அண்ணனும் தம்பியும் மீண்டும் இணைகிறார்கள்!

slider சினிமா

இப்போது ஓடிக் கொண்டிருக்கும் ‘அசுரன்’ படத்தில் தனுஷின் நடிப்பு பலதரப்பு மக்களையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது. இந்தளவுக்கு நடிப்பில் பெயர் பெற்றுள்ள தனுஷை திரையுலகுக்கு அறிமுகப்படுத்தியவர் அவரது அண்ணனும், இயக்குநருமான செல்வராகவன்தான். தனது முதல் படமான ‘துள்ளுவதோ இளமை’ படத்தில் தனுஷை ஹீரோவாக அறிமுகப்படுத்தினார்.

இதன்பிறகு ‘காதல் கொண்டேன்’,  ‘புதுப்பேட்டை’  ‘மயக்கம் என்ன’ படங்களில் தனுஷை வைத்து இயக்கியிருந்தார் செல்வராகவன். இந்தப் படங்களுக்கு பிறகு தனுஷுக்கும்- செல்வராகவனுக்கும் ஒரு நீண்ட இடைவெளி விழுந்தது.

சமீபத்தில் நடிகர் சூர்யாவை வைத்து  ‘என்.ஜி.கே.’ படத்தை இயக்கியிருந்தார் செல்வராகவன். இதற்கு அடுத்ததாக தனுஷை வைத்து மீண்டும் செல்வராகவன் படம் இயக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியானது.

இந்நிலையில், தனது அடுத்த படத்தின் வேலைகள் துவங்கியிருப்பதாக செல்வராகவன், தனது சமூக வலைத்தள பக்கத்தில் தற்போது பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவைப் பார்த்த பலரும் தனுஷ் படம் தொடங்கிவிட்டதாக கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.

அனேகமாக, செல்வராகவன் தனுஷை வைத்து இயக்கும் புதிய படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகவும் அதிக வாய்ப்பிருப்பதாக தனுஷுக்கு நெருக்கமான வட்டாரங்களிலிருந்து தகவல் கசிந்திருக்கிறது.