மய்யத்திலிருந்து தாமரைக்கு தாவிய பிரபலங்கள்!

slider அரசியல்

 

leader kamal

கடந்த சில மாதங்களாக மாற்று சக்தியாக தமிழகத்தில் சொல்லப்பட்ட அ.ம.மு.க.விலிருந்து அ.தி.மு.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் முக்கிய பிரபலங்கள் தாவிக் கொண்டிருப்பது நடந்து வருகிறது. இதில் இப்போது இன்னொரு மாற்று சக்தியாக சொல்லப்பட்ட கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து கடந்த பாராளுமன்றத் தேர்தலில் மூன்று முக்கிய தொகுதிகளில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பா.ஜ.க.வில் இணைந்திருப்பது நடந்திருக்கிறது. இது கமல் கட்சிக்கு அதிர்ச்சியையும், தமிழக அரசியலில் பெரும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிட்ட ஸ்ரீ காருண்யாவும், சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட ரவியும், அரக்கோணம் தொகுதியில் போட்டியிட்ட ராஜேந்திரனும் தான், சமீபத்தில் பா.ஜ.க.வில் சேர்ந்த அந்த மூன்று பிரபலங்கள்.

மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தது பற்றி கிருஷ்ணகிரி வேட்பாளராக போட்டியிட்ட ஸ்ரீ காருண்யா கூறுகையில், ‘’கமல் மீது எந்தப் புகாரையும் கூற விரும்பவில்லை, அவர் தான் அரசியலில் அறிமுகத்தை கொடுத்தார். ஆனால், அங்கிருக்கக்கூடிய சிலரின் நடவடிக்கைகள் எனக்குப் பிடிக்கவில்லை. உடன்பாடு  இல்லாமல் அவர்களுடன் சேர்ந்து பயணிப்பது சரியாக இருக்காது என்பதால் இப்போது அங்கிருந்து விலகி பாஜகவில் இணைந்திருக்கிறேன். கமல் சாருக்கு அடுத்தக் கட்டமாக உள்ள அனைத்து  நிர்வாகிகளும் முறையாக செயல்படவில்லை. அவருக்கு நல்ல டீம் அமையவில்லை என்பதுதான் எனக்கு வருத்தம். கட்சியில் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என நினைப்பவர்களுக்கு கமலுடன் இருப்பவர்கள் நிறைய தடைகள் விதிக்கிறார்கள். இதைப்பற்றி நான் இன்னும் பேச விரும்பவில்லை. மக்கள் நீதி மய்யத்தில் இருந்து வெளியேறுவது என முடிவெடுத்தவுடன் பா.ஜ.க.வில் தான் நான் இணைய விரும்பினேன். ஏனென்றால் அந்தக் கட்சியில் தான் ஊழல் செய்யாத தலைவர்கள் இருக்கின்றனர். அதனால் நான் யோசித்து முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்து அந்தக் கட்சியில் இணைந்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகிய ஒருவர் தலைவர் கமல் மீது விமர்சனம் வைக்காமல், அவருக்கு அடுத்த நிலையில் உள்ளவர்கள் மீது கடும் விமர்சனம் வைத்திருக்கிறார். இது ஏறக்குறைய அ.ம.மு.க.விலிருந்து விலகியபோது சில பிரமுகர்கள் கூறியது போன்றே உள்ளது. மாற்று சக்தியாக கணிக்கப்பட்ட இந்த இரண்டு கட்சியிலிருந்து வெளியேறுபவர்கள் கட்சியின் தலைமை நிர்வாகம் மீது பகிரங்கமாக குற்றச்சாட்டுகளை வைக்கிறார்கள். ஆகவே, முதலில் இந்த இரண்டு கட்சித் தலைவர்களும் மக்களிடத்திலே தங்கள் கட்சியை பலப்படுத்துவதற்கு முன்பாக, தங்கள் கட்சியின் நிர்வாகத்தை சீர்படுத்தி பலப்படுத்துவதே மேலும் பின்னடைவுகள் ஏற்படாமல் இருப்பதற்கு வழிவகுக்கும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

 

எம்.டி.ஆர்.ஸ்ரீதர்