூலம் அறிந்துகொள்ளவும் செய்திருக்கலாம்.

மொத்தம் பத்தொன்பது அத்தியாயங்கள். ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒருவித புது ரசனையை நமக்குள் ஊடுருவச் செய்கிறார் தனது எழுத்தின் வழியாக. மேலும், எல்லாப் பக்கங்களிலும் தனக்கே உரிய நையாண்டி பாஷை வசனங்கள் மூலம் நம்மை சிரிக்கவும் வைக்கிறார். சில இடங்களில் சிந்திக்கவும் வைக்கிறார்.

ஒரு பயணத்தின் அனுபவத்தை, கட்டுரை வடிவில் வழங்காமல், நாவல் வடிவிலும் பரிமாற முடியும் என்பதற்கு  ‘அருணா இன் வியன்னா’ அருமையான சான்று.

-பாலமுருகன் செந்தூர்பாண்டியன்